நாண்மகிழிருக்கை
நாண்மகிழிருக்கை என்பதற்குத் தமிழ் அகராதி அரசனது தர்பார், நாளோலக்கம் என்று
பொருள் கூறுகின்றது. இது சங்க இலக்கியங்களில் நாளவை, நாளிக்கை, கலிமகிழ், தேர்விசிருக்கை,
நறவு மகிழிருக்கை என்று கூறப்பட்டுள்ளது. நாண்மகிழிருக்கையை உ.வே.சா ”நாண்மகிழிருக்கை – காலையில் யாவரும்
தன்னைக் காணும்படி காட்சிக்கு எளியனாய் வீற்றிருக்கை, இது நாளவையெனவும் கூறப்படும்”
என்று விளக்குகிறார். நாள்தோறும் மகிழ்ந்திருக்கக் கூடிய இருக்கை நாண்மகிழிருக்கை
எனப்படும். இதில் பெருநில மன்னர்கள், குறுநில மன்னர்கள் பெருஞ்செல்வர்கள் முதலியோர்
தலைமை பெறுகின்றனர்.
நாண்மகிழிருக்கை
நாண்மகிழிருக்கை நாள்தோறும் எந்த நேரத்தில்
நடைபெற்றது என்பது ஆராயப்பட வேண்டியது. இறையனார் களவியல் உரைக்காரர் தலைமகன் ஒழுகலாற்றைக்
கூறும் பொழுது, தலைமகனால் தலைநின்று ஒழுகப்படுவன அறம், பொருள், காமம் என மூன்று,
இம்மூன்றினையும் ஒரு பகலை மூன்று கூறிட்டு, முதற்கட் பத்து நாளிகையும் அறத்தோடு பட்டுச்
செல்லும். இடையன பத்து நாளிகையும் அருத்தத்தொடு பட்டுச் செல்லும். கடையன பத்து நாளிகையும்
காமத்தொடு பட்டுச் செல்லும்.” என்பர். அருத்தம் என்பது இரவலர்க்கு ஈதல், இறையும்
முறையும் கேட்டல் ஆகும். இடையன பத்து நாளிகையானது பத்து மணி முதல் இரண்டு மணி வரையிலான
இடைப்பட்ட காலம் ஆகும். ஒரு நாளுள் முதலன
பத்து நாளிகையும் அறத்தின் வழியொழுகிப் பின்பத்து நாழிகையும் இறையின் முறைமை கேட்டுச்
செய்த பொருளைப் பரிசிலர்க்குக் கொடுத்து மகிழ்ந்திருத்தலால் கடும்பகல் தேர்வீசிருக்கை
யென்றார் என்று உறுதிப்படுத்துவர். இவற்றால் நாண்மகிழிருக்கை காலை, பகல், இரவு என்ற
வேறுபாடின்றி அவரவர் விருப்பத்திற்கேற்ப நடைபெற்றுள்ளது என்பது புலனாகும்.
நாளிமகிருக்கை
நடைபெறும் இடங்கள்
நாண்மகிழிருக்கை பெரும்பாலும் அரசனது நாளோலக்க மண்டபத்தின் கண்ணே நடைபெறும்.
மேலும் பாசறையிலும் மகிழ்ந்திருத்தலைக் கபிலர் பாடுகின்றார். செல்வகடுங்கோ வாழியாதன்,
ஒளி பொருந்திய வாட்படையையும், வன்மைமிக்க களிறுகளையும் உடைய புலால் நாற்றம் பொருந்திய
பாசறைக்கண் ஆரவாரமிக்க திருவோலக்கத்தில் வீற்றிருக்கின்றான். அங்கு பாடினி, முழங்கும்
முழவின் தாளத்திற்கேற்ப வெறுங் கையை அசைத்து அவனது வேற்படையைப் பாடுகின்றாள்.
ஆய் என்னும் மன்னன் மன்றத்தின்கண் வந்த பரிசிலர்க்குக்
கன்றுடன் யானைகளை அணியணியாகக் கொடுக்கின்றான்(புறநா.135). இங்கு ஆய் மன்றத்தின் கண்
வீற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தலைவன் ஒருவன் வெள்ளாட்டுப் பிழுக்கைகள்
பரந்துகிடக்கின்ற பந்தர் கீழ் வீற்றிருக்கின்றான். இடையன் சிறிய சுடருடைய விளக்கைக்
கொளுத்தி நிற்க, அவனைப் பாணர்கள் சூழ்ந்து நிற்கின்றனர். (புறநா.324)
இவற்றால் நாண்மகிழிருக்கை அரசனது நாளோலக்க
மண்டபம், பாசறை, மன்றம், ஊர், பந்தல் போன்ற இடங்களில் நடந்தமை புலனாகின்றது.
நடைமுறை வாழ்க்கையில்
நாண்மகிழிருக்கை
அரசர்கள், குறுநில மன்னர்கள், செல்வந்தர்கள்,
தலைவர்கள் ஆகியோரது நடைமுறை வாழ்வில் நாண்மிகிழிருக்கை
சிறப்பிடம் பெறுகிறது. அவர்கள் நாள்தோறும் கள்ளுண்டு மகிழ்ந்து இரவலர்க்குக் கள்ளும்
பரிசுப் பொருட்களும் அளித்து மகிழ்ந்திருக்கும் களமாக நாண்மிகிழிருக்கை விளங்குகின்றது.கலைஞர்களான
பாணர், பொருநர், விறலியர், புரவலர்களிடம் சென்று பரிசில் பெறுவதற்குரிய களமாகவும் நாண்மகிழிருக்கை
உள்ளது.
அக்கால நடைமுறை வாழ்வில் அரசர்களும், குறுநில
மன்னர்களும், தலைவர்களும் இரவலர்க்கு வரையாது வழங்குவதைப் பெருமையாகக் கருதியுள்ளனர்.
அவர்களது வாழ்வில் தினமுமோ அல்லது பல காலமுமோ நடைபெற்றமையால் புலவர்கள் அவர்களைச் சிறப்பிக்க,
நாண்மகிழிருக்கையின் சிறப்பை எடுத்தியம்புகின்றனர். நாண்மகிழிருக்கையின் சிறப்பை எடுத்தியம்புகின்றனர்.
நாண்மகிழிருக்கை அவர்களது ஈகை, புகழ், கொடை, செல்வச் சிறப்பு முதலான பண்பு நலன்களையெல்லாம்
குறிக்கும் குறியீடாக விளங்குகின்றது.
இந்நாண்மகிழிருக்கையை இனக்குழு மக்கள் வாழ்க்கையின்
எச்சமாகக் கருதுவர். ”இனக்குழு மக்கள் உணவு சேகரித்தல் நிலையிலிருந்து உணவு உற்பத்தி
நிலைக்கு மாறிய போது பகைக் குழுவை எதிர்த்துத் தற்காத்துக் கொள்ளத் திரண்டனர். அப்போது
அவர்கள் மது அருந்தினர். அதனை இருக்கை, நாளிருக்கை, மகிழ், மகிழிருக்கை, நறவு மகிழிருக்கை,
நாள் மகிழிருக்கை என்றனர்” என்பர்.
நிறைவாக,
சங்க காலத்தில் மன்னர்கள், குறுநில மன்னர்கள்,
பெருஞ் செல்வர்கள், தலைவர்கள் ஆகியோரது வாழ்வில் நாண்மிகிழிருக்கை சிறப்பிடம் பெற்றுள்ளது.
அவர்கள் நாள்தோறும் கள்ளுண்டு, இரவலர்க்குக் கள்ளும், பரிசிலும் இந்நாண்மகிழிருக்கையில்
வழங்கியுள்ளனர். நாண்மகிழிருக்கை இனக்குழு மக்கள் வாழ்வில் எச்சமாகவும் வளர்ச்சியாகவும்
தெரிகிறது. நடைமறை வாழ்வில் புரவலர்கள் பொழுது போக்கி மகிழும் களமாகவும், இரவலர்கள்
பரிசில் களமாகவும் உள்ளது.
Comments
Post a Comment