பண்டைத்
தமிழர்களின்
வழிபாட்டு வகைகளும் – உணவு முறைகளும்
பண்டைத் தமிழர்களின் தொல் சமயம் பல்வேறு வகைகளாக இருந்துள்ளன. ஆவி வழிபாடு,
உயிரிப்பாற்றல் வழிபாடு(animatism), கானுறை தெய்வங்கள், மலையுறை தெய்வங்கள், நீருறை
தெய்வங்கள், மரத்தில் உறையும் தெய்வங்கள், கந்து ஆகியவற்றின் வழிபாடு, இயற்கை வழிபாடு,
எனத் தொல் தமிழரின் வழிபாட்டு முறைகள் பன்முக நிலையில் பரிணமித்துள்ளன. இவற்றோடு பழையோள்,
காடமர் செல்வி, காடுகிழாள், கொற்றவை என விரிந்தன.
பின்னர் நிறுவனச் சமயங்களாக வடிவம் பெற்றன. ஆசீவகம், சாக்தம், கௌமாரம், சமணம்,
பௌத்தம், சைவம், வைணவம் எனத் தமிழர்களின் சமய வாழ்வு தொடர்ந்து மாறி வந்துள்ளது.
இதில் தொடர்ச்சியையும் மாற்றத்தையும் காண முடிகிறது. சமயத்தின் செல்வாக்கினை உணவு உள்ளிட்ட
பண்பாட்டின் மற்ற கூறுகளில் காண முடிகிறது. ஆக, தமிழர்களின் உணவு முறையானது அதன் நீண்ட
நெடிய சமய வரலாற்றைப் போன்றே ஒரு தொடர்ச்சியான மரபைக் கொண்டிருக்கிறது.
உணவு முறைகள்
பண்டைத் தமிழர்கள் உணவைப் பல பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர். உணா, வல்சி,
உண்டி, ஓதனம், அசனம், பதம், இரை, ஆகாரம், உறை, ஊட்டம் எனப் பத்தும் உணவின் பிற
பெயர்களாகப் பிங்கலந்தை கூறுகிறது. இவையின்றி விழாக்களின்போதும் விசேட நாட்களின் போதும்
பலவகையான பதார்த்தங்களோடு செய்யப்படும் ‘பேருண்டி’ என்பதும் வழக்கிலிருந்துள்ளது. மேலும்,
கொண்டி, புகா, மிசை எனும் பெயர்களாலும் உணவு சுட்டப் பெற்றுள்ளது. இதன்மூலம்
உணவென்பது பசியாறுவதற்கான உயிரியல் கூறாக அல்லாமல், சமூக வினையாற்றலுக்கு உரியதாகப்
பரிணமித்துவிட்டதைக் காணலாம்.
சமைத்தல் – உண்ணுதல், சைவம் – வைணவம்,
சாதாரண உணவு – விருந்து உணவு, விருப்பம் – விலக்கு, புனிதமானது – புனிதமற்றது, என்பன
போன்ற எண்ணற்ற கூறுகள் உணவு முறையின் உலகளாவிய பண்புகளாக இருப்பதைக் காண்கிறோம். ஒவ்வொரு
சமூகத்தின் உணவுமுறையானது பொதுத் தன்மைகளைக் கொண்டிருந்தாலும் அதனதன் தனித்துவத்தைக்
காலங்காலமாக நிலைநிறுத்தியும் வந்துள்ளது. தமிழ்ச் சமூகம் போன்ற நீண்ட நெடிய பழமைச்
சமூகங்களில் உணவு வரலாறும், உணவுப் பண்பாடும் தனித்துவமான மரபுடையது.
Comments
Post a Comment