திதிகள்
சோதிடச் சாத்திரத்தில் திதிகள் என்பது சூரியனுக்கும்
சந்திரனுக்கும் இடைப்பட்டத் தூரத்தினைக் குறிக்கின்றன. ராசி மண்டலத்தில் 360 பாகைகள்
உள்ளன. சூரியனும் சந்திரனும் ஒரே நட்சத்திரப் புள்ளியில் சஞ்சரிக்கும் நாள் அமாவாசை
என்றழைக்கப்படுகிறது. திதி என்பது சோதிடக்கலையினைச் சார்ந்த ஒரு கலைச் சொல்லாகும்.
பிற்காலத்தில் ஒரு சமுதாயச் சடங்கிற்குக் கூறப்பட்டது. ஒரு மாதத்தில் 30 நாட்களுள்ளன.
பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம் எனப்படுகின்றது. ஆக ஒரு பட்சத்தில் 180 பாகைகள்
உள்ளன. ஒரு நாளுக்குரிய அசைவு பாகைகள் 12 ஆகின்றன.
சூரியனிடமிருந்து சந்திரன் 12 பாகைகள் இடைவெளியிலிருந்தால் அது பிரதமை திதி
அல்லது முதல் நாள் எனப்படுகின்றது. வடமொழியில் ஒரு நாளினை திதி, தின, தினம் என்று கூறுகின்றனர்.
இதன்படி 90 பாகைகள் விலகியிருப்பது அட்டமி திதியாகிய எட்டாவது நாள் அல்லது அட்டமி நாள்
எனப்படுகின்றது. இந்நாளினை இலக்கியம் எண்நாள் என்று குறிப்பிடப் படுகின்றது. எனவே இதனை
ஒரு பட்சத்தின் நடுநாள் எனலாம். இந்த நுட்பமானச் சோதிட நுணுக்கத்தைச் சங்கபுலவர்கள்
அறிந்திருந்தனர்.
சங்க இலக்கியங்களில் பல இடங்களில் நடு நாள் என்ற சொல் பயின்று வந்துள்ளது. இது
இரவுப் பொழுதினைக் குறிப்பதாகக் கருதப்பட்டு வருகின்றது. ஒரு நாளின் ஆரம்பம் மேல் நாட்டினர்
முறைப்படி நடுஇரவு 12 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் நடு இரவு 12 மணியுடன் முடிவதாக நடைமுறையில்
உள்ளது. ஆனால் உண்மையில் நாள் ஆரம்பத்தை சூரிய உதயத்திலிருந்து மறுநாள் சூரிய உதயம்
வரை கணக்கிடுவது கீழைநாட்டு மரபாக உள்ளது. குறிப்பாக இந்திய சமுதாயத்தின் இந்த சூரியோத
அடிப்படையில் தான் நாட்கள் எண்ணப்படுகின்றன.
சோதிடச் சாத்திரத்தில் சூர்யோதயம் முதலாகவே நாள் துவக்கம் கணிக்கப்படுகின்றது.
இதன்படி நடுநாள் என்பது மாலை சூரிய அத்தமனத்தைக் குறிக்கும். மேல்நாட்டு முறைப்படி
கவனித்தாலும் நடுநாள் என்பது பகல் உச்சிப் பொழுதினைக் குறிக்கும். நடுநாள் என்ற சொல்
இரவுப்பொழுதினைக் குறிப்பதற்கு வாய்ப்பில்லை என்பது திண்ணம்.
சோதிடச் சாத்திரப்படி நடுநாள் என்பது அட்டமி திதியினைக் குறிக்கின்றது. இந்த
அட்டமிநாள் என்ற நடுநாள் குறித்து நற்றிணையில் கூறுப்பட்டுள்ளச் செய்திகள் இங்கு ஆராயப்பட்டுள்ளன.
நற்றிணை குறிஞ்சித்திணையில் பெயர் குறிப்பிடப்படாத ஒரு புலவர் முன்னியது முடிந்தனம்
ஆயின் என்று துவங்கிடும் பாடலில்,
”அணங்குடை அரவின் ஆர் இருள் நடுநாள்” (நற்.168)
என்றும்,
”நடுநாள் வருதி நோகோ யானெ” (நற். 257)
“ மழை அமைந்த உற்ற மால் இருள் நடுநாள்”
(நற். 281)
”மயங்கு இருள் நடுநாள்” (நற். 319)
என்ற நற்றிணை
பாடல்களின் வழி நடுநாள் என்பது அட்டமி திதி நாளைக் குறிப்பதாகக் கருத இடமுள்ளது.
Comments
Post a Comment