அகலிகை
வச்சிரப்படையுடைய இந்திரன் கௌதம முனிவன் மனைவியான
அகலிகையின் அழகைக் கண்டான். அவன் உள்ளத்தில் மோகவெறி மூண்டது. எப்படியும் அவளை அடைய உறுதி கொண்டான். அகலிகை தனித்திருக்கும் காலத்தை எதிர்பார்த்தான். அவன் நினைத்தவாறு காலம்
அமையவில்லை. சூழ்ச்சியொன்று செய்து முனிவனை வெளியில் செல்லச் செய்தான்.(கௌதம முனிவன்
கோழி கூவியதும் எழுந்து நீராடச் செல்லும் பழக்கம் உடையான் என்பதைத் தேவர்கோன் அறிந்தான்.
நள்ளிரவில் கோழிபோல் கூவினான். ஒலி கேட்ட முனிவன் வெளியில் சென்றான். இந்திரன் உட்புகுந்தான்
என்பர்.)
இந்திரன் பொய்யில்லா உள்ளமுடைய கௌதமன் வடிவத்தைக் கொண்டான். ஆசிரமத்தினுட் புக்கான்.
அகலிகையுடன் காம இன்பம் துய்த்தான். (தன்னைக் கூடியவன் தன் கணவன் அல்லன் இந்திரனே என்பதை
அறிந்தாள் அகலிகை. ஆயினும் இந்திரன் செயலுக்கு இணங்கி அகலிகை மகிழ்ந்திருப்பதாக முதல்
நூல் கூறுவதைக் கம்பர் நுட்பமாக உணர்த்துகின்றார்). துய்த்த பொழுது ‘உணர்ந்தனள் உணர்ந்த
பின்னும் தக்கதன்று என்னத் தேறாள் தாழ்ந்தனள் இருந்தாள்’ வெளியில் சென்ற முனிவன் சிறிது
நேரத்தில் பொழுது புலரவில்லை. நள்ளிரவு தான் என்பதை அறிந்து திரும்பினான். தன்னை ஆசிரமத்தை
விட்டு வெளியேற்ற இந்திரன் செய்த சூழ்ச்சியையும் ஞானக் கண்ணால் அறிந்தான்.
திரிபுரம் எரித்த முக்கண்ணன் போல் மூண்ட சினத்தினனாய் விரைந்து வந்தான். ஆசிரமத்திற்குள்
நுழைந்தக் கணவனைக் கண்ட அளவில், நெடுங்காலம் உலகில் நிற்க தக்க பழி பூண்ட அகலிகை அஞ்சி
நடுங்கி அசையாது சிலைபோல் நின்றாள். புரந்தரன் பூனையாக மாறி அவ்விடம் விட்டும் நழுவினான்.
தீவிழி சிந்த நோக்கிய தவமுனி, சுடுசரம் அனைய சொல்லால், ”ஆயிரம் மாதர்க் குள்ள அறிகுறி
உனக்கு உண்டாகுக” என்று சாபமிட்டான் இந்திரனை
நோக்கி, இட்ட சாபம் இமைப்பினில் கட்டியது. பழி பூண்ட புரந்தரன் அகன்றான்.
கல்லாய்ச் சமைத்து நின்ற மெல்லியலாளை நோக்கி ‘விலைமகள் அனைய நீயும் கல்லியல்
ஆதி’ என்று கடுஞ் சாபமிட்டான் கௌதமன். ‘நெற்றிக்கண் பெருமானை ஒத்தவனே! பிறர் செய்யும்
பிழையைப் பொறுத்தல் பெரியோர்களுடைய கடன் என்பர் உலகத்தவர். எனக்குச் சாப விடை தருக!
என வேண்டினாள் அகலிகை. சிறிது சினம் தணிந்த முனிவன், ‘தசரதராமன் பாதத்துளி உன்படும்பொழுது
கல்லுருவம் நீங்கப் பெறுவாய்’ என்று கருணை காட்டினான்.
சாபம் பெற்றுத் தேவருலம் திரும்பிய இந்திரனைக் கண்ட தேவர்கள் இரங்கினர். தேவர்கள்
நான்முகனை உடன் கொண்டு கௌதமனை அடைந்தார். இந்திரன் சாபத்தை நீக்குமாறு இறைஞ்சினர்.
முனிவு ஆறிய முனிவன் இந்திரன் உடம்பிலுள்ள குறிகளை, நீக்கி அழகிய ஆயிரம் கண்களாகும்படி
செய்தான். மகிழ்ச்சியுடன் தேவர்கள் விண்ணுலகு சென்றனர். இராமன் கால்பட்டு உயிர் பெற்றதை,
”இவ்வண்ண நிகழ்ந்த வண்ண மினியிந்த வுலகுக் கெல்லாம்
உய்வண்ண மன்றி மற்றோர் துயர்வண்ண முறுவ துண்டோ
மைவண்ணத் தரக்கி போரின் மழைவண்ணத் தண்ண லேயுன்
கைவண்ண மங்குக் கண்டேன் கால்வண்ண மிங்குக் கண்டேன்”
என்று இராமனை
வாயார மனமாரப் பாராட்டுகின்றான் கோசிகன்.
Comments
Post a Comment