தமிழ்
சமூகத்தின் உணவுப் பரிமாணங்கள்
உணவு பற்றிய தமிழ்ச் சமூகத்தின் அறிதிறன்
பார்வை, நோக்குநிலை, அர்த்தப்படுத்துதல் போன்ற பரிமாணங்கள் யாவும் சமூகம், பண்பாடு,
பிரபஞ்சம், தேவகணம், உள்ளிட்ட அத்தனையையும் ஊடுருவிச் செல்கின்றன. ‘சூடு, குளிர்ச்சி’
என்ற இருபெரும் எதிரிணை மண்ணியல் கூறுகளையும், உடலியல் கூறுகளையும் இணைக்கின்றன. ‘பித்தம்,
வாயு, கபம்’ எனும் மூன்று கூறுகள் உணவினை உடற்கூறுகளோடும் நோயியல் கூறுகளோடும்
ஒருங்கிணைக்கின்றன. ‘இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, உறைப்பு, கசப்பு’
என்னும் ஆறு புலணுர்வு கூறுகள் உடல்சார்ந்தும் உணர்வு சார்ந்தும் ஒருங்கிணைக்கின்றன.
உணவு உணர்வுகளையும், உணர்வுகள் மனிதனின் குணாதியங்களையும் நிர்ணயிக்கின்றன.
சாத்விகம், ராசதம், தாமசம் ஆகிய மூன்றும்
உணவு வழி அமையும் குணாதிசயங்களாகக் கருத்தினம் பெற்றுள்ளன. ஒரு வேளை உண்பவர் யோகி,
இரு வேளை உண்பவர் போகி ( வாழ்வை அனுபவிப்பவன்), மூன்று வேளை உண்பவர் ரோகி (நோயாளி),
எனும் நிலையில் உணவை மையப்படுத்தி மனிதர்கள் வகைப்படுத்தப்டுகின்றனர். தேரில்லாத
திருவிழாவா, இனிப்பில்லாத விருந்தா, பருப்பில்லாத கல்யாணமா போன்ற மரபுத் தொடர்கள்
உணவின் சமூகப் படிநிலைகளைக் காட்டுவனவாகும். ஒவ்வொரு பிரதேசத்திலும், வட்டாரத்திலும்
சமூகப் படிநிலைகளுக்கேற்ப உணவுப் படிநிலைகளும் மாறுகின்றன.
மனித சமூகத்தில் உணவு மருந்தியலோடும், உடலியலோடும்,
சடங்கியலோடும், தெய்வங்களோடும், சமூகத்தோடும், மொழியோடும் இவ்வாறு மேலும் பல நிலைகளோடும்
உறவுப் பெற்றிருக்கின்றன. இந்நிலைகள் அர்த்தங்களோடும், குறியீடுகளாகபும் பரிணமித்துள்ளன.
Comments
Post a Comment