கற்பு
(Chastity)
கற்பு என்னும் சிந்தனை பெண்களை அடிமைப்படுத்துவதற்காகவே கற்பிக்கப்பட்ட ஒன்றாகும்.
கற்பு என்னும் கருத்தாக்கம் நடைமுறையில் பெண்களுக்கே வற்புறுத்தப்படுகின்றது. ஆடவர்களை
எப்போதும் கட்டுப்படுத்துவதில்லை. கற்புக்காகப் பெண்கள் அன்பில்லாத இடத்தில் வாழ்வது
கூடாது என்று தந்தை பெரியார்,
”கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை
அன்பை, காதலை மறைத்துக் கொண்டு, காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கின்ற
சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்”.
என்னும் வரிகளில்
எடுத்துரைக்கின்றார். பெண்கள் கற்புநெறி தவறாமையே மிகச்சிறந்து ஒழுக்கமாக தமிழ்ச் சமுதாயத்தில்
போற்றப்படுகிறது. கற்பின் பெயரால் பெண்டிர் அடிமைப்படுத்தப்பட்டனர்.
கற்பு என்பதற்கு அபிதான சிந்தாமணி கற்பின்
பெயரால் அடிமைப்படுத்தப்பட்டதை,
”கற்பு என்பது கணவினினும் தெய்வம் வேறில்லை
யென எண்ணிக் கலங்காது அவனை வழிபடுவது, கோபத்துடன் பேசுகையில் எதிர் பேசார், கோபித்து
எதைச் சொன்னாலும் குணமாகக் கொள்வர். சக்களத்திக்குப் பொருள் கொடுத்தாலும் கோபிக்க மாட்டார்,
தங்கள் வீட்டை விட்டுச் செல்ல மாட்டார், கணவன் அழகற்றவனாக இருந்தாலும் நோய், கிழவன்
என்றாலும் ஏற்றுக் கொள்வர்”
என்று விளக்கம்
கூறுகிறது. பெண்களுக்குக் கூடா ஒழுக்கத்தைப் பெண்கள் பின்பற்றக் கூடாது என்று கூறிவிட்டு,
ஆண்களுக்கு மட்டும் அதை அனுமதித்தனர்.
திருக்குறள் போன்ற இலக்கியங்கள் பெண்களுக்கே கற்புக் கொள்கையை வலியுறுத்திக் கூறுகிறது.
மனைவி கற்புடையவளாக இருந்தால்தான் கணவன் பகைவர் முன் பீடு நடை போட முடியும் என்பதை,
”புகழ்புரிந்த இல்லிலோர்க்கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை”
என்றுக் கூறுகின்றது.
சில இலக்கியங்கள் ஆண்களுக்கும் கற்பு வேண்டும் என்று கூறுகின்றது. ஆனால் நடைமுறையில்
அக்கொள்கை பின்பற்றப்படுவதில்லை. இவ்வாறு பெண்களுக்கு மட்டும் வற்புறுத்தப்படுவதற்குக்
காரணம் சொத்துரிமைச் சமுதாயமே என அறிஞர்கள் கூறுகின்றனர்.
Comments
Post a Comment