மலையமான்
திருமுடிக்காரி
தமிழகத்தில் மண்ணைச் செழிக்க வைக்கும் ஆறுகளில் தென் பெண்ணையாறும் ஒன்று. இதன்
கரையிலே உள்ள திருக்கோவலூரைத் தலைநகரமாகக் கொண்ட நாடு மலாடு. மலையமான் என்னும் பரம்பரை
அடைமொழியுடன் கூடிய அரசர்கள் வழி வழியாக ஆண்டு வரும் மலையமான் நாடு மலாடு என்று வழங்கப்பட்டது.
இந்த மலையமான் நாட்டில் உள்ள மலைகளில் குறிப்பிடத்தக்கது முள்ளூர் மலையாகும். எனவே
மலாடு மன்னன் முள்ளூர் மன்னன் என்றும் சொல்லப்படுவான். பழமையும் பெருமையும் வாய்ந்த
அந்த மரபில் தோன்றிய மன்னர்களுள் திருமுடிக்காரி என்பவன் பெருமை மிகு கடையெழு வள்ளல்களில்
ஒருவனாக விளங்கினான்.
காரி கல்வியில் சிறந்த விளங்கியதோடு போர்ப்
பயிற்சியிலும் வல்லமை கொண்டவர்கனாக விரும்பினான். எனவே தனக்கென்று பஞ்ச கல்யாணி குதிரையைத்
தேர்ந்தெடுத்து அதனைப் போருக்கு ஏற்ப பழகினான். அத்துடன் வில், வாள், வேல் போன்ற படைக்கலப்
பயிற்சியிலும் அத்திற வல்லாளர்களிடம் நாளும் பயின்று வல்லமையாளனாக விளங்கினான். அதனால்
முடியுடைய மூவேந்தர்களும் கூட தங்களுக்கு வேண்டும் பொழுதெல்லாம் அவனைப் படைத்துணையாக
அழைப்பர். காரி எப்பக்கமோ வெற்றியும் அப்பக்கமே என்ற நிலையில் காரியின் போர்த்திறம்
பெரிதும் போற்றப்பட்டது.
காரி வீரத்தில் மட்டுமின்றி நெஞ்சின் ஈரத்திலும்
நிகரில்லாத வள்ளலாக இருந்தான். முடியுடை வேந்தர்களிடம் பெற்ற செல்வங்களையும் தன் ஆற்றலால்
பெற்ற பொருள்களையும் தன்னை நாடி வரும் புலவர்களுக்கும், விறலியர்களுக்கும், பாணர்களுக்கும்
கூத்தர்களுக்கும் மற்றும் இரவலர்களுக்கும் இல்லை என்னாது அள்ளித் தருவதில் அவன் கொள்ளை
இன்பம் அடைவான். தன் அரண்மனை வாயிலில் எவர் வந்து நின்றாலும் வந்தவர்களின் தரத்தையும்
திறத்தையும் சீர்த்தூக்கிப் பாராது அனைவருக்கும் வேண்டுவன அளத்தான். அவனுக்குக் கற்றுத்
தேர்ந்த புலவர்களும் ஒன்றுமறியாத மடவோரும் ஒன்றாகவே பட்டனர்.
ஒரு சமயம் இதனை நேரில் காண நேர்ந்த கபிலர்க்கு
காரியின் இத்தரமறியா திறம் குறையுடையதாகப்பட்டது. எனவே,
”ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை யறிதலோ வரிதே பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்
அதுநற் கறிந்தனை யாயிற்
பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே” (புறம்- 121)
என்று அறிவுரை கூறினார். மாவண் தோன்றலே! பரிசிலை வேண்டி
நின்னிடம் பலரும் வருகையில் தெள்ளிய புலவர்களையும் புல்லிய இரவலர்களையும் ஒன்றாக்க்
கருதி ஒரே மாதிரியாக பரிசு வழங்குவதை விடுவாயாக. வரிசையாக – தரத்தை அறிந்து செய். அது
நற்பயன் தரும் செயல் என்று அவர் எடுத்துக் கூறித் தெளிய வைக்கும் அளவுக்கு காரி கரையற்ற
வள்ளலாக விளங்கினான். அரசனுக்கே அறிவுறுத்தும் ஆற்றல் அக்காலத்துப் புலவர் பெருமக்களுக்கு
இருந்தது.
காரியிடம் பரிசில் பெற நினைப்பவர்கள் புறப்படும்
நல்ல நேரம்தானா? என்று கூடப் பார்ப்பதில்லையாம். தீயச் சகுனமே பாய்ந்து வந்து தடுப்பினும்
காரியின் வள்ளன்மை களங்கப்படாதாம். இவ்வாறு அனைவர்க்கும் இல்லை என்னாது ஈவதற்காகவே
பகைவர் போர்க்களம் செல்வதும் ஆநிரைகளைக் கவரும்போதே எதிப்பவர்களை வென்று அவைகளைக் கொண்டுவருவதும்
காரி தன் திறமாகக் கொண்டிருந்தான். என்பதை,
”....... ...... ....... ...... ........ முனையூர்ப்
பல்லா நெடுநிரை வில்லின் ஒய்யும்
தேர்வண் மலையன்
.... ....
என்று பரணர்
வாக்காலும்,
‘மாயிரு முள்ளூர் மன்ன்ன் மரவூர்ந்து
எல்லித் தரீ இய இன்நிரை’
என்னும் கபிலர்
வாக்காலும் அறிய முடிகிறது.
காரி தன் வாழ்நாளில் பெரிதெனக் கருதியவை
இரண்டே செயல்கள்தான். ஒன்று – போர்க்களத்தில் அஞ்சாது எதிர் நின்று பகைவரை வெல்லுதல்,
மற்றொன்று – தன்னிடம் யார் வந்து கேட்டாலும் அவர்களது துன்பம் தீர்ந்திடும் வகையில்
இல்லை என்னாமல் ‘கொள்க’ என்று கொடுத்தல். இவ்விரு கொள்கைகளே அவனுக்கு இரு கண்களாக இருந்தன
எனலாம்.
காரியின் புகழ் தென்திசை மட்டுமின்றி வடதிசையிலும்
பரவியது. பரவியதோடு இருக்காமல் ஆரிய மன்னர் முன் தோற்று ஓடி மறைந்தனர். இவ்வாறு ஆரிய
மன்னர்கள் புறமுதுகிட்டு ஓடியச் செய்தியை நற்றிணை என்கிற சங்க இலக்கியம்,
”ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒருவேற்கு ஓடி யாங்கு...”
என்னும் வரிகளாக
பறைசாற்றக் காணலாம்.
ஆரிய மன்னரை ஓடிடச் செய்த காரியைத் தேடி
மற்றும் ஒரு போர் வலிய வந்தது.
அந்த நாளில் வெற்றிமேல் வைத்துவிட்ட வெட்டிவிடா
ஆசையால் அரசர்கள் ஒருவரோடொருவர் மாறுபாடு கொண்டு மறப்போர் செய்வதுண்டு. தன் நாட்டைப்
பெரியதாக்க வேண்டும் என்ற ஆசையும் தன் ஆதிக்கம் மற்ற மன்னர்கள் பால் செல்லும்படி ஆக
வேண்டும் என்ற ஆர்வமும் அவர்களை அவ்வாறு வீம்புப் போர் செய்யத் தூண்டும். ஆனால் என்ன
காரணத்தாலோ காரிக்கும் அதியமான் நெடுமானஞ்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது
முற்றி, கடைசியில் போரில் கொண்டு வந்துவிட்டது.
இருவரும் வீரத்தில் வல்லவர்கள். வெற்றியையும்
வீரத்தையும் தமிழகம் முழுவதும் பரப்பியவர்கள். எனவே அவர்களது போர் எடுத்துக் கூற இயலாத
அளவிற்கு கனலொடு கனலென கடுமையாக நடந்தது. ‘எவரைப் பாடுவது, எவரைவிடுவது’ என்று போர்க்களம்
பாடும் பாணர்களுடைய நாக்குத் திணறியது.
பலநாள் நடந்த போர் ஒருநாள் முடிந்தது. அதியமான்
நெடுமான் அஞ்சி வெற்றிப் பெற்றான். தலைநகர் கோவலூர் அவனது ஆத்திரத்துக்க இலக்காகி நொறுங்கியது.
ஆண்மையுடன் போர் செய்தும் ஏனோ தோற்றுவிட்ட
காரி, சேரமன்னனான பெருஞ்சேரல் இரும்பொறையை அடைக்கலம் அடைந்தான். சேரனோ அதியனுடன் போர்
செய்ய பெரும்படை திரட்ட வேண்டியுள்ளதாகத் தயக்கம் காட்டினான். அதே நேரத்தில் காலம்
கருதி தன்னிடத்தில் காத்திருந்த காரியைக் கொண்டு தன்னுடைய நெடு நாள் விருப்பம் ஒன்றையும்
சாதித்துக் கொள்ள சேரன் திட்டமிட்டான். ஓரி ஆட்சிக்குரிய கொல்லிமலையை தன் ஆட்சிக்கு
உட்படுத்திக் கொள்ள அவனது மூலை இந்த நேரத்தைத் தக்க தருணமாக முடிவு செய்தது.
சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் விருப்பத்தை
உணர்ந்த மலையமான் திருமுடிக்காரி,
”
.... .... .... .... பழவிறல்
ஓரிக் கொன்ற ஒருபெருந் தெருவிற்
காரி புக்க நேரார் புலம்போல்
கல்லென றன்றால் ஊரே”
என்று கபிலர்
பாடிய வண்ணம் தக்க படையுடன் சென்று வல்வில் ஓரியுடன் பெரும்போர் செய்து அவனைப் போரில்
மடியச் செய்து அவனுடைய ஊர்மக்கள் அலரும்படி ஓரியின் நாட்டைக் கைப்பற்றி சேரனிடம் சேர்ப்பித்தான்.
இதனால் பெருஞ்சேரலிரும்பொறை பெரு மகிழ்ச்சி
அடைந்தான். தன் நெடுநாள் எண்ணத்தை தடுமாற்றமின்றி நிறைவேற்றி வைத்த காரிக்கு அவனுள்ளம்
நன்றிக்கடன் பட்டதாகிவிட்டது.
எனவே ‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி
இடத்தாற் செயின்’ எனும் குறள்மொழிப்படி நேரம் நோக்கிக் காத்திருந்த சேரன் தக்க சமயம்
வாய்த்ததும் அதியமான் நெடுமான் அஞ்சியின் மேல் போர் தொடுத்தான். அவனது பெரும்படை தகடூரை
முற்றுகையிட்டது.
உள்ளே இருப்பதால் உறுபயன் ஒன்றுமில்லை என்று
உணர்ந்த அதியமான் மலைக்குகையிலிருந்து உறுமிவரும் சிங்கம்போல் வெளிப்பட்டு நேருக்கு
நேராக போரில் இறங்கினான். ஆனால்... சேரனின் கூர்வேல் அதியமானின் அகன்ற மார்பிலே பாய்ந்து
பதிய, அவன் ஆவி பிரிந்து விட்டது.
வெற்றிக் களிப்பில் மிதந்த சேரன், அதியமானின்
காட்டைத் தன்வசப்படுத்திக் கொண்டு காரிக்கு அவனது ஆட்சிப் பகுதியான முள்ளூர் மலை நாட்டைத்
தந்தான்.
இழந்த நாட்டை மீண்டும் பெற்றுவிட்ட மலையமான்
திருமுடிக்காரி முன்புபோல் நன்கு ஆண்டான். காரியின் ஆட்சித் திறன்,
”கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
கழல்புனை திருத்தடிக் காரிநின் னாடே!
அழல்புறந் தரூஉ மந்தண ரதுவே
வீயாத் திருவின் விறல்கெழு தானை
மூவரு ளொருவன் துப்பா கியரென
ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி
வாழ்த்தினர் வரூஉ மிரவல ரதுவே
வடமீன் புரையும் கற்பின் மடமொழி
அரிவை தோள்ள வல்லதை
நினதென விலைநீ பெருமிதத் தையே” (புறம் –
122)
பழந்தமிழ் திருந்தடிக் காரி! நின்னாடு, கடலானும்
கொள்ளப்படாது, பகைவரும் மேற்கொள்ளார். நின்னாடு அந்தணருடைய வேள்வித் தீயைப் போன்றது.
மூன்று பெரும் வேந்தர்களிடமிருந்து வந்தோர் நின்னை வாழ்த்தித் தரும் பெரும் பொருள்
நும் குடியை வாழ்த்தி வரும் பரிசிலருடையது. ஆதலால் வடதிசை தோன்றும் அருந்ததியை ஒத்த கற்பினளான மென்மொழி நின் துணைவியை
மட்டுமே உன்னுடையது என்று சொல்ல ஒன்று உடையவனாய் இருக்கையில் எப்படி பெருமித முடியவனாய்
இருக்கிறாய்? என்று கபிலரால் வியக்குமளவில் விளங்கியது.
Comments
Post a Comment