Skip to main content

பழந்தமிழர் ஆடை அணிகலன்கள்

 

பழந்தமிழர் ஆடை அணிகலன்கள்

         

ஒரு நாட்டினர் அணியும் ஆடை அணிகலன்கள் அந்நாட்டு மக்களது நாகரிகத்தின் சின்னமாக விளங்குகின்றன. சங்க இலக்கியத்தின் துணைக் கொண்டு, அவர்கள் அணிந்திருந்த ஆடை அணிகலன்களை அறியலாம்.

பழந்தமிழர்களின் ஆடைகள்

          உலகில் பல்வேறு பகுதியில் வாழும் மக்கள் நாகரிகமற்று வாழ்ந்த காலத்தில், பழந்தமிழர் சிறந்த ஆடையணிகளையணிந்து. சீரும் சிறப்பும் பெற்று விளங்கினர். அவ்வாடைகள் பெரும்பாலும் பருத்தி நூலால் ஆனவை. அவை, இழை தெரியாதவாறு மிகவும் நெருக்கமாகவும், மென்மையாகவும் நெய்யப்பட்டன. அவற்றிற்கு உவமையாகப் பாலாவி, புகை, பாம்பின் சட்டை, மூங்கிலின் மெல்லிய தோல் முதலியவற்றைப் புலவர்கள் எடுத்தாண்டுள்ளனர். இதனால் நம் நாட்டில் நெசவுத்தொழில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்திருக்கவேண்டும் என்பது புலனாகின்றது.

 ஆடை நெய்வதற்கு வேண்டிய நூலைப் பெரும்பாலும் கைம்மை நோன்பை மேற்கொண்டிருந்த பெண்கள் நூற்றனர். அவர்கள் பருத்திப் பெண்டிர் என அழைக்கப்பட்டனர். ஆடைகள் தறியினின்றும் அறுக்கப்பட்டமையால் அறுவை என்னும் பெயர் பெற்றன. நமது உடலைச் சுற்றியிருப்பது என்ற பொருள் கொண்ட புடவை என்னும் பெயரும் ஆடைக்கு உண்டு. இச்சொல்லானது ஆடவர், மகளிர் ஆகிய இருதிறத்தாரது ஆடையையும் குறிக்கும்.

கலிங்கம் என்ற சொல்லும் ஆடையைக் குறிப்பதாகும். கடையெழுவள்ளல்களில் ஒருவனான பேகன், கார் காலத்தில் மயில் ஆடுதல் கண்டு, அது குளிரால் வருந்துகிறதெனக் கருதி, தனது போர்வையையெடுத்து அதற்குப் போர்த்தினான் என்பதை,

”கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய பேகன்”

என்னும் அடியினின்றும் அறியலாம்.

          சிறுமியர் அணியும் ஆடை, சிற்றாடை எனப்படும். மழையில் நனைந்து வந்த ஔவையாருக்குப் பாரிமகளிர் நீலச் சிற்றாடை கொடுத்து உதவினர். காலத்தினால் செய்த நன்றிக்குக் கைமாறாக,

          ”பாரி பறித்த கலனும் பழையனூர்க்

         காரியன் றீந்த களைக்கோலும் – சேரமான்

         வாராயோன் வென்றழைத்த வார்த்தையு மிம்மூன்றும்

          நீலச்சிற் றாடைக்கு நேர்”

என்னும் அழியாத பாட்டைப் பாடினார் ஔவையார்.

  பண்டைக்காலத்தில், பட்டாடைகளும் நெய்யப்பட்டன. சரிகை கலந்து நெய்யப்பட்ட மஞ்சள்நிறப் பட்டாடை, பீதாம்பரம் என்றும், பொன்னாடை என்றும் பெயர் பெற்றது. எலிமயிர், ஆட்டுரோமம் போன்றவற்றைக் கொண்டு நேர்த்தியான கம்பளங்கள் நெய்யப்பட்டன.

பழந்தமிழர்களின் அணிகலன்கள்

    பழங்காலத்தில் ஆடகம், சாம்புநதம், கிளிச்சிறை, சாதரூபம் என்னும் நால்வகைப் பொன்னும் நவமணிகளும் மிகுதியாக இருந்தன. அவற்றைக்கொண்டு பற்பல விதமான அணிகலன்கள் செய்யப்பட்டன. பொன்னால் அணி செய்பவர் உருக்குத்தட்டார் என்றும், பொன்னையும், மணியையும் பிரியாதவாறு இணைத்து இழைப்பவர் பணித்தட்டார் எனவும் கூறப்பட்டனர். பொன்னையும் மணியையும் சேர்த்து இழைப்பதால் அதற்கு இழை என்னும் ஒரு பெயருண்டு. ஒன்பது வகை மணிகளின் இலக்கணத்தை நன்கு அறிந்த பணித்தட்டார் பலர் அக்காலத்தில் இருந்தனர்.

     வடமலையில் பிறந்த பொன்னும், கீழ்க்கடலில் உண்டான பவளமும், தென்கடலில் கிடைத்த முத்தும், காவிரிப்பூம்பட்டினத்துக் கடைத்தெருவில் குவிந்து கிடந்தன.

          அணிகளை, குழந்தைகள் அணி, ஆடவர் அணி, மகளிர் அணி என மூன்று வகையாகப் பிரிக்கலாம். குழந்தைகளுக்குப் பாதுகாவலாக, ஐம்படைத்தாலி என்னும் அணி அணிவிக்கப்பட்டது. காதற்கடவுளாகிய திருமாலின் சங்கு, சக்கரம், வில், வாள், கதை முதலிய ஐந்து படைகளையும் சிறு வடிவத்தில் பொன்னால் செய்து கோத்துக் கழுத்திலிடுவார்கள். சதங்கை போன்ற காலணிகளைச் சிறுவர் அணிந்திருந்தனர் என்பது பொற்கால் புதல்வர் என்னும் பட்டினப்பாலை சொற்றொடரால் விளங்குகின்றது.

     அரசரும், வீரரும் வீரத்துக்கு அறிகுறியாகக் காலில் கழலும் தோளில் வாகுவலயம் என்னும் வளையலும் அணிந்து போருக்குச் செல்வர். பகையரசர்களை வென்ற மன்னர்கள், தோல்வியுற்ற மன்னரது முடியிலுள்ள பொன்னைக் கொண்டு கழல் செய்து, தாம் அவரை வென்று அடிமைப்படுத்தியதற்கு அடையாளமாக அணிந்து கொள்வர். இவையன்றி, அரசர்கள் பொன்னாலும் மணியாலும் ஆன விலையுயர்ந்த முடிக்கலன், மாலை, முதலியவற்றையும் அணிந்திருந்தனர். மேலும் அவர்கள் போருக்குச் செல்கையில், பொன்னால் செய்யப்பட்ட அடையாள மாலைகளை அணிந்து சென்றனர்.

          அக்காலத்தில் பெண்கள் அணிந்த அணிகள் முற்றுப்பெற்ற வேலைப்பாடு உடையனவாக இருந்தமையால் முற்றிழை என்னும் பெயர் பெற்றன. பெண்கள் பெரும்பாலம் சங்கு வளையல், பொன் வளையல் போன்றவற்றை அணிந்திருந்தனர். இதனை ஒண்டொடி, பைந்தொடி என்னும் சொற்கள் விளக்கிநிற்கும். காதில் மகரக்குழை அணிந்திருப்பர். முடக்கு என்னும் நெளி மோதிரம் அக்காலத்தில் அணியப்பட்டது என்பது நெடுநல்வாடையினின்றும் விளங்குகின்றது. இக்காலத்திலும் மணிகள் வைத்துப் பொன்னால் செய்யப்பட்ட நெளி மோதிரம் அணியப்படுகிறது. முடமோசியார் பாடலொன்றில்,

          ”ஈகை யரிய இழையணி மகளிரொடு

         சாயிற் றென்ப வாஅய் கோயில்”

என்ற அடிகள், அக்காலத்தில் மணமான பெண்டிர் மங்கல நாண் அணிந்திருந்தனர் என கருதலாம். பெண்கள் காலில் அணியும் சிலம்பு பொன்னால் நடக்கும் போது ஓசையுண்டாவதற்காக, விலையுயர்ந்த மணிகள் அதன் உள்ளே பரலாக இடப்பட்டன. கண்ணகியினது சிலம்பின் பரல் மாணிக்கம் என்பதையும், கோப்பெருந்தேவியின்  சிலம்பின் பரல் முத்து என்பதையும் வழக்குரை காதை விளக்கும்.

          ஆடல் பாடல்களில் சிறந்த மாதவி தலை முதல் பாதம் வரையில் பல்வகை அணிகலன்களை அணிந்திருந்தாள். அவற்றுள், பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, காற்சரி என்பன காலணிகள். சித்திரவளை, மணிவளை, பவளவளை போன்ற வளைகளில் சில வகைகளாகும். கழுத்தில் வீரச்சங்கிலி, ஞாண், சவடி, சரப்பளி, முத்தாரம் முதலியன அணிப்பட்டன. தெய்வவுத்தி, வலம்புரி, பூரப்பாளை, வடபல்லி, தென்பல்லி என்பன தலைக்கோலங்களாக விளங்கின.

          பழங்காலத்தில் அணிகலன்களில் பல இக்காலத்தில் இல்லை. ஒருகாலத்தில் நம் நாட்டு ஆடைகள் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பாண்டி நாட்டு முத்தானது, உரோமாபுரி, எகிப்து போன்ற நாட்டு மன்னர் முடியை அலங்கரித்ததாக, யாத்ரீகரது குறிப்பில் காணப்படுகிறது. அத்தகைய சிறந்த தமிழ்நாடு இன்று பிற நாடுகளிலிருந்து ஆடைகளை எதிர்பார்த்து ஏங்கி நிற்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். அதற்குக் காரணம் நாம் நெசவுத் தொழிலை இடையில் செய்யாது விட்டுவிட்டதால் இந்த நிலை நேர்ந்துள்ளது.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...