தலவரலாறுகளால்
பெயர் அமைதல்
தலங்களுக்கே உரிய சிறப்பு வரலாறு அடிப்படையில்
தலங்கள் பெயர் பெறுதல் உண்டு. இத்தகைய வரலாறுகள் மரபு வழியாகப் பேணப் பெற்று வருகின்றன.
இவ்வரலாறுகளைத் தழுவியே தலபுராணங்கள் எழுந்துள்ளன. தலபுராணங்களில் சில செய்திகள் சில
தலங்களுக்கே உரியதாகக் கொண்டுள்ளன. உதாரணமாக முருகன் சிவபெருமானுக்குப் பிரணவப் பொருள்
உரைத்த வரலாற்றைச் சுவாமிமலைக்கே உரியதாகக் கொண்டுள்ளனர். ஆனால் இந்நிகழ்ச்சியைத் தணிகை
வரையில் நிகழ்த்தியதாகக் கச்சியப்ப முனிவர் பாடியுள்ளார். எனினும் மரபு வழியாகச் சில
வரலாறுகளுக்குரிய தலங்கள் இவையிவை என்று சமயவுலகம் போற்றிவருகிறது. அதனடிப்படையில்
பெயரினையும் வழங்கிவருகிறது.
திருமயிலை
மயில் வடிவில் இறைவி இறைவனைப் பூசை செய்தும்
தனது உருவினைப் பெற்ற தலம் திருமயிலை என்பர். ஆகவே இத்தலம் மயிலை என்ற பெயரினைப் பெற்றதாகத்
தலப்புராணம் விவரிக்கின்றது.
திருச்சிராப்பள்ளி
சிராப்பள்ளி என்ற அரக்கன் வழிபட்டு உய்ந்தமையினால்
திருச்சிராப்பள்ளி எனும் பெயரினை திருச்சிராப்பள்ளி பெற்றதாக அத்தலப்புராணம் பேசுகிறது.
இடைக்காலத்தே சமணர்கள் தங்கிய படுக்கைகள்
தவப்பள்ளிகள் பின்னர் சிவத்தலங்களாகச் சில இடங்களில் மாறியுள்ளன. இவ்விடங்களைப் பள்ளி
என்றும் பாழி என்றும் பெயரிட்டு வழங்கும் மரபு உள்ளது. திருச்சிராப்பள்ளி, திருநனிபள்ளி
என்ற இடங்களைக் காட்டாகக் கூறலாம். அவ்வகையில் சமணர்கள் தங்கியிருந்ததற்கான கல்வெட்டுச்
சான்றுகள் உள்ளன. சிரா எனும் சமணர் இங்கிருந்ததாகவும் குறிப்புள்ளது. சிரா என்ற சமணரையே
அரக்கனாக்கி அவன் வழிபட்டுய்ந்ததாக்க் காலப்போக்கில் செய்தியைப் பரப்பியிருக்க வழியுள்ளது.
திருத்தணிகை
போர் முடிந்து வேகம் தனிந்து முருகன் வந்து
வீற்ற இடம் தணிகை என்றாயிற்று. செருந்தணி எனவும் தலபுராணம் குறிப்பிடுகின்றது. இது
செருவிற்குச் சென்ற வேகம் தணிந்தமையைக் குறிக்கும் சொல்லாகும். இவ்வரலாறு இத்தலத்திற்குரியதாகப்
போற்றப்பெற்று வருவது மரபாகும்.
திருஆடானை
ஒரு முனிவரின் சாபத்தால் ஆட்டுத்தலையும்
ஆனையுடலும் பெற்ற ஒரு வேதகுமாரர் இங்கு வழிபட்டு மீண்டும் தேவவுடல் பெற்றதால் ஆடானை
எனும் பெயரை இத்தலம் பெற்றது.
மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் தலபுராண வரலாறுகளினால்
தலம் பெயர் பெற்றமைக்குச் சான்றாகின்றன.
Comments
Post a Comment