Skip to main content

திருமணம்

 

திருமணம்

        ஓர் ஆணும் பெண்ணும் இணைவதைத் திருமணம் என்பர். இணைந்தவர்கள் தொடங்குவதுதான் இல்வாழ்க்கை என்பர். திருமணத்திற்கு எல்லாச் சமயங்களும் முதன்மை தந்து அதன் புனிதத்தை மதிக்கின்றன.

       ”திருமணம் என்பது வெறும் விளையாட்டன்று, ஒவ்வொரு பாதியாய் வளர்ந்து வரும் இரண்டு உயிர் ஒன்றி முழுத்தன்மை எய்தி கடனாற்றுவதற்கு அவைகளை அன்புக் கயிற்றால் இயற்கை பிணிப்பது” என்பார் திரு.வி.க.

   ”சமய சமுதாயத் தேவைகளுக்கோ, மரபு, பண்பாடு, கடமைகளுக்கோ மட்டுமல்லாது உடல் உணர்வு, சமுதாய உணர்வு, சமுதாய மதிப்பு, தனிப்பட்ட வசதிகள், தன்மைகள் முதலியவற்றிற்கு மிகத் தேவையான ஒன்றாகத் திருமணம் கருதப்படுகிறது.” எனக் கபூர் கருதுகின்றார்.

          திருமணம் என்பது குடும்பத்தின் அடித்தளமாகும். திருமணம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

       பழந்தமிழ் இலக்கியத்தில் திருமணம், மணம், மன்றல், வதுவை, வரைவு என்ற சொற்களால் குறிப்பிடப்படுகின்றது.

          ”வதுவை அயர விரும்புதி” என்ற ஐங்குறுநூற்றிலும், ”தொன்றியல் மரபின் மன்றல் அயர” என்று அகநானூற்றிலும் கூறப்பட்டுள்ளன. இன்றைய நாளில் திருமணத்தைக் கல்யாணம் என்பர். நாலடியாரில்,

          ”பல்லாரறிய மறையறைந்து நாள் கேட்டு

           கல்யாணஞ் செய்து”

என்று கூறப்பட்டுள்ளது.

     ”திருமணம் என்பது மனிதனுக்காக மனிதனால் நடத்தப்படும் ஒருவகைச் சடங்கு” என்று காந்தி அவர்கள் கூறியுள்ளார்.

       திருமணம் என்பது சமுதாயத்தில் வேறுபட்ட இரண்டு குழுவினரிடையே உறவு பிணைப்பையும், செயல் பிணைப்பையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாக அமைகின்றது. இது மணமகன், மணமகள் என்ற இருவரோடும் மட்டும் நில்லாமல், மண ஒப்பந்தம் என்னும் பெயரால் இரண்டு குடும்பத்தாரையும் சேர்ந்த பெரும் குழுக்களை இணைக்கின்றது. இவ்வகைக் குழுக்களிடையே நடைமுறைச் செயல்பாடுகளும் மாறுபடுகின்றது.

திருமணம் – பழங்கால முறை

       பழந்தமிழரின் திருமண முறையானது இன்றைய முறைகளிலிருந்து மாறுபட்டு விளங்குகின்றது. பழந்தமிழர்கள் வாழ்க்கையானது காதலை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகும். களவும், கற்பும் வாழ்வின் இருபெரும் அம்சங்களாக அமைந்திருந்தது. ஊரறியாத வகையில் வயது வந்த ஆணும் பெண்ணும் புணர்ந்து இன்புறும் பகுதி களவெனப்பட்டது. தமரறிய – ஊரறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் வாழ்வு கற்பு வாழ்வாகக் கருதப்பட்டது.

          ”கற்பெனப்படுவது கரணமொடு புணரக்

         கொளற்குறி மரபின் கிழவன் கிழத்தியைக்

         கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”

என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதன் மூலம் களவு வாழ்வு கற்பாக மாற வேண்டியதன் அவசியத்தைக் காண முடிகின்றது. மேலும், அக்காலத்தில் திருமணத்திற்குத் தகுதியானவராக கருதப்படப் போட்டிகள் நடத்தப்பட்டு வீரம்மிக்க ஆண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாலை சூட்டினர் என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. புலியை அடக்கித் திருமணம் செய்த பெருமையையும் தமிழன் அன்று பெற்றிருந்தான் என்பதை,

          ”கொல்லேந்து கோடஞ்சுவாணை மறுமையும்

           புல்லாளே ஆயமகள்”

என்று கலித்தொகை குறிப்பிடுவதன் மூலம் பண்டைத் தமிழர்கள் விலங்குகளை அடக்கித் திருமணம் செய்ததை அறிய முடிகிறது.

திருமணம் – இன்றைய நிலை

          தமிழர் திருமண முறைகளிலிருந்து ஆரியர் திருமணம் மாறுபட்டது. தமிழர் மணம் அன்று உயர்ந்த இடத்தைப் பிடித்திருந்தது. ஓர் உயர்வான குண இயல்பு தமிழர்களிடையே அன்று இருந்தது என்றால், அது தான் திருமணத்திற்குத் தரகு ஆள் பிடிக்கும் வேலை இல்லாதது. அதற்குக் காரணம் திருமண பந்தம் தெய்வீகமானது என்பதும் மேலும் இன்று போல் அன்றைய திருமணங்களில் வேதங்கள் ஒலிக்காது. யாகங்கள் எரியாது, பூணூல் புரோகிதன் தாலிக் கயிற்றை எடுத்துக் கொடுக்க மாட்டார். ஆனால், பொலிவுள்ள பெரிய மனிதரோ அல்லது அவர்தம் மனைவியோ தான் தாலிக் கயிற்றை வாழ்த்தி எடுத்துக் கொடுப்பார்கள் என்று தமிழனின் பாரம்பரிய திருமணம் பற்றி தெளிவாக விளக்குகிறார்.

  இத்திருமண முறையானது இடைக்காலத்தில் வந்த ஆரியர்களால் மாற்றமடைந்து விட்டது. இன்று இணைப்பதற்கு மாறாக பணத்தை மையமாகக் கொண்டு அமைந்துவிட்டது என்பதை இது நவீனம் படைத்த காலம் என்பதால் பணம் படைத்த ஆத்திகனும், பணம் இல்லாத நாத்திகனும் மங்களகரமான வாழ்வின் பந்த பாசத்திற்கும் கூட தரகு வைத்தே ஆள் பிடிக்கும் நிலைக்குப் பழகி விட்டான், என்று இன்றைய திருமணங்கள் ஒரு சுரண்டலாக அமைந்து விட்ட நிலையை,

          ”திருமணங்கள்

         நிச்சயிக்கப்படுவது

         சொர்க்கத்தில் அல்ல

         ரொக்கத்தில்! பவுனில்”

என்னும் விநாயகமூர்த்தியின் புதுக்கவிதை இன்றைய திருமணங்களின் நிலையைத் தெளிவாக விளக்குகின்றது.

(குறிப்பு- இக்கட்டுரை செம்மொழி இலக்கியமும் சமூகவியல் கோட்பாடும், அறிஞர் எல்.கே.அக்னிபுத்ரன்,மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600 108. என்ற நூலின் கருத்துக்களைப் பயன்படுத்தியுள்ளேன். ஐயா அவர்களுக்கு நன்றி.)

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...