வல்வில்
ஓரி
நாமக்கல்லுக்கு அருகிலுள்ள கொல்லிமலை தன்னாட்டு அதிபனை
நாடிவரும் விறலியர், கூத்தர், பாணர் புலவர்களை பல்வகைப் பூக்களின் மணம் வீச மகிழ்ச்சியுடன்
வரவேற்கும் எழில் கொஞ்சும் மலையாகும்.
இயற்கையெழில் கொஞ்சும் இன்பமலையாக அது திகழ்ந்ததோடு
மற்றொரு வகையிலும் அது தன்னிகரற்று விளங்கியது. காண்பார் கண்களையும் கருத்தினையும்
ஒரு சேர ஈர்த்து உவக்க வைக்கும் ஒரு அழகுப் பாவையும் அந்த மலையில் இருந்தது. ‘கொல்லிப்பாவை’
என்று அனைவராலும் போற்றப்பட்ட ‘தெய்வம் எழுதிய அந்த வினைமாண் பாவை’ சங்கப் புலவர் பரணரால்,
”கால்பொருது இடிப்பினும் கதழுழை கடுகினும்
உருமுடன்று
எறியினும் ஊறுபல தோன்றினும்
பெருநிலங் கிளறினும் திருநல உருவின்
மாயா
வியற்கைப் பாவை”
என்று போற்றிப்
பாடப்பட்ட பெருமை கொண்டது.
இத்தகு கொல்லிமலையையும் அதனை அடுத்துள்ள
நாட்டுப் பகுதியையும் அறநெறி பிறழாது அரசு செய்து வந்த குறுநில மன்னனே ஓரி என்பவன்.
இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவனாகப் போற்றப்படும் பெருங்கொடையாளன். அருளாளன், அற்புதத்
திறனாளன்.
ஆண்மையிலும் ஆற்றலிலும் தன்னிகரற்று விளங்கிய
இவன் வில்லாற்றலிலும் இணையற்றவனாக இருந்தான். ஒரே அம்பால் பலவற்றையும் ஊடுருவிச் செல்லும்
வண்ணம் எய்யும் ஆற்றல் இவனிடம் இருந்தது. ஓரியின் இத்தகு வில்லாற்றலை,
”வேழம் வீழ்த்த விழுத்தொடை பகழி
பேழிவா
யுழுவையைப் பெரும் பிறி துறீஇப்
புழற்றலை
புகர்க்கலை யூருட்டி யுரற்றலைக்
கேழற்பன்றி
வீழ வயலது
ஆழற்
புற்றத் துடும்பிற் செற்றும்
வல்வில்
வேட்டம் வலம்படுத் திருந்தோன்
புகழ்
சால் சிறப்பி னம்புமிகத் திளைக்கும்
கொலைவன்
யார்கொலோ! (புறம் -152)
‘ஒரு யானை,
ஒரு புலி, ஒரு புள்ளிமான், ஒரு காட்டுப்பன்றி, ஆகியவற்றைத் துளைத்து வீழ்த்திவிட்ட
நிலையில் ஒரு அம்பு புற்றுக்கு அருகிலிருந்த உடும்பின் உடலில் செருகி இருந்த்தைக் காண
நேர்ந்த ஒரு பாணர் கூட்டம் இப்படி ஒரே அம்பால் ஐந்து உயிர்களையும் கொல்லும் ஆற்றல்
படைத்தவன் வல்வில் ஓரியோ யாரோ? எனும் பொருள் கொண்ட வன்பரணின் புறநானூற்றுப் பாடலின் மூலம் அறியலாம்.
அத்துடன்,
”வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்திற்
றானுயிர்
செகுத்த மானிணப் புழுக்கொடு
ஆனுருக்
கன்ன வேரியை நல்கித்
தன்மலை
பிறந்த காவினன் பொன்
பன்மணிக்
குவையொடும் விரைஇக்
கொண்மெனச்
சுரத்திடை
நல்கி யோனே விடர்ச்சிமை
ஓங்கிருங் கொல்லிப் பொருநன்
ஓம்பா
வீகை விறல்வெய் யோனே” (புறம்- 152)
என்ற தன்னைப்
போற்றிக் கூறவந்த புகழுரைகளையும் பாணர்களைச் சொல்லவிடாது அவர்களுக்கு ஆவின் நெய்யை
உருக்கினாற் போன்ற மதுவையும், மலையின் கண் விளைந்த மாசறு பொருள்களையும், பொன்னையும்
அள்ளித் தருகின்ற ஒப்பிலா கொடையாளி – எனும் பொருள்கொடை ஓரியின் ஈகைத் திறம் பற்றிய
செய்தியை அதே புறநானூற்றுப் பாடல் போற்றுவதை உணரலாம்.
”மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்
இழையணி
யானை இரப்போர்க் கீயும்
சுடர்விடு பசும்பூண் சூர்ப்பமை முன்கை
எடுபோர் ஆனா ஆத னோரி
மாரி வண்கொடை காணிய நன்றும்
சென்றது
மன்னெங் கண்ணுளங் கடும்பே
பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வானார்த் தொடுத்த கண்ணியும் கலனும்
யானை இனத்தொடு பெற்றனர், நீங்கிப்
பசிய ராகல் மாறுகொள் விசிப்பிணிக்
கூடுகொ ளின்னியம் கறங்க
ஆடலும் ஒல்லார்தம் பாடலும் மறந்தே” (புறம்
– 153)
என்கிற மற்றொரு
புறநானூற்று வன்பரணர் பாடலும் வல்வில் ஓரியின் நல்லருங் கொடையைப் பற்றி புல்லரிக்கப்
புகழ்கிறது. ஓரியிடம் தடையிலா நிலையில் கொடையெனப் பெற்ற பெரும் பொருளால் இரவலர்கள்
கானை மறந்த களிமயிலைப் போல தன்குலத் தொழிலையே மறந்தவராய் மகிழ்ச்சியில் மிதந்தார்களாம்.
ஒரு சமயம் கழைதின் யானையார் என்னும் சங்ககாலப்
புலவர்களுள் ஒருவர் ஓரியை மிகுந்த விருப்பத்துடன் சென்று கண்டார். புலவரல்லவா? உடனே
அவர் நாக்கில் பாடல் சுரந்தது. இப்பாடல் இமிழ்கடல் உலகில் அமிழ்த்தெனப் போற்றத் தக்கது.
” ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன்எதிர்
ஈயேன்
என்றல் அதினினும் இழிந்தன்று
கொள்எனக்
கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்
கொள்ளேன்
என்றல் அதனினும் உயர்ந்தன்று
தெண்ணீர்ப்
பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார்
ஆகுப நீர்வேட் டோரே
ஆவும்
மாவும் சென்று உணக் கலங்கிச்
சேறொடு
பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர்
மருங்கின் அதர்பல ஆயினும்
புள்ளும்
பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச்
சென்றோர் பழியவர், அதனாற்
புலவேன்
– வாழியர் ஓரி விசும்பின்
கருவி
வானம் போல்
வரையாது
சுரக்கும் வள்ளியோய் நின்னே” (புறம் – 204)
‘ஒன்றைத் தா என இரத்தல் இழிந்தது. ஆனால் அவ்வாறு
இரந்தோர்க்கு ஈயேன் என்று மறுத்தலே அதனினும் இழிவுடையதாகும். ‘இந்தா... பெற்றுக் கொள்
என்று தானே விரும்பிக் கொடுப்பத உயர்ந்தது. ஆனால் அவ்வாறு வலிய கொடுக்கப்பட்டாலும்
கொள்ளமாட்டான்’ என்பது அதனினும் மிக உயர்ந்தது. நீர்தாகம் கொண்டவர்கள் கடல் நீரை அருந்தார்.
பசுக்களும் விலங்குகளும் கலங்கிய சேற்று நீர் என்றாலும் அத்தாழ்ந்த இடத்திற்குத் தேடிச்
செல்லும் வழிகள் பலவாக இருக்கும்.
இரவலர்கள் பரிசில் பெறாதபோது தாம் நாடிவந்தவரைப் பழித்துப் பேசார். பதிலாக தாம்
புறப்பட்ட நேரத்தையும் அப்போது கண்ட பட்சி சகுனத்தையுமே பழிப்பர். அதனால் நீ எனக்கு
இல்லை என்றனையேனும் உன்னை நான் வெறுக்கமாட்டேன். மாரிபோல் வழங்கும் ஓரியே! நீ வாழி! என்ற அரிய நீதியைக் கொண்ட இப்பாடல் தமிழ்ச் சான்றோர்
அனைவராலும் அமிழ்தாகச் சுவைக்கப் படுவதொன்றாகும். ஓரியின் வள்ளன்மையால் வரமாகப் பெற்ற
இவ்வரிய அறவுரை செறிந் பாடலை அப்படிச் சுவைக்கும்போது அந்த தமிழ் நெஞ்சில் வல்வில்
ஓரியின் எண்ணம் நன்றியுறச் சுரக்க வேண்டும்.
இயற்கை வளத்தாலும் செந்நாப் புலவர்களின் பல்நாப் பாடலகளாலும் புகழ்பெற்ற கொல்லிமலை
முடிமன்னன் புகழ்பெற்ற கொல்லிமலை முடிமன்னன் ஒருவனின் ஆசைக்கு இலக்காகியது. சேரவேந்தன்
பெருஞ்சேரல் இரும்பொறை கொல்லிமலையைக் கைப்பற்றி தன்னாட்சிக்கு உட்பட்ட பகுதியாக்கி
கொள்ள வேண்டும் என்று தீவிரமாக எண்ணமிட்டான். அவனது நாட்டாசை முன் ஓரியின் கொடைத்திறம்
ஒப்பற்றதாகத் தோன்றவில்லை. உயிர்ப்பற்றதாகவிட்டது.
காலம் கருதி காத்திருந்த சேரன், தன்னிடம் பழம் நழுவி பாலில் விழுவதுபோல் வலிய
உதவி கோரி மலையமான் திருமுடிக்காரி வந்தபோது தன் காரியத்தை அந்தக் காரியை வைத்தே சாதித்துக்
கொள்ள முடிவெடுத்தான்.
சேரனால் தனக்கும் ஆக வேண்டியது இருக்கவே காரியும் அதற்கு உடன்பட்டான்.
காரியின் தலைமையில் பெரும்படை ஓரியின் நாட்டின்மேல் சென்றது. நேர் காரணம் ஏதுமின்றி
காரி தன்மேல் படையெடுத்து வருவதை அறிந்த ஓரி சிங்கம் எனச் சீறி எழுந்தான்.
பெரும்போர் நடந்தது. யானை முன் சிங்கம் என்று கூறும்படி சேரனின் பெரும்படையுடன்
ஓரியின் சிறுபடை சிலிர்த்துப் போரிட்டது. ஆனால்,
பரந்து நின்ற படையின் நடுவிலே விற்போர் செய்துகொண்டிருந்த ஓரியின் மார்பிலே
ஓர் கூர் அம்பு பாய்ந்தது. அடுத்தகணம் ஓரியின் உயிர் பிரிந்தது.
வெற்றிக் கொண்ட காரி ஓரியின் நாட்டை சேரனிடம் ஒப்படைத்து விட்ட செய்தியை,
”கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க் கீத்த
செவ்வேர்ப பலவின் பயங்கெழு கொல்லி”
என்ற பாடல்
வரிகள் பரிதாபமாகப் பறைசாற்றுகின்றன.
எல்லையில் புகழ் வல்வில் ஓரியின் கொடைத்திறம்
இன்றும் கொல்லிமலைக் காற்றில் குளிர்ச்சியாக வீசிக் கொண்டு இருக்கிறது.
Comments
Post a Comment