பழந்தமிழரின்
அயல்நாட்டு வாணிகம்
பழந்தமிழர் வேற்று நாட்டினருடன் செய்த வாணிகத்தை
வரையறுத்தே செய்தனர் என்பதை அறிகிறோம். அதனை எவ்வாறு வரையறுத்தனர் என்பதை அறிவது மிக
இன்றியமையாதது. இன்றும் வேற்று நாட்டிலிருந்து அதிகமான பொருள்கள் வரக்கூடாதெனக் கருதினால்,
அரசாங்கத்தார் அதனைத் தடுப்பதற்கு ஒரே முறையைத் தான் கையாளுகின்றனர். அப்பொருளின் மேல்
சுங்கவரியை உயர்த்திவிடுவதே (Higher Tariff) அம்முறையாகும். அங்ஙனம் செய்வதால் பொருளுக்கு
இயற்கையாக வைக்க வேண்டிய விலைக்குமேல் இந்தச் செலவையும் ஏற்றி வைத்து விற்க நேரிடுகிறது.
அவ்வளவு விலை கொடுத்து வாங்க அப்பொருள் தகுதியற்றதாகிவிடுமேயானால் அதனை யாரும் இறக்குமதி
செய்யமாட்டார். எனவே, இம்முறையிலேயே அன்றைய தமிழ்நாட்டில் வாணிகம் நடைபெற்றதெனப் பட்டினப்பாலை
குறிக்கிறது.
பழந்தமிழ் இலக்கியத்தில்
சுங்கவரி
பட்டினப்பாலை கரிகாற்பெருவளத்தான் என்ற சோழ அரசன் மேல் பாடப்பட்ட அரிய பாடல்.
அவன் இமயஞ் சென்று புலிக்கொடி நாட்டி மீண்டவன். எனவே, அவன் காலத்தில் தமிழ்நாடு செல்வம்
கொழித்திருக்குமென்பதில் ஐயமில்லை. அவனுடைய முக்கியத் துறைமுகப் பட்டினம் காவரிப்பூம்பட்டினம்.
காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தில் பொருள்கள் வந்து இறங்குகின்றன. அவற்றைச்
சுங்க இலாக்காவைச் சேர்ந்த அலுவலர் வந்து பார்வையிடுகின்றனர். அவற்றின் மதிப்பை அளவிடுகின்றனர்.
பொருளின் மதிப்பென்பது எப்பொழுதும் நிலையாக இருப்பதில்லை. அங்ஙனம் இருக்கவும் இயலாது.
அப்பொருளுக்கு இருக்கும் அவசியத்தைப் (demand) பொறுத்து அதன் அவசியத்தை, அப்பொழுதுள்ள
நாட்டின் நிலையைச் சீர்தூக்கிப் பார்த்து அச்சுங்க அலுவலர் மதிப்பிடுகிறார். ஏற்ற முறையில்
சுங்கம் விதிக்கிறார். இங்ஙனம் விதிக்கின்ற வரி விதிக்கும்பொழுதுதான் வெளிநாட்டு வணிகத்தைக்
கட்டுப்படுத்துகிறார்.
தினந்தோறும் இச்செயல் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் நடைபெறுகிறது. இதனைச் செய்பவர்
மனத்தாலும் உடலாலும் வலிமை பெற்றவர். அங்ஙனம் சுங்கம் வசூலித்தமைக்கு அடையாளமாக மூட்டைகளில்
மேல் சோழநாட்டு இலச்சினையாகிய புலிக்கொடியைப் பொறித்து, அவை மற்ற மூட்டைகளோடு கலந்துவிடாதபடி
தனியாகவும், கொடி பொறிக்கப்படாதவை நாட்டினுள் நுழையாமலும் கண்காணித்துக் கொடி பொறித்த
மூட்டைகளை மிகவும் காவல் பொருந்திய பாதுகாவலான இடங்களிலும் அடுக்குகிறார்.
”வைகல்தொறும் அசைவின்றி
உல்குசெயக் குறைபடாது
.... .......
......... ........
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி” (ப.பா.124-135)
சுங்கக் காவலர்
சுங்கக் காவலர் ‘வலியுடைய வல்லணங்கினோன்’ என்று கூறப்படுகிறார். ஏன்? சுங்கம்
வசூலிப்பவருக்கு வலிமை எதற்காக? ஈண்டு வலிமை என்றது மனவலிமையை. அம் மனவலிமை இல்லாதவன்
சுலபமாகக் கைக்கூலி வாங்கிக் கொண்டு அரசனை ஏமாற்றுபவன் ஆகிவிடலாம். இந்நாளில் வாழும்
நமக்கு ஒன்றும் இது புதுமையன்று. ஆனால், பழந்தமிழ் நாட்டில் அரச நீதியை நடத்துபவர்
எங்ஙனம் மனத்திட்பம் வாய்ந்தவராய் இருந்தனர் என்பதை இவ்வடிகள் அறிவுறுத்துகின்றன. மேலும்,
ஒன்று நோக்க வேண்டும். அவர் வெறுஞ்செம்மையுடையவராக மட்டும் இருத்தல் போதாது. பிறர்
அவரை ஏமாற்றுபவர். அவர் அங்ஙனம் செய்யாதிருக்க, அலுவலர் தமது அதிகாரத்தைச் செலுத்தக்
கூடியவராய் இருக்க வேண்டும். இது கருதியே ஆசிரியர் அவர் படைவலியாலும், தம் அதிகாரத்தைச்
செலுத்தக் கூடியவராய் இருந்தார் என்பதை அறிவிப்பதற்காக ‘வல்லணங்கினோன்’ (பிறரை வருத்தக்
கூடிய பலமுடையவன்) என்று கூறுகிறார். இவையெல்லாம் இன்றும் இருக்கக் காண்கிறோம். ஆனாலும்,
திருட்டுத்தனமாகச் சரக்கை ஏற்றுமதி இறக்குமதி செய்ய ‘கள்ளக் கடத்தல்’ (Smuggling) இன்றும்
நின்றபாடில்லை. அத்தகைய செயல் அந்நாளில் இல்லை என்பதை ஆசிரியர் ‘அருங்கடிப் பெருங்காப்பின்’
பொருள் இருந்தனவென கூறுகிறார்.
இவற்றால் அரேபியா, பர்மா முதலிய வெளிநாட்டு
வாணிகத்தோடு கங்கை வெளி, இலங்கை முதலிய இடங்களுடன் உள்நாட்டு வாணிகமும் நன்கு நடந்தது
என்பது அறியமுடிகிறது.
Comments
Post a Comment