மாளிகைகள்
நம் முன்னோர்கள் மாட மாளிகைகள் வானுயர ஓங்கிய வண்ணம் எழுப்புவதில் கைவண்ணம்
பெற்றிருந்தனர். கட்டப்பெறும் மாளிகைகளின் வாசல் வடக்கு நோக்கியோ, கிழக்கு பார்த்தோ
இருக்குமாறு அமைத்தார்கள். இதனை,
”மாளிகை தனக்கம் மாநகர் வடகுணபால் கண்டு”
என்று திருவிளையாடற்புராணத்தில்
குறிப்பிடுகின்றார்.
மாளிகைகளால் காற்றும் வெளிச்சமும் புழங்கும்
வகையில் காலதர்களும் பருவத்திற்கு ஏற்ற வேனிற்பள்ளி கூதிப் பள்ளிகளும், நிலவுப் பயன்
கொள்ளும் வேயா மாடங்களும் வைத்து வடிவமைக்கப்பட்டன.
காலதர் என்பற்கு சாளரம், நேர்வாய்க்கட்டளை,
புழை எனப் பல பெயர்கள் உள்ளன. சாளரங்களில் மணிமாலைகள் தொங்கவிடப்பட்டு எழிலுற அமைக்கப்பட்டிருந்ததை,
”மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
கோலச்
சாளரக் குறுங்கண்” (சிலம்பு-2:22-23)
சிலம்பின் வழி
அறியலாம். காலதர்கள் மானின் கண்ணைப் போன்ற வடிவத்தில் வனப்புறக் கட்டப்பட்ட பான்மையினை,
”மான்கண் காலதர் மாளிகை இடங்களும்”
என்று சிலம்பு
உணர்த்துகின்றது. அறைகட்கு அமைக்கப் பெற்ற சாளரங்கள் வெளிக்காற்றை உள்ளே பெறுவதற்கும்
உள்காற்றை வெளிப்படுத்துவதற்கும் அமைக்கப் பெறுவது வழக்கம். காற்றைக் கட்டுப்படுத்திப்
பல புழைகள் வடிவமைக்கப்பட்டதை,
”சில்காற்று இசைக்கும் பல்புழை நல்லில்”
(மதுரை:358)
என்று மாங்குடிமருதனார்
புலப்படுத்துகிறார். மாடங்களில் காற்று தாராளமாகப் போய்வரும் வண்ணம் கால்போகு பெரவழிகள்
வைத்துக் கட்டப்பட்டதை,
”ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண்
சாளரம்
பொளித்த கால்போகு பெருவழி” மணிமேகலை -4:52-53)
என்று சுட்டிக்
காட்டுகிறது.
வேனிற் பள்ளி
எழுநிலை மாடங்களைக் கொண்ட பெரும் மாளிகைகளை
அமைத்துச் செழிப்பாக வாழ்ந்தனர். நெடுநிலை மாடம் என்று சிலம்பும், இடம் சிறந்துயரிய
எழுநிலை மாடம் என்று முல்லைப்பாட்டும் வருணிக்கின்றன.
பருவநிலை காலங்களுக்கு ஏற்றவாறு எழுநிலை
மாடங்களைக் கட்டினர். எழுநிலை மாடத்தின் மேல் பகுதியில் காற்று தாராளமாக வருவதற்கேற்ற
விதத்தில் வடிவமைத்துக் கொண்டனர். அம்மாடத்தில் வேனிற்காலத்தில் குடியிருந்தனர். அம்மாடத்திற்கு,
”வானுற நிவந்த மேனிலை மருங்கில்
வேனிற்
பள்ளியேறி”
வேனிற்பள்ளி
என்று சிலம்பு குறிப்பிடுகின்றது.
வேனிற்காலத்தில் தென்திசையில் இருந்து தென்றல்
காற்று வீசும். தென்றல் நுழைவதற்கு ஏதுவாக நேருக்கு நேராகக் கதவு, சாளரங்களை அமைத்துக்
கொண்டனர். இவ்வமைப்பினை வானுற ஓங்கியே மாடத்தின் மேல்நிலையில் இருக்குமாறு செய்தனர்.
வேனிற் காலத்தில் உடலுக்கும் மனத்திற்கும் இன்ப வாழ்வை வாழ்ந்தனர்.
கூதிர்ப்பள்ளி
கூதிர்காலத்தில் மேனிலையில் கடுங்காற்று
நடுக்கும். எனவே, மேனிலையில் இருக்கும். கூதிர்காலத்தில் நுழையாமல் இருக்க கூதிர்பள்ளியில்
குறுங்கண்களை உடைய சாளரங்களைக் கட்டினர். அக்குறுங்கண்களையும் அடைத்துக் கொண்டு உள்ளே
இருந்தனர் என்பதனை,
”வேனிற் பள்ளி மேவாது கழிந்து
கூதிர்ப் பள்ளி குறுங்கண் அடைத்து”
எனவரும் சிலம்பின்
வழி அறியலாம்.
நிலா முற்றம்
எழுநிலை மாடங்களின் மேலதளத்தில் திறந்த வெளிமாடங்கள்
கட்டி நிலவின் பயனைத் துய்த்தனர். இதனை,
”நிரைநிலை மாடத்து அரமியந்தோறும்” (மதுரைக்:451)
”நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றம்”
(சிலம்பு 4:31)
என்று இலக்கியங்கள்
வழி அறியலாம்.
மாளிகையின்
ஏழு அங்கங்கள்
இல்லம், முன்றில், சிறிய நெடிய படிக்கால்கள்,
திண்ணை, புழை வாயில்கள், இடைகழி, மாடங்கள் என்னும் ஏழு அங்கங்களைக் கொண்டு மாளிகைகள் கட்டப்பட்டன. இதனைப் பட்டினப்பாலையில்,
”ஏழகத்தகரோடு உகரும் முன்றில்
குறுந்தொடை
நெடும் படிக்கால்
கொடுந்திண்ணை,
பல்தகைப்பின்
புழைவாயில்
போகுஇடைகழி
மழைதோயும்
உயர்மாடத்து” (பட்டினப்பாலை:141-145)
என்று கடியலூர்
உருத்திரங்கண்ணனார் பாடல் வழி அறியலாம்.
Comments
Post a Comment