Skip to main content

ஆய் அண்டிரன்

 

ஆய் அண்டிரன்


          இயற்கை வளமும் இலக்கியப் பெருமையும் கொண்ட பொதிய மலையையும் அதைச் சார்ந்த பகுதியையும் மாவேள் ஆய் அண்டிரன் எனும் வேளிர் மரபு அரசன் ஆண்டு வந்தான். வேளிர் மரபில் வந்த இம்மன்னனே ஆய் குடியைத் தோற்றுவித்த முதல் அரசன் என்பர். ஆய்குடி எனும் அணி ஊரே இவனது தலைநகரமாக இருந்தது.

          ஆய் அண்டிரன் படையாற்றலிலும் கைவண்மையிலும் மிகப் புகழுடையவனாக விளங்கினான். குறிப்பாக யானைகளைக் கூடப் பரிசளிப்பதில் அவன் எதிரற்றவனாக இருந்தான்.

          சான்றோர்கள் சூழ வீற்றிருக்கும் இவனது அரசவையானது மிக்க அழகும் சிறப்புமுடையதாக இருந்த்து என்றும், புன்னை மரத்தின் பெரிய கிளைகளிலே புதிதாக வந்து தங்கிய வெண்ணிற நாரைகளின் ஆரவாரத்தைப் போன்று ஆய் அண்டிரனின் நாளவையின் கண் பரிசிலர்களுக்கு அவன் தந்த பண்ணமைந்த தேர்க்கூட்டம் ஒலிக்கும் என்றும் சங்க இலக்கியங்களில் ஒன்றான நற்றிணையிலுள்ள,

         கருங்கோட்டுப் புன்னை குடக்குவாங்கு பெருஞ்சினை

         விருந்தின் வெண்குருகு ஆர்ப்பின் ஆஅய்

         வண்மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற

         பண்ணமை நெடுந்தேர்ப் பாணியின் ஒலிக்கும்

என்ற பாடல் வரிகள் பறைசாற்றுவதால் அறியலாம்.

          ஆய் அண்டிரன் இரவலர்களுக்கு பொன் பொருள்களுடன் தேர்களை மட்டுமே கொடுத்தான் என்று எண்ணிவிட வேண்டாம். தன் சீர்கெழு நாட்டையும் பேர்மிகு குன்றையும் பாடி வருபவர்களுக்கு ஆய் யானைகளையும் பரிசுகளாக்க் கொடுத்தான். அதுவும் ஏனைய வள்ளல்களைவிட மிக அதிக அளவில் யானைகளைக் கொடுத்தவன் அவனே என்ற புலவர்கள் பாராட்டியுள்ளனர்.

          காரிக் கண்ணனார் என்னும் செந்நாப் புலவர் வானத்திலே மிதந்துவரும் கார்மேகங்களுக்கு உவமை கூறும்பொழுது அவை ‘வியப்புடை இரவலர் வரூஉம் அளவை ஆய் அண்டிரன் புரவெதிர்ந்து தொகுத்த யானை மேல்’ என்று கூறுகின்றார். அரும் புலவர்களுக்கும் பெரும்பாணர்களுக்கும் ஆய் அளித்த யானைக் கொடையின் மிகுதியை அளவிட்டுக் கூறுதல் அரிய செயலாகும் என்று மோசியார் என்கிற புலவர் வானத்தின்கண் உள்ள விண்மீன்கள் அனைத்தும் பூத்தாலும் அவை ஆய் அண்டிரனின் யானை கொடைக்கு உவமையாகாது. வானத்திலே கருநிறமே தெரியாத வண்ணம் விண்மீன்கள் இடையீடு இன்றி அமைந்து விளங்கினால் அதுவே அவனது யானைக் கொடைக்கு உவமையாகலாம் என்று உதாரணத்துடன் வியந்து கூறுகிறார்.

          முடியுடை வேந்தருடன் காலம் கழிந்திருந்த முடமோசியர் ஆய் அண்டிரனின் புகழ் கேள்வியுற்று அவனைக் காண வந்தபோது ஆற்றை அணைக்க எதிர்கொள்ளும் கடலைபோல ஆய் வரவேற்றான். தன் தகுதிக்கு ஏற்ப அப்புலவருக்கு பரிசிலாக யானை, குதிரை, தேர்களுடன் பெரும் பொருளைக் கொடுத்தான். ஆனால் அவற்றைப் புலவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘மலைகெழுநாடனே! மாவேள் ஆயே! அவையில் பாணரைக் கண்டங் அணி அணியாக யானையைக் கொடுக்கும் மலை நாட்டுடையவனே! மாவேள் ஆயே! யான் வேண்டியது யானையுமன்று, குதிரையுமன்று, அணிசேர் புரவிகளால் இழுக்கப்படுகின்ற ஒலிசேர் தேர்களும் அன்று. யான் வந்தது உன்னைக் காண்பதற்காக மட்டுமே’ என்றார்.

       ‘பெரியோர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையாய் நந்தும்’ அல்லவர! பெரும் புலமை வாய்ந்த உறையூர் மோசியாரும், அருந்திறல் கொடை வள்ளலான ஆய் அண்டிரனும் ஒருவர் பால் ஒருவர் ஈர்ப்புக் கொண்டுவிட்டனர். மாட்சிமையில் சிறந்த இம் மன்னனை அல்லவா என்னுள்ளம் முதலில் நினைத்திருக்க வேண்டும். மாறாக பிற மன்னர்களை எண்ணிவிட்டதே. அத்தகை என்னுள்ளம் அமிழ்ந்து போவதாக. இப்பெருமை மிக்கவனின் புகழை முதலில் பாடாமல் மற்றவர்களைப் பாடிவிட்டதற்காக என் நாக்கு விளக்கப்படுவதாக. இவனுடைய நற்புகழைக் கேட்காமல் பிறருடையதைக்  கேட்ட என் செவிகள் ஊர் ஒதுக்குப் புறமுள்ள பாழ் கிணறு போலத் தூர்வதாக, நரந்தம் பூவையும் நறும் புல்லையும் மேய்ந்த கவரிமான் குவளைப் பூவையுடைய கனையின் பனிநீரைக் குடித்து அதன் பகலிலே உள்ள தகரமரத்தின் தண்ணிழலில் தன் பிணையுடன் தங்கும் அழகிய இடங்களையடைய வடதிசை இமயமலை தென் திசைக் கண் ஆய்குடியாகிய பொதியமலை இல்லையெனில் இவ்வுலகம் என்ன ஆகும்? அனைத்தும் தலைகீழாக அல்லவா தடுமாறும்! என்றும் பொருளில்,

          ”முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே!

         ஆழக என் உள்ளம்! போழ்க என் நாவே!

         பாழ்ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!

         நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி

         குவளைப் பைஞ்சுனை பருகி, அயல

         தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்

         வடதிசை யதுவே வான்தோய் இமயம்;

         தென்திசை ஆஅய்குடி இன்றாயின்

         பிறழ்வது மன்னோஇம் மலர்தலை உலனெ!” (புறம் – 132)

என்றும்,

         ”இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும்

         அரவிலை வணிகன் ஆஅய் அலன்

         பிறரும் சான்றோர் சென்ற நெறியென

         ஆங்கு பட்டதன்று அவன்கை வண்மையே!” (புறம்-134)

     இப்பிறவியில் செய்வது மறுபிறவிக்குப் புண்ணியமாக அமையும் என்ற ஊதியங்கருதி அறம் செய்பவன் ஆய் அல்லன். அவனது வள்ளல் தன்மை சான்றோர் சென்ற நெறிவழியே அமைந்ததாகும் – என்றும் அப்புலவர் பாடியிருப்பதிலிருந்து அவர் நெஞ்சம் எந்த அளவுக்கு ஆய்பால் அடைக்கலமாகி – ஐக்கியமாகி விட்டது என்பதை உணரலாம்.

          இவ்வாறு பாவலர் பலரால் பாராட்டப்பட்டும் பாணர் பலரால் பாடப்பட்டும் வந்த ஆயின் பெருமனையிலும் செல்வம் குன்றத் தொடங்கியது.

          செல்வம் நிறைந்திருந்தபோதும் அது சுருங்கிவிட்டபோதும் உடனிருந்தே வந்த உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரின் உள்ளம் வருந்தியது.

          ”களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்

         பாடுஇன் பனுவல் பாணர் உய்த்தெனக்

         களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்

         கான மஞ்ஞை கண்ணோடு செப்ப

         ஈகை அரிய இழையணி மகளிரொடு

         சாயின்று’ என்ப, ஆஅய் கோயில்,

         சுவைக்கு இனிதாகிய குய்யுடைய அடிசில்

         பிறர்க்கு ஈவுஇன்றித் தம் வயிறு அருத்தி

         உரைசால் ஓங்குபுகர் ஓரீஇனி

           முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே” (புறம் – 127)

          களங்களியன்ன கருங்கோட்டு சிறு யாழை ஏந்திய பாணர்கள் பரிசில்பெற்றுச் சென்றதனால் களிறுகள் நிறைந்திருந்த கொட்டடைகள் வெற்றிடமாக உள்ளன. அவ்விடத்தில் காட்டு மயில்கள் தம் இனத்தொடு தங்கியுள்ளன. இரவலர்களுக்கு அளவில்லாத நிலையில் அருங்கலன்களை வழங்கிய அவனுடைய உரிமை மகளிர். இப்போது மங்கல அணியைத் தவிர வேறு அணியிலாதவராய் உள்ளனர். இதனைக் கோயில் பொலிவிழந்தது போலாயிற்று என்பார்கள். ஆனால் சுவையுடை உணவைப் பிறர்க்கு ஈயாது தானே தம் செல்வர்களின் பொலிவு உண்மையானதாகா!  கோயில் வறியதெனினும் புகழமைந்த திறத்தால் ஆயின் உறைவிடம் அதிகப் பொலிவுடையதாகும்’ என்று தேற்றும் அளவுக்கு  - தனக்குத்தானே தேற்றிக் கொள்ளும் அளவுக்கு அப்புலவரின் உள்ளம் இரங்கிக் கசிந்தது.

          ‘ஒன்றுபோல் காட்டி உயிரை ஈர்க்கின்ற வாள் போன்றது நாள்’ அல்லவர! ஓர்நாள் ஆயின் ஒப்பற்ற உயிர் பிரிந்து விட்டது. இரவலர், பாணர், கூத்தர், விறலியர், புலவர்கள் போன்ற அனைவரும் அழுது புலம்பினர்.

          இரு கண்களையும் பொத்திக்கொண்டு பெரும் கண்ணீர் விட்ட முடமோசியார், திண்ணிய தேரை இரவலர்களுக்கு ஈந்த ஆய் அண்டிரன் வருகிறான் என்பதை உணர்ந்து அவனை எதிர்கொண்டு வரவேற்பதாக இந்திரன் கோயிலிலே முரசம் முழங்குவதால் வானத்திலும் இடியொலியாகிய பேரொலி எழுகின்றதே’ எனும்  பொருளில்,

          ”திண்தேர் இரவலர்க் கீந்த தண்டார்

         அண்டிரன் வரூஉ மென்ன, வொண்டொடி

         வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்.

         போர்ப்புறு முரசும் கறங்க

         ஆர்ப்புஎழுந் தன்றால், விசும்பி னானே!” (புறம்- 241)

என்று பாடிப் புலம்பினார்.

          ஆய் அண்டிரனின் அருள்நிறை உடல் மருளற ஈமத்தில் எரியும்போது, ‘காதலர் இறப்பிற் கணையெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத்து அடங்காது இன்னுயிர் ஈயும்’ இயல்புடைய அவன் மனைவியரோ தீப் பாய்ந்து இறுதிவரை இருக்கும் துணையாக தம்முயிரை மனம்நிறை மணாளனின் உயிரோடு ஒன்றிக் கொண்டனர்.

          உடன்கட்டை ஏறி உயிர்நீத்த இந்தக் கொடுமைக் கண்டு கலங்கிய குட்டுவன் கீரனார் எனும் புலவர், ‘ஆடு நடைக் குதிரைகள், யானைகள், தேர்கள், ஊர்கள், நாடு ஆகியவற்றையெல்லாம் பாடுவார்க்கு மகிழ்வுடன் பரிசிலாக அளிக்கும் ஆய் அண்டிரன் கண்ணிலா காலன் கொண்டு செல்ல மேலோர் உலகம் சென்றுவிட்டானே’ எனும் பொருளில்,

          ”ஆடுநடைப் புரவியும் களிரும்தேரும்

         வாடா பாணர் நாடும் ஊரும்

        பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்

         ... ............ குறுந்தொடி மகளிரொடு

         காலன் என்னும் கண்ணிள உய்ப்ப,

        மேலோர் என்னும் கண்ணின் உய்ப்ப” (புறம்-240)

என்று கதறினார்.

          ”ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

         விற்றக்கோள் தக்கது உடைத்து”  - குறள் 220)

என்ற குறள் மொழிக்கு திரள்மிகு எடுத்துக்காட்டாக விளங்கிய ஆய் அண்டிரனின் கொடைத்திறம் குன்றுபோல் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் எவர்க்கும் எதிர் கருத்து இல்லை என்பது நிச்சயம்.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...