Skip to main content

பேகன்

 

பேகன்


        ஆறுபடை வீடுகளுள் ஒன்று திரு ஆவினன் குடி பண்டைக் காலத்தில் இதனை பொதினி என்றும் வையாவி என்றும் அழைத்து வந்தனர். அப்பகுதியை ஆண்டவர்கள் ‘ஆவியர் குடியினர்’ எனப்பட்டனர்.

          இக்குடி மரபினரில் வேளாவிக் கோமான் என்பவர் குறிப்பிடத்தக்கவர். இவர் பத்தினித் தெய்வம் கண்ணகிக்கு முதன் முதலில் கோயில் அமைத்த பெருமன்னன் சேரன் செங்குட்டுவனின் மாற்றாந்தாய்க்கு தந்தையாராவார். இந்த வேளிர் குலத்தோன்றலின் வழிவந்து பின்னாளில் கடையெழு வள்ளல்களில் ஒருவராய் நிலைத்தவனே பேகன். இவன் வையாவிக்கோ, வையாவிக் கோப்பெரும்பேகன், கடாஅ யானைக் கலிமான் பேகன், கழற்கால் பேகன், கைவள்ளீகைக் கடுமான் பேகன் என்றெல்லாம் புலவர்களால் பாராட்டப்பட்டவன் ஆவான்.

          பேகனின் வள்ளன்மையை,

          ”காரென் ஒக்கல் கடும்பசி இரவல!

           வென்வேல் அண்ணல் காணா ஊங்கே

           நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே

           இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்

           உடாஅ, போரா, ஆகுதல் அறிந்தும்

           படாஅம் மஞ்ஙைக்கை ஈத்த எம்கோ,

           கடாஅ யானைக் கலிமான் பேகன்

           எத்துணை ஆயினும் ஈதல் நன்றென

           மறுமை நோக்கின்றோ அன்றே

           பிறர்வறுமை நோக்கின்று அவன்கை

           வண்மையே!”                                         (புறம் – 141)

          நிறைந்த சுற்றமும் கொடிய பசியையும் உடைய இரவலனே! உங்களைவிட யாம் வறியவர். எப்பொழுதும் போர்த்துத் திரியாவென அறிந்தும் மயிலுக்குப் போர்வையளித்த அருளாளன். மதமுடைய யானை, செருக்குடைய குதிரைகளைக் கொண்டவன் பேகன். அவன் பின்வரும் நன்மையை எதிர்நோக்காது அளவின்றிக் கொடுப்பது அவர்களது வறுமையை நோக்கி மட்டுமே. அதுவே அவன் வள்ளன்மை. நீயும் அவனைக் காணச் செல்வாயாக! என்று பரணர், இரவலருக்கு மற்றொருவன் கூறுவது போல் பாடியுள்ள பாடலால் அறியலாம்.

          ”அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்

         உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்

         வரையா மரபின் போலக்

         கடாஅ யானை கழற்கால் பேகன்

         கொடைமடம் படுதல் அல்லது

         படைமடம் படான்பிறர் படைமயக்குறினே!” (புறம் -142)

          குளம், வயல், உவர்நிலம் போன்ற இடங்களில் ஒரே தன்மைத்தாக பெய்யும் மழையும் போன்று இரவலர் எத் தகுதியினாயினும் ஒத்த நிலையில் கொடுக்கும் இயல்பினன். கொல்களிறுகளையும் வீரக் கழலையும் உடைய அவன் கொடைத்திறத்தில் இவ்வாறு மடமை உடையவனே என்றாலும் படைத்திறத்தில் தன்னொத்த வீரருடனே பொருபவனே அன்றி தகுதியாற்றானுடன் போர் செய்யும் மடமையோன் அல்லன் என்ற மற்றொரு பாடல் பேகனின் கொடைத்திறத்தையும் படைத்திறத்தையும் ஒருங்கே பறை சாற்றுகின்றது.

          கொடுத்தலில் பலவகை உண்டு. வறுமையை நோக்கிக் கொடுத்தல், மறுமையை நோக்கிக் கொடுத்தல், வரம்புடன் கொடுத்தல், வரம்பின்றிக் கொடுத்தல், காலமறிந்து கொடுத்தல், களிமிகுவதால் கொடுத்தல், தக்கார்க்குக் கொடுத்தல், தகுதியறிந்து கொடுத்தல், வேண்டுவன கொடுத்தல், கொள் எனக் கொடுத்தல், குறிப்புணர்ந்து கொடுத்தல் என்றெல்லாம் கொடையின் திறத்தைப் பலவகைப் படுத்தலாம்.

          கொடைமடம் படுதல் என்பது ஒரு வகை, அதாவது வள்ளன்மையில் எந்த வகையிலும் வேறுபாட்டை உணரமாட்டாத மடமை நிலையிலே கண்மூடித்தனமாகக் கொள்ளெனக் கொடுத்தலையே கொடைமடம் என்பர்.

          தரமறியாநிலையில் இரவலர்களுக்கு வரம்போல வாரி வழங்குவதையே வழக்கமாகக் கொண்ட வள்ளல் பேகன் என்று அறியலாம்.

          பேகன் இவ்வாறு அறிந்தவர் அறியாதவர், தகுந்தவர் தகுதியில்லாதவர், வல்லவர் அல்லவர், கற்றவர் கல்லாதவர் என்றெல்லாம் ஆராயாமல் வாரி வாரி வழங்கிய கொடைமடம் பட்ட நிகழ்ச்சி ஒன்று ஒருமுறை நடந்தது.

          அப்பொழுது கார்காலம், ஒரு நாள் பெருமழைக்குப் பிறகு வானம் சிறுசிறு மழைத்துளிகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக தூறலாகத் தெளித்துக் கொண்டிருந்தது. அந்த வேளையில் மயில் ஒன்று தன் அழகிய தோகையை விரித்து களிப்புடன் ஆடத் தொடங்கியது. மழைநீர்த் திவளைகள் படியவே அந்த மயிலும் அடிக்கடி தன் தோகையைச் சிலிர்த்துச் சிலிர்த்து வீசி ஆடிக் கொண்டிருந்தது.

          பேகன் அதைக் கண்டான். அப்பொழுது அவன் விலை உயர்ந்த, அழகிய வேலைப்பாடு அமைந்த போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தான்.

          தோகை விரித்தாடும் மயிலின் அழகில் ஒரு நிமிடம் தன்னை மறந்து ரசித்த பேகனின் உள்ளத்தில் மறு நிமிடமே கொடைமடத்தன்மை கொப்புளித்துச் சுரக்க ஆரம்பித்துவிட்டது. கார்முகில் கண்டு களிப்பு மிகுந்து தோகையைத் தன் இயல்புப்படிச் சிலிர்த்துக்கொண்டு ஆடுகின்ற அந்த மயில் குளிரால்தான் நடுங்குகிறதோ என்று எண்ணினான் அவன். உடனே அதனிடம் விரைந்தான். தான் போர்த்திக் கொண்டிருந்த போர்வையை எடுத்தான். ஆடும் அந்த மயிலின் மீது அன்புடன் போர்த்தினான்.

          தன்னை மறந்து நடனமாடிக் கொண்டிருந்த மயில் இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனவே போர்வையால் போர்த்தப்பட்டதும் அஞ்சி நடுங்கி தோகையைச் சுருக்கிக் கொண்டு ஒதுங்கிச் சென்றது.

          போர்வையின் சுமையாலும் அச்சம் காரணமாகவும் தோகையைச் சுருக்கிக் கொண்டு மயில் சென்ற காட்சி ‘கொடை மட’ பேகன் ஆஹா! குளிரின் கொடுமையில் இருந்து மயிலைக் காப்பாற்றிவிட்டோம், என்ற  மன நிறைவுடன் அரண்மனைக்குச் சென்றான்.

          பேகனின் இக்கொடைத் திறத்தை அறிந்த புலவர்களும் பாணர்களும் மிகவும் போற்றிப் பாராட்டினர்.

          முழுமதி போன்ற பேகனின் புகழில் மறு போன்ற ஒரு குறை இருக்கத்தான் செய்தது. பேகன் தன் மனைக்கிழத்தியாகிய கண்ணகியைப் பிரிந்து காதற் கிழத்தி ஒருத்தியுடன் ‘விடுதல் விரும்பா விரும்பினனாய்’ வாழ்ந்து வந்தான்.

          கோவலனைப் பிரிந்திருந்த கண்ணகி இருந்ததாக சிலப்பதிகாரத்தில் கூற்ப்பட்டிருப்பது போல் பேகனைப் பிரிந்த கண்ணகியும் கணவனின் நினைவால் கரைந்து கொண்டிருந்தாள்.

          ஆனால், சிலப்பதிகாரக் கண்ணகிக்கு அமையாது போன வாய்ப்பு இந்தக் கண்ணகிக்குக் காலத்தின் கருணையால் ஏற்பட்டது. செந்நாப் புலவர்கள் அம்முயற்சியை மேற்கொண்டனர்.

          ”கைவந் ஈகை கடுமான் பேக!

           யார்கொள் அளியள்தானே; நெடுநல்

           சுரனுழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்

           குணில்பாய் முரசின் இரங்கும் அருவி

           நளிஇருங் சிலம்பின் சீறூர் ஆங்கண்

           வாயில் தோன்றி வாழ்த்தி நின்று

           நின்னும்நின் மலையும் பாட, இன்னது

           இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்

           முலையகம் நனைப்ப விம்மிக்

           குழல்இணை வதுபோல் அழுதனள் பெரிதே!” (புறம் – 143)

          ஒரு நாள் மாலை வேளையில் நின் வீட்டின் முன் நின்று சிறிய யாழ் மீட்டி செவ்வழிப் பண்பாடினோம். அப்பொழுது நெய்தல் மலர் போன்ற கரிய கண்கள் கலங்கச் சிந்திய நீர்த்துளிகள் அணியுடைய அணியுடைய மார்பை நனைக்கும் நிலையில் ஒருத்தி வந்தாள். இளையவளே! நீ அம் நட்பை விரும்பும் பேகனுக்கு எவ்விதத்தில் உறவினை உடையவள்? என்று கேட்டோம். அவள் கைவிரல்களால் கண்ணீரைத் துடைத்தவாறு நான் இப்போது அவரது உறவினராக இல்லை. எம்போல் ஒருத்தியை விரும்பி விளங்கு புகழ் பேகன் ஒலிக்கும் தேரில் நாளும் நல்லூர் சென்று வருவதறியீதோ? என்றாள். எனவே, மயில் பனியால் நடுங்கும் என உன் போர்வையை உவந்து அளித்த  பேகனே!  கேட்பாயாக.

யாம் பசித்து உன்னை நாடி வரவில்லை. பசித்துயர்படும் சுற்றமும் எமக்கில்லை. யாழினை இனிதாக இசைத்து அருளை விரும்புவோனே... அறம் செய்வாயா!’ நின்னிடம் இரத்தல் எம் நலனுக்கன்று. இன்றிரவே தேரேறிச் செல்வாயாக; நின் நினைவால் பொறுத்தற்கரிய நோயுடையவளாக, காணச் சகிக்காத துயருடன் வாழும் நின் மனைவியை அடைவாயாக; அவளின் பிரிவு நோயைத் தீர்ப்பாயாக! இதுவே யாம் நின்னிடம் விரும்பும் பரிசிலாகும். என்று அடிமேல் அடிபோல் அறிவுறுத்தினர் பரணர்.

          அதுமட்டுமா! பெருங்குன்றூர்கிழார் எனும் பெரும் புலவரும்,

           ”நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும்

            அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை

            நெய்யோடு துறந்த மையிருங் கூந்தல்

            மண்ணுறு மணியின் மாசுஅற மண்ணிப்

            புதுமலர் களுல, இன்று பெயரின்

            அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே!”  (புறம்-147)

          ”ஆவியர் கோவே! யாம் செவ்வழிப் பண் இசைத்துவர கார் பொழிவது போல் கண்ணீர் கொட்ட தனித்து நின்ற அவளை எண்ணெய் அறியாக் கருங்கூந்தலைக் கழுவி புதுமலர் சூடி மகிழும் வண்ணம் இன்றே நீ புறப்பட்டாயானால் அதுவே எனக்குற்ற பரிசாகும். வேறு ஏதும் எமக்குத் தேவையில்லை” என்று பரிசிலை மறுத்துரைத்தார்.

          இவ்வாறு பேகனிடம் பரிசில் வேண்டி வந்த பைந்தமிழ்ப் புலவர்கள் அரிசில் கிழார், கபிலர் போன்ற அனைவரும், அவன் இல்லக் கிழத்தியை விட்டுப் பிரிந்து, காதற்கிழத்தி ஒருவளுடன் ஒட்டிக் குழைகிறான் என்று அறிய நேர்ந்ததும், ‘எமக்குப் பரிசில் வேண்டாம். நீ உன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதே பெரும்பரிசு’ என்று துணிவுடன் அறிவுரை கூறியிருக்கும் ஆற்றல் சங்ககாலப் புலவர்களுக்கே சொந்தமான தனித்திறமாகும்.

          ஆனால் பேகன் இவ்வற உரைகளை ஏற்று நடந்தானா இல்லையா என்பது சந்தேகமற அறிய முடியவில்லை.

          மண்ணுலகின் தாகம் தீர்க்கும் மேகம் போன்று பேகனின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...