கடல்வாழ்
உயிரினங்கள்
கடலில் இடத்திற்குத் தக, ஆழத்திற்குத் தக, பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன.
இன்றும் அவற்றை முழுமையாக அறிவியல் துணைகொண்டும் அறிய முடியவில்லை. அறிவியல் பெரிதும்
வளராத இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் நாட்டில் புலவர்கள் தாம் அறிந்தனவற்றுள்
சில உண்மைகளை மட்டுமே இலக்கியங்களில் வெளிப்படுத்தி உள்ளனர். அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும்
செய்திகளில், கடலில் வாழ் சுறவும் இறாலும் சிறப்பிடம் பெற்றுள்ளன. இவற்றோடு பனைமீன்,
ஆமை, இப்பி, சங்கு முதலியன பற்றிய சில குறிப்புகளும் காணப்படுகின்றன.
சுறா
சங்க இலக்கியங்களில், சுறா இனத்து மீன்கள்
பலவற்றுள்ளும் வாள் சுறா குறிப்படத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. இஃது, தலைப்பகுதியில்
நீண்ட கொம்பினைக் கொண்டிருக்கும். அதில் இருபுறமும் கூரிய முட்கள் இருக்கும். இதனை
‘Pristophorus shark’ என்பர். சங்க இலக்கியங்கள் இதனை எரிசுறா, கோட்சுறா, வயச்சுறா,
வாள்வாய்ச் சுறா எனப் பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றன. சங்க இலக்கியங்களில் பெருமீன்
என வழங்கப்படுவதும் இச்சுறா மீன்களே என்பர் டாக்டர்.தி.முத்து கண்ணப்பா அவர்கள்.
வெப்பக் கடற்பகுதிகளில் வாழும் இந்த மீன்
பற்றிச் சங்க இலக்கியம் கூறும் சில செய்திகள் வருமாறு: இம்மீன் கடலில் மேற்பரப்பல்
காணப்படுவது (குறுந்.318:1) சில வேளைகளில் தானே கடற்கரையில் ஒதுங்கிவிடுவதும் உண்டு.
(அகம்.10:11) இது வலிமை மிக்கது. (நற்.111:7) எதிரிகளைத் தன் கொம்பினால் தாக்கி வீழ்த்த
வல்லது (குறுந்.269:3-4), மீன் பிடி வலைகளைத்
தன் கொம்பினால் அறுத்துவிடும் (நற்.303:8-12), இச்சுறாவில் ஆண் இனத்தை ஏறு எனத் தொல்காப்பியம்
(1540) குறிப்பிடுகின்றது.
இறால்
சங்க இலக்கியங்கள் மிகுதியாகச் சுட்டப்படும்
மீனினம் இறால். கடலில் ஆழம் அற்ற பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வாழும் இவ்வகை மீன்களைப்
பற்றிச் சங்க இலக்கியம் கூறும் செய்திகள் வருமாறு: இவை இருப்பைப் பூவைப் போன்ற தலையை
உடையவை (நற்.111:1-2) , முற்றாத பசுமஞ்சள் கிழங்கின் புறத்தைப் போன்ற உட்புறத்தை உடையவை
(நற்.101:1-2), முட்கள் போன்ற காலினை உடையவை (குறுநட.109:1), பூட்டிய அம்பு விடுபடத்
தெரிக்கும் நாண்போலத் துள்ளும் இயல்பினை உடையவை
(அகம்.96:1-2), இவை அலைப்பரப்பிலே கூட்டம் கூட்டமாகக் காணப்படுபவை (அகம்.270:5).
பனைமீன்
வாய்வாழியாகக் கடல் நீரைப் பனை உயரத்திற்குப்
பீறிட்டு அடிக்கும் ஒருவகை மீன். இம்மீன் மதுரைக்காஞ்சியில் குறிப்பிடப்படுகிறது.
‘பனைமீன்
வழங்கும் வளைமேல் பரப்பு’ (மது.375) என்னும் அடியால், இம்மீன் கடலின் மேற்பரப்பில்
வாழ்வது என அறிய முடிகின்றது.
ஆமை
கடற்கரை மணலைத் தோண்டிப் பெண் ஆமை முட்டை
இடுவதும், அம் முட்டைகள் பொரித்து குஞ்சுகளாகும் வரை ஆண் ஆமை அவற்றைக் காவல் காக்கும்
என்ற செய்தியும் நப்பசலையார் பாடல்வழி (அகம்.160:3-8) அறிய முடிகிறது.
பண்டைத் தமிழ் மக்கள் அறிந்திருந்த கடல்
வாழ் உயிரினம் பற்றிய செய்திகளுள் பொருண்மை கருதி ஒரு சிலவே புலவர் பெருமக்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
நிறைவாக,
இன்றுபோல் அறிவியலில் பெருவளர்ச்சி பெறாத
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்தத் தமிழ் மக்கள் இன்று வளர்ந்து
வரும் ஆழ்கடல் ஆய்வுகள் தரும் முடிவுகளோடு ஒத்து அமையும் என்பது தெளிவு பெறுகிறது.
இவ்வகையில் அனுபவத்தால் பெற்ற அறிவினைப் பண்டைத் தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதை அறியலாம்.
Comments
Post a Comment