ஓதங்கள்
கடலில் காலவரையறைக்கு உட்பட்டு ஏற்படும் கடல் மட்ட ஏற்றத் தாழ்வுகளுக்கு ஓதங்கள்
(Tides) என்று பெயர். இவற்றை கடல் ஏற்றங்கள் என்று வழங்குவர்.
ஓதங்களுக்கு அடிப்படைக் காரணங்களாக விளங்குவன
ஞாயிறும் திங்களும். நாம் வாழும் புவி, ஞாயிறு, திங்கள் ஆகியவை ஒன்றையொன்று ஈர்க்கின்றன.
ஈர்ப்புவிசை, கோள்களின் பொருண்மைக்கு நேர் விகிதத்திலும், அவற்றின் இடையே உள்ள தொலைவிற்கு
எதிர் விகிதத்திலும் அமைந்துள்ளது. ஞாயிற்றின் பொருண்மை அதிகமாயினும், அது வெகு தொலைவில்
இருப்பதால், அதனினும் பொருண்மையில் பெரிதும் குறைந்திருப்பினும், வெகு அண்மையில் இருக்கும்
திங்களே, புவியில் உள்ள பொருள்களை ஈர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. ஆகவே, ஓதங்களுக்குக்
காரணங்களாக விளங்கும் ஞாயிறு, திங்கள், ஆகிய இரண்டும் திங்களே முதன்மையான காரணமாக அமைகின்றது.
இதனால்தான் நிறைமதி நாளிலும் மறைமதி நாளிலும் கடலில் ஓதங்கள் அளவில் மிக்கு விளங்குகின்றன.
இதனை வாழ்நாளில் கண்டு அனுபவித்தப் பண்டைத் தமிழர்கள் திங்களுக்கும் ஓதங்களுக்கும்
நெருங்கிய தொடர்பு இருப்பதை,
”திங்களும் திகழ்வான் ஏர்தரும்; இளநீர்ப்
பொங்குதிரைப் புணரியும் பாடோ வாதே
ஒலிசிறந்த ஓதமும் பெயரும்” (நற்.335:1-3)
”உலவுத்திரை யோதம்” (நற்.31:11)
என்ற சங்கப்
பாடல்கள் மூலம் அறியலாம்.
ஓதங்களும் பயன்களும்
ஆழம் குறைவான துறைமுகங்களில் அமைந்திருந்த
வாணிகக் கப்பல்கள் எளிதில் சென்று வர இவ்வோதங்கள் பெருந்துணையாக இருந்துள்ளன. இக்கூற்றுக்குச்
சான்றுகளாக,
”வாலிதை எடுத்த வலிதரு வங்கம்
…… …….
…….. …….
பெருங்கடல்குட்டத்துப் புலவுத்திரை யோதம்
இருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்து
உருகெழு பானாள் வருவன” (மது.536-542)
”…… ….. ….
……. ….கழிய
ஓதமொடு பெயரும் துறைவன்” (ஐங் . 155:3-4)
எனவரும் சங்க
இலக்கிய அடிகளைக் கொள்ளலாம்.
மேலும், இவ்வோதங்கள், கடலில் வாழ் மீன்கள்
கழிகளிலும் ஆறுகளிலும் புகுதற்குக் காரணங்களாக அமைந்துள்ளதை,
”இறவொடு வந்த கோதையொடு பெயரும்
பெருங்கடல்
ஓதம் போல” (அகம்.133:12-13)
என்னும் சங்கப்பாடல்
அடிகள் வெளிப்படுத்துகின்றன.
Comments
Post a Comment