Skip to main content

பறம்புமலைப் பாரி

 

பறம்புமலைப் பாரி


        சங்க காலம் தமிழுக்கு மட்டுமல்ல. தமிழர்களுக்கும் தங்க காலம். இல்லை என்று இங்கு அங்கு அலைந்து நாடி தளர்ந்த தேடி வரும் இரவலர்களுக்கு இல்லை எனாது கொள்ளை கொள்ளையாக அள்ளிக் கொடுத்த அருங்குணக் கொடை வள்ளல்களை வரமாகக் கொண்ட காலம்.

          அவ்வாறு சங்க காலத்தில் விளங்கிய கொடை வள்ளல்களில் குறிப்பிட்டுப் புகழப்படுபவர்கள் எழுவர். அவர்கள் கடையெழு வள்ளல்கள் என்று சங்க காலப் புலவர்களால் போற்றப்பட்டனர்.

         அவர்களில் பாரி முதன்மையானவனாகப் புகழப்படுபவன். ஓரறிவு உயிரான முல்லைக் கொடிக்கே தான் ஏறிவந்த தேரினை நன்கு படரவிட்டு எல்லையில்லாப் பெருமையைக் கொண்டவன்.

          பாண்டிய நாட்டில், இன்று பிரான்மலை என்ற பெயரோடு விளங்கும் குன்று பாரி ஆண்ட பறம்பு மலையாகும். அம்மலையில் மக்கள் எள்ளளவும் சோம்பலின்றி உழைப்பவர்களாக இருந்தார்கள். மலைப்படு பொருள்களைப் பயிர் செய்வதில் அவரகள் ஆர்வமுற்று இருந்தனர். தினை, வரகு, எள், கிழங்கு வகைகள் போன்றவற்றை விளைவித்து அவற்றுடன் மா, பலா, வாழை போன்ற கனிவகைகளையும் கொண்டு சென்று மலையடிவாரத்திலுள்ள ஊர்களில் விற்றும் பண்டம் மாற்றியும் தங்களுக்குத் தேவையான மாற்றுப் பொருள்களைப் பெற்றுவருவார்கள்.

    சேர சோழ பாண்டியவர்களைப் போல முடியுடைய மன்னனாக பாரி இருக்கவில்லை. அவன் ஆட்சியில் கீழ் பெரிய ராஜ்ய மண்டலம் இல்லை. குறுநில மன்னர்களில் ஒருவனாகத்தான் அவன் இருந்தான்.

          பாரி அத்தகைய வேளிர்களில் ஒருவன். அவன் படை வீரத்தில் மட்டுமின்றி கொடை தீரத்திலும் கொடிகட்டிப் பறந்தான். எனவே அவனை நாடி புலவர்கள், பாணர்கள், கூத்தர்கள், விறலியர்கள், மற்றும் இரவலர்கள் வந்த வண்ணமாக இருப்பர். பொதுவாக இவர்கள் பழமரத்தை நாடிச் செல்லும் பறவைகள் போலவும், தேனைத் தேடிச் செல்லும் வண்டுகளைப் போலவும் வள்ளல்கள் எங்கு எங்கு இருக்கிறார்கள் என்று அறிந்து அங்கு சென்று அவர்களைப் போற்றியும் வாழ்த்தியும் கூறிப் பாராட்டுவார்கள். வள்ளல்கள் வாரி வழங்குவதைப் பெறுவார்கள், பசிப் பிணியோடு வறுமைப் பேயையும் அவ்வப்போது விரட்டுவார்கள். எனவே இரவலர்களைப் பறம்பு நாடு ஒரு பரிசுப் பெட்டகமாக ஈர்த்தது. பரிசில் வேண்டி கூட்டம் கூட்டமாக வருபவர்களை வரவேற்றது.

          தன்னை நாடி வந்தவர்களுக்குப் பாரி பொன்னையும் பொருளையும் வாரி வாரி வழங்கினான். தரமறிந்தும் திறம் தெரிந்தும் கொடுத்தான். குதிரை கொடுப்பான், யானை கொடுப்பான், தேர் கொடுப்பான், அவற்றோடு பட்டு, பொருளுடன் பொன்னால் செய்யப்பட்ட பூவையும் கொடுப்பான். இதனால் பாரியின் புகழ் எங்கும் பரவியது.

          அப்போது மதுரைமா நகரில் பாண்டியனின் ஆதரவில் தமிழ்ச் சங்கம் நடைபெற்று வந்தது. அவர்களுள் தலைவராக விளங்கியவர் கபிலர். இணையற்ற புலமையையும் கரையற்ற பெருமைகளையும் கொண்டு விளங்கிய அப்புலவரைப் பற்றிக் கேள்வியுற்ற பாரி அச்செந்நாப் புலவருடன் தன் வாழ்நாள் முழுவதுமே நட்பு கொண்டிருக்க விரும்பினான்.

          ”எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

           திண்ணிய ராகப் பெறின்” (குறள் -666)

மாமன்னன் பாண்டியனிடம் மாபெரும் மதிப்புடன் இருந்த கபிலருக்கும் பாரியைக் காணும் எண்ணம் இலேசாக விதையூன்றிவிட்டது. பரிசில் பெற்று பாண்டி நாட்டுக்கு வரும் புலவர்களும் பாணர்களும் பாரியின் பெருமையைச் சொல்லச் சொல்ல கபிலரின் விருப்பம் வேர்விட்டு விசுவரூபமாக வளரந்து விட்டது. அவரும் தருணம் நோக்கித் தவம் இருப்பதுபோல் காத்திருந்தார்.

      அவராக வருவார் என்று சில காலம் காத்திருந்த பாரி ஒருநாள் தமிழ்ச் சான்றோர் ஒருவரை, தன் விருப்பத்தைத் தூது அனுப்பி வைத்தார். அதன்படி பாண்டிநாடு சென்ற அவர் கபிலரைக் கண்டு வணங்கி நாளும் தமிழ்ச் சான்றோர்களின் வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருந்து வரவேற்று அவர்களோடு அளவளாவி மகிழ்வதையே தன் வாழ்வின் பயனாகக் கொண்ட பாரிவேலுக்கு இந்நாள் வரை தங்களைச் சந்திக்காதது பெரிய குறையாக இருக்கிறது.

          வானில் விண்மீன்கள் எவ்வளவு சுடர்விட்டால் என்ன? நிலவும் தோன்றி ஒளிர்ந்தால் என்ன? ஒரு கதிரவனுக்கு ஒப்பாகுமா? புலவர்களுக்குள் கதிரவனைப் போல் விளங்கும் தங்களின் சந்திப்பு இதுவரை கிடைக்காததை எண்ணி மன்னர் பெரிதும் மனம் வாடுகிறார். மங்காப் புகழ் மதுரையையும் பொங்கும் புகழ் பாண்டிய நாட்டினையும் விட்டுவர தங்களுக்கு மனம் விரும்பாது என்றாலும் தங்கள் நினைவிலேயே தன்னை  அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் பாரிவேளின் உணர்வுக்காக தாங்கள் தயவு செய்து பறம்பு நாட்டுக்கு வருகை புரிய வேண்டும். இது பாரிவேளின் அன்பு வேண்டுகோள் என்று மனம் நெகிழ்வுறக் கூறினார்.

    ‘மாணிக்கக்கல் மிகச் சிறியது. ஆனால் அதன் பெருமையும் சிறப்பும் அனைவரும் அறிவாரன்றோ! நானும் பாரியின் புலவர்களைப் போற்றும் பணியை நன்கு அறிந்துள்ளேன். எனக்கும் பாரிவேளைக் காண விருப்பமே’ என்று கபிலர் தம் விருப்பத்தையும் தெரிவித்தார்.

        கபிலரின் விருப்பத்தை அறிந்தபோது பாரிவேள் மிகவும் மகிழ்ந்து போனான். அத்துடன் அதுநாள்வரை காணாத வரவேற்புக்கு ஏற்பாடு செய்தான். பெரிய மாமன்னரை வரவேற்பது போல் உற்றார், உறவினர் ஊர்மக்கள் புடைசூழ வரவேற்றான். ‘அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ என்ற சங்கத் தமிழ் மொழிக்கு ஒரு தக்க எடுத்துக்காட்டாக அவ்விருவரின் சந்திப்பு விளங்கியது.

      இரண்டு நாட்கள் தங்கி பரம்புமலை ஊர் எழிலிலும் பாரிவேளின் உள்ளமாகிய நெஞ்சின் நலனிலும் திளைத்த கபிலர் பாண்டி நாட்டுக்குப் புறப்பட்டபோது பிரியாவிடை அவர்களைப் பெரிதாய் வருத்தியது.

          அது பிரியாவிடை அன்றோ? எனவே சில நாட்களுக்கு மேல் இருவராலும் பிரிந்திருக்க முடியவில்லை. கபிலர் யோசித்தார். பாரி குறுநில மன்னன். மதுரைக்கு வந்து தன்னுடன் தங்க இயலாது. ஆகையால் தானேதான் அங்கு சென்று இருக்கவேண்டும் என்று முடிவுக்கு வந்தான். அதன்படி அவரே பறம்புநாடு சென்று பாரிக்கு ஆசானாகவும் ஆருயிர் நண்பராகவும் பெருமை பொலிய இருக்கலானார்.

    பாரிவேள் அவ்வப்போது தன்னாட்டு மக்களை நேரில் சந்திக்கவும் மலைவளங்களைக் காணவும் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி சென்று தம் மக்களையும் நாட்டு வளங்களையும் கண்டு களித்து வருவதில் அவனுக்கு ஒரு அளவிலா ஆனந்தம் சுரக்கும்.

          ஒருமுறை பாரி அதுபோல் தனியே தேரில் மலைவளமாகப் பூத்துக் குலுங்கும் இயற்கை எழிலைக் காணப் புறப்பட்டான். அப்படிச் செல்லும் வழியல் ஒரு முல்லைக் கொடி குறுக்கிட்டது. அது செழித்து வளர்ந்து காற்றில் அலைந்து, பற்றுக் கோடில்லாமல் தள்ளாடிக் கொண்டிருந்தது. ஆதரவற்ற அனாதை போல, வாடிச் சோர்ந்து தவிக்கம் ஒரு பரிதாபத்துக்குரிய வறியவனைப் போலத் தோன்றிய அக்கொடி பாரியின் கவனத்தை ஈர்த்தது. ஈர்த்ததுடன் உடனே இயங்கவும் செய்தது.

          தேரைவிட்டு இறங்கினார் பாரி. கொடிக்கு அருகில் கொண்டு சென்றார். குதிரைகளை அவிழ்த்து அப்பால் விட்டான். பிறகு அத்தேரின் மேல் கொழு கொம்பிற்கு அலையும் அம்முல்லைக் கொடியை எடுத்து பாங்கறப் படரவிட்டான்.

          தன்னை நாடிவரும் இரவலர்களுக்கும், புலவர்களுக்கும், பாணர்களுக்கும், விறலியர்களுக்கும், கூத்தர்களுக்கும் அவர்களது நிலையறிந்து பொன்னை, பொருளை, குதிரையை, யானையை ஏன்? ஊரையே பரிசாகக் கொடுத்துவக்கும் பாரி அன்று. படர்வதற்குப் பற்று இன்றி தவித்த முல்லைக் கொடிக்குத் தன் தேரையே தந்தான். பின் நடந்தான்.

      நடந்தே தன் அரண்மனையை அடைந்தான் பாரி. ஓரறிவு உயிருக்கும் இரங்கும் அவனது ஒப்பற்ற கொடைத்திறம் ஊர் மக்களோடு மற்ற நாட்டு மக்களிடமும் பரவியது.

      முல்லைக்குத் தேரைத் தந்ததால் எல்லையில்லா அளவுக்கு பாரி புகழுறுவதைக் கண்டு பலர் மகிழ்ந்தனர் என்றாலும் ஒரு சிலர் அழுக்காறு கொண்டனர். அப்படி பொறாமைக் கொண்டவர்களில் முதன்மையானவர்களாக முடியுடை மூவேந்தர்கள் ஆனார்கள்.

          பாரிக்கு இரண்டு மகள்கள். பெயர் அங்கவை, சங்கவை. அறிவும் அழகும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள். பாரிக்கு அழகான இரு பருவப் பெண்கள் இருப்பதை அறிந்த பாண்டியன் அவன் மகளிர் இருவரையும் தனக்கு மணம் புரிவிக்க வேண்டும் என்று ஓலைவாயிலாக செய்தியை அனுப்பினான். பாரியின் மகளிரை மணப்பதனால் தனக்கும் சிறப்பு உண்டாகும் என்று பாண்டியன் நினைத்தான். ஆனால் அவன் முன்பே மணம் முடிந்தவன். பட்டத்தரிசியாக ஒருத்தியும், இச்சைக்குரியவர்களாக பலரும் அவன் அரண்மனையில் இருந்தனர். மணம் பெறுவதனால் உறவு கிடைத்தால் தன் புகழ் மேலும் பெருகும். உறவுக்கு இடமில்லை என்றானால் அதுவே போருக்கு வழிவகுக்கும் அல்லவா!

          பாண்டியனின் ஓலையைக் கண்ட காரி கபிலரிடமும் தன் மகளிடமும் காட்டினான். அந்தப் பாண்டியனின் அந்தப்புரத்திலுள்ள மந்தையோடு மந்தையாக வாழச் செய்வதற்கு நான் என் கண்மணிகளை வளர்க்கவில்லை’ என்று சீரினான்.

        கபிலர் அவன் கருத்தை ஆதரித்தார். அங்கவை, சங்கவையும் தன் தந்தையின் எண்ணத்திற்கு எரு இடுவதுபோல் ஒத்த கருத்துடையர்களாக இருந்தனர்.

          எனவே பாரியும் தன்னுடைய ஒப்பா நிலையை ஓலை மூலம் பாண்டியனுக்குத் தெரியப்படுத்தினான்.

          பாண்டியனின் ஓலைக் கண்ட பாண்டியன் கொதித்தெழுந்தான். சுண்டைக்காய் நாட்டான் பூசணிக்காய் அளவுள்ள நாட்டானிடம் மறுப்புத் தெரிவிப்பதா?

        பெண்ணா? போரா? என்ற உள் எண்ணத்தில் ஆரம்பித்த மூவேந்தர்களுடைய திட்டத்தில் பெண்ணில்லை போர்தான் என்ற முடிவு தெளிவாகிவிட்டது.

          மூவேந்தர்களும் கூடினர். ஆலோசித்தனர். அழுக்காறு நிரம்பிய நெஞ்சிலே எப்படி ஏற்றமிகு எண்ணம் வரும்? போர் செய்து பாரியை வேறோடு அழிப்பது என்று முடிவு செய்தனர். போருக்குக் காரணம் பாரி பாண்டியனுக்குப் பெண் தராததல்ல, புகழில் தங்களைவிட மிஞ்சிவிட்டதே என்பது அவர்களது உள்ளத்தின் ஒரு மூலை உணராமலில்லை.

          மூவேந்தர்கள் ஒன்று கூடி சில நாட்களில் பறம்புமலை, பெரும்படையால் முற்றுகையிடப்பட்டது.

      பாரிவேள் தன் பலத்தையும் மாற்றார் பலத்தையும் நன்கு எண்ணிப் பார்த்தான். எனவே அரண்களை எல்லாம் செப்பம் செய்தான். எதிரிகள் எவ்வழியிலும் எளிதில் நுழைய முடியாமல் செய்ததோடு எதிரிகளை மறைந்து தாக்கும் மறைவிடங்களையும் அமைத்தான். மூவேந்தர்களோடு எதிர்நின்று போர் செய்வது இயலாத செயலாகவே பட்டது. ஆகையால் தற்காப்புப் பணியில் தன் கவனம் முழுவதும் செலுத்தினான்.

          ஒரு நாள் ஆயிற்று. ஒரு வாரம் ஆயிற்று.  ஒரு மாதம் ஆயிற்று.

          மாதமும் ஒருமையிலிருந்து பன்மையாயிற்று. படைகள் முன்னேற முடியாதபடி அவர்களின் வெறி நெறி மீறியது. கள்ளத்தாலேனும் பாரியை வீழ்த்த முடியாதா என்று அவர்களின் மூளை உருகியது.

          ஒருநாள் மலையடிவாரத்திலிருந்து மூவேந்தர்களின் போர் வீரர்கள் கூடாரம் ஒன்றில் ஒரு ஓலை வந்து விழுந்தது. உடனே வீரர்கள் அதை எடுத்துச் சென்று மன்னர்களிடம் தந்தார்கள். ஓ .. பாரி சரணடைந்து விட்டதாகத் தெரிவித்து இருக்கிறானோ’ என்று முதலில் உள்ளம் மகிழ்ந்து போன மன்னர்கள் அதைப் படித்தபோது ஏமாற்றத்தின் எல்லைக்குத் தள்ளப்பட்டார்கள்.

          கபிலரின் பாடல் அவர்களுக்குச் செய்தியாக அதில் இருந்தது.

           ”நனிகோள் முரசின் மூவிரும் முற்றினும்

          உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே”

           ஒன்றே,

          சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;

          இரண்டே,

          தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;

          மூன்றே,

          கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே;

          நான்கே,

          அணிநிற ஓரி பாய்தலின்மீது அழிந்து

         திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே;

         வான்கண் அகற்றும் அவன் மலையே, வானத்து

         மீன்கண் அற்றுஅதன் கனையே,

         மரந்தொறும் பிணித்த களிற்றினீர் ஆயினும்

         புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்

         தாளிற் கொள்ளலிர்; வாளில் தாரலன்;

          யான்அறி குவன்அது கொள்ளு மாறே;

          சுகிர்புரி நரம்பின் கீறியாழ் பண்ணி

          விரைஒலி கூந்தல்நும் விறலியர் பின்வர

          ஆடினிர் பாடினிர் செலினே

          நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே”   (புறம் -109)

          செறிந்த முரசுகளையுமடைய நீங்கள் மூன்று பேரும் முற்றுகையிட்டாலும் இந்த மலை உழவர் உழுது பயிர் பண்ணாதனவாகிய நான்கு உணவுப் பண்டங்களை, ஒன்று எங்கும் நிறைந்திருக்கும் மூங்கில்களில் விளையும் நெல், இரண்டு – எங்கும் பழுத்திருக்கும் பலாப்பழங்கள். மூன்று – எங்கும் படர்ந்திருக்கும் வள்ளிக் கொடிகளின் பெரிய பெரிய கழங்குகள். நான்கு – எல்லா மரங்களிலும் இருக்கும் தேனடைகள் உடையதாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, வானத்தைப் போன்றது அவன் மலைப்பகுதி, அதிலுள்ள விண்மீன்களைப் போன்றன அருவிகள். இத்தகைய இடத்தில் நீங்கள் பல யானைகளைக் கொண்ட படையுடன் வந்திருந்தாலும், எங்கும் தேர்ப்படையைப் பரப்பி இருந்தாலும் அவனை உங்களால் வெற்றிக் கொள்ள முடியாது. வார்போரில் தோற்றுத் தருவானல்லன். பறம்பு மலையை அவனிடமிருந்து எளிதிற் கொள்ளும் விதம் எனக்குத் தெரியும்; அதைக் கூறுகிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்.

          நீங்கள் நரம்புடைய யாழை மீட்ட, உன் மனைவியர் விறலியர்போல பின் தொடர பாடி ஆடல் பாடலைக் கண்டு மகிழ்ந்த பறம்பு மலையொடு பறம்பு நாட்டையுமே தந்துவிடுவான் பரிசாக. நாடும் குன்றும் ஒருங்கே உங்கள் வசமாகிவிடும்’ – என்ற பொருளுடைய அப்பாடல் வரிகளை மூவேந்தரும் பல முறைப் படித்தனர். படிக்கப்படிக்க அவர்களது மூளையில் ஒரு மின்னல் வெட்டியது.

          பாரியின் வீழ்ச்சிக்குக் குழி கண்டுவிட்ட மூவேந்தர் பழிகொண்ட மனம் விழியில்லா மதியால் ஆர்ப்பரித்தது.

          என்றாலும் அவர்கள் மனம் எளிதில் ஒப்பவில்லை. காரணம், வஞ்சகத்தால் பழி வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணமல்ல; நாம் போயா அவனிடம் பிச்சைபோல பரிசு கேட்பது? மாமன்னர்கள், சக்கரவர்த்திகள், பல குறுநில மன்னர்கள் ஏவலர்களைப் போல் கொண்டவர்கள், பெரிய நிலப் பரப்புக்கு ஆட்சியுரிமை உடையவர்கள்… அப்படிப்பட்ட நாமா போய் அவனிடம் இரப்பது? – என்ற எண்ணமே அவர்களை மேலும் சில நாள் தயங்கச் செய்து முற்றுமையை நீடிக்க விட்டது.

          ஒரு நாள் மீ்ண்டும் ஓர் ஓலை வந்தது. மீண்டும் கபிலரே எழுதி இருந்தார். ஆனால் பல வரிகளில் அல்ல, சில வரிகளில் நான்கே வரிகளில்,

          ”அளிதோ தானே பேரிருங் குன்றே!

           வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;

           நீலத்து இணைமலர் புரையும் உண்கண்

           கிணைமகட்கு எளிதால், பாடினள் வரினே” (புறம் -111)

       இப்பெரிய குன்று இரக்கத்திற் குரியது. வேலினால் வெல்லுதல் அரசர்களுக்கு அரிய செயல். நீலோற்பவ மலர்களை யொத்தமையுண்ட கண்களையுடைய கிணைப் பறை கொட்டும் பெண்கள் பாடிக் கொண்டு வந்தால் இம்மலை எளிதில் கிடைக்கும் – என்ற பொருளுடைய அப்பாடலைக் கண்ட மூவேந்தர்கள் மீண்டும் முகம்முட்ட அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தார்கள்.

     முற்றுகை முயற்சி முட்டாள்தனமாது என்று அவர்களுக்குத் தெளிவாகிவிட்டது. எனவே சூழ்ச்சியில் வெல்ல திட்டமிட ஆரம்பித்தனர். சூழ்ச்சி என்று எண்ணமிட்ட பிறகு படையெதற்கு, முற்றுகை எதற்கு? ஆகையால் அவைகள் திரும்பப் பெறப்பட்டன. பறம்புத்தாய் தன் கட்டிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியில் சிலிர்த்தாள்.

   வஞ்சகத்தால் வெல்லக் கருதிவிட்ட மூவேந்தர்களுக்குக் கொஞ்சி வழிவகைகளைக் கூறுவதுபோல் ‘ஆடினர் பாடினிர் செலினே நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே’ என்ற வரிகள் அவர்கள் நெஞ்சில் ஓங்கி ஒலித்தன.

          இன்னும் என்ன? வழியும் புரிந்துவிட்டது. செயல்பட வேண்டியது தானே?

          கபிலர் பாரியுடன் இல்லாத நேரத்தில் மூவேந்தர்களால் அனுப்பப்பட்ட வஞ்சகவேடம் பூண்ட ஒற்றர்கள் பாணர்கள் போல் பாரியை அடைந்தனர். உண்மைப் பாணர்களும் தோற்கும் வகையில் யாழிசையாலும் வாய்ப்பாட்டாலும் பாரியைப் போற்றினர். புகழ் போதையில் பாரி மிதக்க ஆரம்பித்த தருணத்தில் – தனித்த நிலையில் இருந்தபோது ஒப்பனையில் வந்த அந்த ஒற்றர்களில் ஒருவனது கூர்வாள் பாரியை இரத்தவாரியில் மிதக்கச் செய்துவிட்டது. அடுத்த கணம் அவர்கள் அங்கில்லை. எங்கோ எப்படியோ பறந்துவிட்டனர்.

          ஓரறிவு உயிரான முல்லைக்குத் தேர் கொடுத்து புகழின் உச்சியை அடைந்த பாரியின் உயிர் எமனின் எல்லைக்குள் ஆறறிவு உயிரான மூவேந்தரால் நெட்டித் தள்ளப்பட்டுவிட்டது.

          ஊர் மக்கள் ஒருங்குகூடி ஓலமிட்டனர். செய்தி அறிந்து விரைந்து வந்த கபிலர் கதறினார். பறம்புமலை வரம்பு இல்லா வேதனையில் வெந்தது.

          ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ? இது உலகம் உணர்த்தி வரும் உண்மையன்றோ?

      தன்னைத் தேற்றிக் கொண்ட கபிலர், அங்கவை, சங்கவையான பாரி மகளிரையும் ஆறுதல்படுத்தினார். அத்துடனா! பருவம் எய்தியுள்ள அந்நங்கைகளுக்கு மணம் முடிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

         

       

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...