Skip to main content

உழைப்பால் உயர்ந்தவர்கள் - பழந்தமிழர்!

 

உழைப்பால் உயர்ந்தவர்கள் - பழந்தமிழர்!

        பாரியை ஒத்த வள்ளல்கள் தோன்றி வளர்ந்த நாடு நம் தமிழ்நாடு. இத்தகைய வள்ளல்கள் செல்வத்தின் பயன் எது என்பதை வாழ்ந்து காட்டினர். முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரிவினையும், அப் பிரிவினையால் ஏற்படும் துன்பங்களும் அக்காலத்தில் இல்லை.  செல்வர் வாழ்க்கைக்கு ஒரு உதாரணமாக, கோவலன் பெருஞ்செல்வர் குடும்பத்தில் பிறந்தவன், மணம் ஆன பிறகு தனிக்குடும்பம் நடத்தி வந்தான். தானே வாணிகமும் செய்தான். மாதவியோடு சேர்ந்து குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்தான்.

மலையத்தனைச் செல்வத்தை அழிப்பினும், மாதவியை வெறுத்து வந்த பின்னர்த் தந்தையைக் கண்டிருப்பானேயாகில் மறுபடியும் மலையத்தனைச் செல்வத்தைப் பெற்று மீண்டும் வாணிகம் தொடங்கியிருக்கலாம். ஆனால், மானமுடைய அவன் அவ்வழியை மேற்கொள்ளவில்லை. மீண்டும் தனது உழைப்பால் பொருள் தேடவேண்டும் என்று நினைத்தானே தவிர, எளிமையாக மானத்தை இழந்து பொருளைப் பெறவேண்டும் என்று எண்ணவில்லை.

இன்று கள்ளச் சந்தையில் பொருள் தேடும் பெரியோர் நிறைந்த நம் நாட்டில் இத்தகைய உதாரணம் எங்ஙனம் வரவேற்கப்படுமோ அறியோம்! ஏழையாயினும், நடுத்தர வகுப்பாராயினும், உழைப்பையே அணிகலமாகக் கொண்டு வாழ்ந்தனர் பழந்தமிழர். உழைப்பு அல்லது முயற்சியை ‘தாள்’ என்ற சொல்லால் குறித்தனர். முயற்சியற்ற அரசரை எள்ளி நகையாடினர்.

”மண்டு அமர் பரிக்கும் மதனுடை நோன் தாள்” (புறம்,75)

எனவரும் அடி பழந்தமிழர் முயற்சிப் பெருக்கைக் காட்டும்.

இடைக்குல மடந்தையின் பொருளாதாரம்

        நடுத்தர வகுப்பில் உள்ள குடும்பங்கள் இடையர் குலப் பெண்கள் மாடுகள் வைத்துப் பால், மோர், நெய் முதலியவற்றை விற்று வாழ்க்கை நடத்தினார்கள். குடும்பத்தை நடத்தும் பொறுப்புப் பெண்ணுக்குத் தான் உள்ளது. ஆண் மகனுக்கு இல்லை. இது கருதியே வீட்டை ஆள்கின்றவள் என்ற பொருள் தரும் ‘இல்லாள்’ என்ற ஒரு சொல் தமிழில் இருக்கிறது. ஆனால், அதற்கு மறுதலையாக ‘இல்லாளன்’ என்ற சொல்லை உண்டாக்கவில்லை.

 குடும்பத்தை நடத்தும் பெண் ஒருத்தி, விடியற்காலத்தில் எழுந்து மோரைக் கடைந்து மோர், நெய்  இரண்டையும் விற்று குடும்பத்தையும், சுற்றத்தாரையும் காப்பாற்றுகிறாள். பட்டினிக் கிடந்து பொருளைச் சேகரிக்க வேண்டும் என்ற பேதைமை தமிழ் நாட்டில் இல்லை. ஆனால் வருமானம் முழுவதையும் செலவிட்டுக் கடனாளியாகிற வழக்கமும் இல்லை. அறிவுடைய ஒருவன் அளவறிந்து செலவு செய்வான். இதைக் கருதியே வள்ளுவப் பெருந்தகையார்,

”ஆகாறு அளவுஇட்டி தாயினுங் கேடில்லை

 போகாறு அகலாக் கடை”  (குறள்.478)

என்று கூறினார். ‘வருமானம் குறைவாயிருப்பினும் கெடுதலில்லை. செலவு அதனைவிட மேற்போகாது விடத்து’ என்பதே இதன் பொருள். மோர் விற்ற பொருளால் குடும்பத்தைக் காப்பாற்றிய நம் ஆயர்குல மடந்தை, நெய் விற்றப் பொருளைப் பொன்னை வாங்காமல் கறவை மாடுகளையும், பசுக்களையும் வாங்கினாளாம். தனது தொழிலுக்கு ஏற்ற முறையில் பயன்படக் கூடியவையான கறவை மாடுகளை வாங்கினாள். வகையறிந்து, பயன் தரும் வழியில் முதலீடு செய்து (Investing) பயன் அடைந்தாள். இதனைப் பெரும்பாணாற்றுப்படையில்,

          ”நள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப்

            புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி

             .......  .....    .......   .......

         குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்

         அளைவிலை உணவின் கிளையுடன் அருத்தி

         நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்

         எருமை நல்லான் கருநாகு பெறுஉம்

         மடிவாய்க் கோவலர்”   (பெ.பா.155-166)

இடைக்குல மடந்தையின் வாழ்க்கை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைக்கு ஓர் உதாரணமாக அமைகின்றது.

       மிகத் தேர்ந்தப் பொருளியல் வல்லுநர் எதிர்கால நலன் நோக்கிக் கைப்பொருளை முதலீடு செய்வது போல் இவளும் செய்கிறாள். நெய் விற்ற பணத்தைப் பசும்பொன் கட்டியாக மாற்றாமல், எருமை, நல் ஆன், கருநாகு (கன்றுகள்) வாங்குகிறாளாம்.

          கன்றுகளாக வாங்கினால் விலை குறைவு. அணிகலன்கள் வாங்குவதை விடப் பலமடங்கு பலன் தரும். மேலும் கன்றுகளாக வாங்குவதால் அன்றாடச் செலவு என்று ஒன்று அமைவதில்லை. புல்வெளிகள் நிறைந்த நாட்டில், அவை படுபுல் ஆர்ந்து வளவிய, கொழுகொழுக் கன்றுகளாக ஆகும். இடைக்குல மடந்தையின் பசு, எருமைக் கன்றுகளில் இடம்பெறும் முதலீடு ஐந்து, ஆறு ஆண்டுகளில் முதலீட்டைப் போல் பன்மடங்கு பெருகிவிடும்.

       இதனை இன்றைய நடைமுறைப்படிச் சொல்ல வேண்டுமானால் (Cumulative Deposit) எனலாம். பெருங்கல்வி அறிவில்லாத ஓர் இடைக்குல மடந்தை இத்துணைச் சிறந்த காரியத்தைச் செய்கிறாள் என்பதனால் அது அவர்களுடைய வாழ்க்கை முறையை மிக விளக்கமாக எடுத்துக் காட்டுகின்றது என்று அறிய முடிகிறது.

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...