Skip to main content

அதியமான்

 

அதியமான்



          தர்மபுரி  என்று தற்போது வழங்கப்படும் ஊர்ப்பகுதி அக்காலத்தில் தகடூர் என்று வழங்கப்பட்டு வந்தது. இவ்வூருக்கு அடுத்து ஒரு மலைப்பகுதி இருக்கிறது. அது பார்ப்பதற்கு குதிரையைப் போன்று தோன்றுவதால் அதைக் குதிரைமலை என்று கூறப்பட்டது.

          பண்டைக்காலத் தமிழகத்தில் சேர சோழ பாண்டிய நாடுகளைப் போன்று நடுநாடு, தொண்டை நாடு, கொங்குநாடு முதலானவையும் சிறப்புற்று விளங்கின. தற்போது உள்ள சேலம், தர்மபுரி, கோயம்புத்தூர், நீலகிரி என்பன போன்ற மாவட்டங்கள் அப்பொழுது கொங்கு நாடாக விளங்கின. இக்கொங்கு வளநாடு சங்க காலத்தில் தன்கீழ் குறுநிலப் பகுதிகளைக் கொண்டிருந்தது. தகடூர் நாடு என்பது அந்தக் குறுநிலப் பகுதிகளில் ஒன்றாகும்.

          தகடூர் நாட்டின் தலைநகரம் தகடூர். இது வானுற ஓங்கிய கோட்டையைக் கொண்டதாய் விளங்கியதோடு மதிலரண், அகழரண், காட்டரண் போன்ற பிற பாதுகாப்பு நிலைகளையும் சிறப்புற பெற்று இருக்கிறது.

          இத்தகு தன்னகரில்லாத தகடூர் நாட்டின் மன்னனே அதியமான் நெடுமான் அஞ்சி. அதிகமான் ‘கணைய மரம் போன்று நீண்டு உருண்டதும் தாளைச் சென்று பொருந்துகின்றதுமான நீண்ட வன்கை கொண்ட பெருந்திறல்’ மழவர்களின் தலைவனுமாவான்.

          அதியமான் முழவெனப் பருத்த தோள்களை உடையவன். எட்டுத் தேர்களை ஒரே நாளில் செய்ய வல்ல ஒருவர் முப்பது நாட்கள் முயன்று திட்டமிட்டு ஒரு திண்ணிய தேர்க் காலை மட்டும் செய்தால் அது எந்த அளவுக்கு வலிமையும் வனப்பும் கொண்டதாக இருக்குமோ அதுபோன்று உரமும் உருவமும் கொண்டவன். பெருமையும் புகழும் பெற்றவன். போர் என்றால் காரம் இடம், மாற்றார் வலிமை போன்றவற்றை நன்கு அறிந்து செயல்படும் திறம் பெற்றவன். ஆற்றல் மிகு கடாவால் போக முடியாத துறையும் உளதோ? அதுபோல் நீ களம் புகுந்தால் உன்னை எதிர்ப்பாரும் இருக்கிறார்களா? என்றும்,

          ”போற்றுமின் மறவீர்! சாற்றதும் நும்மை

         ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்

         தான்படு சின்னீர் களிறுஅட்டு வீழ்க்கும்

         ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ

         நுண்பல் கருமம் நினையாது

          இளைமன் என்றிகழின் பெறலரிது ஆடே!” (புறம் -104)

          ஊர்ச் சிறுவர் நீராடிக் கலக்கும் மிகச் சிற்றோடை ஆயினும் அதனுள் வந்த யானையை முதலை கொன்று வீழ்த்திவிடும். அதுபோல் வன்மையாளனான் அதியனை இளையவன் என்று கூறிக்கொண்டு எவராது போருக்கு வந்தால் வெல்லல் அரிது  என்றும் ஔவையாரால் அவன் ஆற்றல் கூறப்படுகிறது.

          இவ்வாறு பேராற்றலும் பெரு வீரமும் கொண்டிருந்த அதியமான்  நெடுமான் அஞ்சி கோபுரத்தில் பொலியும் கும்ப கலசம் போன்று இரவலர்க்கு இல்லை எனாது கொடுக்கும் எல்லையில் அருள் உள்ளத்தையும் பெற்றிருந்தான்.

          ஒருநாள் அதியமான் மலையில் வேட்டையாடச் சென்றான். வேட்டை முழந்து ஓய்வு பெறும்போது அவன் கண்கள் இயற்கை எழிலைக் கண்டு களிக்க ஆரம்பித்தன. ஒரு மலைப்பிளவு அவனது பார்வையில் பட்டது. அதன் உச்சியில் ஒரு நெல்லிமரம் இருந்தது. அந்த மரத்தில் ஓரே ஒரு நெல்லிக்கனி மட்டும் இருந்தது அவன் கவனத்தை ஈர்த்தது.

          இதென்ன! மரமோ மலையின் உச்சியில் இருக்கிறது. அம்மரத்தையொட்டி கீழே பிளவு. அம்மரத்திலோ ஒரே ஒரு கனி மட்டும் இருக்கிறது. பூத்துக்கனிகளாகக் குலுங்க வேண்டிய பசுமையான மரத்தில் ஒரே ஒரு கனியா?!

          அதியமான் அரிதில் முயன்று அக்கனியைப் பறித்தான் என்றாலும் நன்கு செழித்த மரத்தில் ஒரே ஒரு கனி மட்டும் இருந்த வியப்பு அடங்காததால் அங்கு வாழும் மலை வாழ்பவர்களிடம் கேட்டான்.

          அவர்களோ, ’இந்த நெல்லிமரம் அபூர்வமானது, ஆண்டுக்கு ஒரு கனியை மட்டும் தருவது. அந்த ஒரு கனி கூட எல்லாருடைய கண்ணுக்கும் தெரியாது. முனிவர்கள், தவசிகள் போன்ற சிறந்தவர்களுக்கு மட்டும் பார்வையில் படும். அந்தக் கனிக்குத் தனி ஆற்றல் இருக்கிறது. யார் அக்கனியை உண்கிறார்களோ அவர் நெடுநாள் ஆயுளுடன் இருப்பார். இக்கனி உங்கள் கண்ணுக்குத் தோன்றியது என்றால், நீங்கள் அதை உண்டு நெடுநாள் வாழவேண்டும் என்பது இறைவனின் விருப்பம் போலும்’ என்றனர்.

          ஒரு சாதாரண மனிதனாக இருந்தால் அப்படியா? என்று அக்கனியை அப்போதே உண்டுவிட ஆரம்பித்திருப்பான். ஆனால் அதியமானின் மனம் மாறான நிலையில் எண்ண ஆரம்பித்தது. தான் உண்டு பலநாள் வாழ்வதை விட தகுதிமிக்க ஒரு சான்றோர் உண்டால் எத்தனை நன்மை ஏற்படும். அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரோடு வாழும் மக்களுக்கு அந்தச் சான்றோரின் அறிவுரை எத்தனை வழிகாட்டியாக அமையும் என்றெல்லாம் எண்ணினான். எண்ணியதோடு மட்டுமின்றி அப்படியே அக்கனியைத் தான் உண்ணாமல் ஒரு செந்நாப் புலவருக்குத் தர தீர்மானித்தான்.

          அரண்மனைக்கு வந்ததும் ஔவையாரை அழைத்துத் தான் அரிதிற் பெற்ற அருமைமிக்க நெல்லிக்கனியை அன்புடன் தந்தான். உடனே உண்ணவும் செய்தான்.

          ஔவையும் ஆஹா அருமை என்று அக்கனியைச் சுவைத்து உண்டார். ‘ஏது இக்கனி?’ என்று கேட்டார் ஔவையார். இப்படியொரு கனியை ஏன் அதியமான் அவனே உண்ணாமல் தனக்குக் கொடுக்க வேண்டும். என்ற ஐயம் – ஒரு கேள்வி அப்பொழுது தான் தலை தூக்கியது அவருக்கு.

         உண்டபின் ஔவை கேட்டதால் அதியமான் அக்கனியைப்பற்றி தான் கண்டதையும் கேட்டதையும் கூறினான்.

          அதியமான் கூறியதைக் கேட்ட ஔவையாருக்கு மனம் நெகிழ்ந்தது. உடனே அவரது தமிழுள்ளம்,

          ”வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்

         களம்படக் கடந்த கழலதொடி தடக்கை

         ஆர்கவி நறவின் அதியர் கோமான்

         போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!

         பால்புரை பிறைநுதல் பொலந்தார் சென்னி

         நீல மணிமிடற்று ஒருவன் போல

         மன்னுக பெரும நீயே! தொன்னிலைப்

         பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட

         சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது

         ஆதல் நின்னகத்து அடக்கிச்

         சாதல் நீங்க எமக்கு ஈத்தணையே!”  (புறம்-91)

          அதியர் கோமானாகிய அஞ்சியே! பெரிய மலையினிடத்து உச்சியில் வளர்ந்த நெல்லி மரத்தில் பழுத்த நெல்லிக்கனியை அதனுடைய சிறப்புத் தன்மை இத்தகையது என்று முன்னதாக எனக்கு அறிவியாது உன் மனத்துக்குள்ளே அடக்கிக் கொண்டு இறப்பு நீங்க எனக்குக் கொடுத்து உண்ணச் செய்தாயே! நீ, பாலொத்த பிறைநுதல் பொலியும் திருமுடியினையும் நீலமணி போன்ற பொலியும் திருக்கழுத்தையும் உடைய ஒப்பற்ற இறைவனான சிவபெருமானைப் போன்று பல்லாண்டு வாழ்வாயாக!’ என்றும்,

          ”யாழெகும் கொள்ளா, பொழுதொடும்புணரா

        பொருள் அறி வாரா ஆயினும் தந்தையர்க்கு

        அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை

        என் வாய்ச் சொல்லும் அன்ன, ஒன்னார்

        கடிமதில் அரண்பல கடந்து

        நெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே!” (புறம் -92)

          ‘யாழிசையும் போன்றிராத, காலத்தொடும் கூடியிராத பொருளும் அறிய முடியாத மழலைச் சொற்கள் தந்தையர் அருளுதல் போன்றவையாதல் போல் என் சொற்களையும் நீ அவ்வாறே கருதி அருள்கின்றாய்!’ என்றும் வாழ்த்தியது.

அதியன் - சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை

        தகடூரை அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சி செய்து கொண்டிருந்தபோது சேர நாட்டை சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்பான் ஆண்டு வந்தான்.  அதியமானுக்கு ஔவைபோல், சேரமானுக்கு அரிசில்கிழார் எனும் செந்நாப் புலவர்   பதிற்றுப்பத்து எட்டாம் பத்தில்  பாடியுள்ள பத்துப்பாடல்கள் பறைசாற்றும்.

          சேரமான் வெற்றி மேல் வெற்றி கொண்டு சேரமானின் நிலப்பரப்பு, ஆட்சி எல்லை தகடூரை நெருங்கிவிடவே அதியனின் நெஞ்சில் ஒரு அச்சம் துளிர்விட ஆரம்பித்தது. எனவே தான் முந்திக்கொள்ள அதியமானின் வீரம் வேகம் கொண்டது. எனவே தனக்குத் துணையாக ஆயர் தலைவனான கழுவுள் என்பானோடு சேரமான் இரும்பொறையை எதிர்க்க முனைந்தான். உடனே சேரனது படைகள் தகடூரை முற்றுகை இட்டதோடு ஊர்களைத் தீக்கிரையாக்கி பல படைத்தலைவர்களையும் பிடித்துச் சென்று சேரன்முன் நிறுத்தின.

          சேரமானின் போராற்றலையும், படைவலிமையும் அறிந்த அரிசில்கிழார் சேரனின் அனுமதி பெற்றுத் தகடூரை அடைந்தார். அதியமானைக் கண்டார். சேரனின் போராற்றலையும் படை ஆற்றலையும் எடுத்துக் கூறி சேரனை எதிர்த்து போரிடாமல் இருப்பதே அதியனுக்கும் தகடூர் மக்களுக்கும் நன்மை தருவதாகும் என்று நயம்பட எடுத்துக் கூறினார். ஆனால்,

          ”ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

         சூழினும் தான்முந் துறும்” – குறள்-380

என்ற குறளுக்கு ஏற்ப அரிசில்கிழாரின் அறிவுரையைக் அறவுரையாக ஏற்க மறுத்துவிட்டான்.

          ஆனால் என்ன காரணத்தினாலோ பகைவர் தன்னாட்டை முற்றுகையிட்டிருப்பதை அறிந்தும் அதியமான் அவர்களை எதிர்த்துப் போரிடத் தோன்றாதவனாய் கோட்டைக்குள் செயலற்று இருந்தான்.

          அதியமானின் வீரத்தையும் வெற்றிச் சிறப்பையும் நன்கு அறிந்தவரான ஔவையாரால் அதியன் இப்படி சோர்வுற்றவனாய் சும்மா இருப்பதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. நின் நாட்டைக் கைப்பற்ற நினைக்கும் போரிடும் வீரர்களும் உளரோ? நீ போர்க்களம் புகுந்தால் எவர்தாம் எதிர் நின்று எதிர்ப்பார்கள் என்று அதியனின் நீறுபூத்த வீரக்கனலை ஊதிச் சூடாக்கினார்.

          அடங்கியிருந்த அதியமானின் வீரக்கனல் ஆற்றலோடு அனல் வீச ஆரம்பித்தது. அதியமான் உடனே புதுவேகத்துடன் படைகளுடன் போர்க்களம் புகுந்தான்.

          படைகளோடு படைகள் மோதின. மலைகளோடு மலைகள் மோதுவது யானைகளோடு யானைகள் மோதின. இனத்தோடு இனம் சினத்தோடு மோதின. குருதி வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டவைகள் மிதந்தன.

          கொற்றவை வெற்றிமாலையை யாருக்கு அணிவது என்று திணறுவது போல் போர் பேரழிவுற நடந்தது. அதியமான் படையில் சேதம் அதிகரிக்க ஆரம்பித்தது. முடிவில் அதியமான் சேரமானின் வாள் பாய்ந்து வீர சொர்க்கத்தை அடைந்தான்.

          தன்னால் கொலையுண்ட அதியமான் நெடுமானஞ்சிக்கு இறுதியாகச் செய்யும் கடன்களையும் சேரமானே முன்னின்று செய்தான். வீரத்திலும் ஈரத்திலும் சிறந்த அதியமானின் வீரமனம் ‘எதிரியேயானாலும் அவனது ஏற்றமிகு ஆற்றலைப் போற்றும் மாற்றுக்குறையாப் பண்பாளனான சேரமானின் நெஞ்சில் கழிவிரக்கத்தைச் சுரக்கச் செய்தது போலும்.

ஔவையாரின் நிலை

       ஔவையாருக்கு அதியமானின் வீரமரணம் ஆறாத் துயரத்தைத் தந்தது.

          ”எரிபுனக் குறவன் குறையல் அன்ன

         கரிபுற விறகின் ஈம ஓள்அழல்

        குறுகினும் குறுகுக, குறுகாது சென்று

        விசும்புற நீளினும் நீள்க; பசுங்கதிர்த்

        திங்கள் அன்ன வெண்குடை

        ஒண்ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே!” (புறம்-231)

 

        ”ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?

        இனிப் பாடுநரும் இல்லை

        பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை;

        பனித்துறைப் பகன்றை நறைகொள் மாமலர்

        சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று

        ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!” (புறம்-235)

          விறகுகள் அடுக்கிய ஈமத்தீயிலே அதியமானின் அருமை உடல் உள்ளது. அந்த ஈமத்தீ அவன் உடலை எரிக்காமல் சிறுத்தாலும் சிறுக்கட்டும். அல்லது வானம் முட்டி நீண்டாலும் நீளட்டும். ஆனால் நிலவொத்த வெண்கொற்றக் குடையுடைய ஆதவனை யொத்த அதியமானின் புகழோ என்றும் அழியாததாகும்.

        தந்தையாகிக் காத்தவன் எங்கே உள்ளனன்? இனி யாடுவோரும் இல்லை. பாடுபவர்க்குக் கொடுப்போரும் இல்லை. நீர்த்துறையிலுள்ள பெரும் பூ எவர்க்கும் பயன்படாது போவது போல் வறிதே மாய்ந்துபோகும் உயிர்களே பலவாகிவிடும் என்றேல்லாம் அவர் பாடிப் புலம்பினார்.

          அத்துடன் அதியமானுக்கு ‘நடுகல்’ நட்டுப் படையலிட்டுப் போற்றிய போதும்,

          ”இல்லா கியரோ காலை மாலை!

         அல்லா கியர் யான் வாழும் நாளே!

         நடுகல் பீலி சூட்டி நார்அரி

        சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ

        கோடுஉயர் பிறங்குமலை கெழீஇய

        நாடுஉடன் கொடுப்பவும் கொள்ளா தோனே!  (புறம்-232)

          உயர்ந்த மலைகளைக் கொண்ட நாடு முழுவதைக் கொடுப்பினும் கொள்ளாத பண்பாளன் அவனுக்காக நடுகல்லை நாட்டி மாலையும் சூட்டி மதுவையும் வைத்துப் படைக்கின்றீர்களோ! அவன் ஏற்றுக் கொள்வானோ? அவனோ மறைந்தான். காலை மாலை இல்லாதுபோல் என் வாழ்நாளும் ஆயிற்றே; அன்று அஞ்சியின் மேல்கொண்ட  அளவற்ற பற்றினால் நெஞ்சம் குமுறினார்.

     பூவோடு சேர்ந்த நார்’ போன்று செந்நாப் புலவர் ஔவையாரோடு பற்றுக் கொண்ட அதியமான் நெடுமானஞ்சியின் புகழ் தமிழுலகில் என்றும் நிலைத்து நிற்கும்.

         

         

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...