புலவர்களும்
கூத்துகளும்
அரசர் மட்டுமன்றி புலவர் பலரும் கூத்தோடு தொடர்பு கொண்டவர்களாக விளங்கினர். கூத்தர் பெயர்பெற்ற
புலவர் பலரைத் தமிழிலக்கியங்களில் காணுகின்றோம். மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார், மதுரை காருலாவியன்
கூத்தனார், மதுரைக்கூத்தனார், வேம்பத்தூர்
கண்ணன் கூத்தன், மதுரைத் தமிழ்க்
கூத்தன், நாகன் தேவனார்
என்போர் கூத்தால் பெயர் பெற்ற புலவர்கள்.
கூத்தரில்
பல்வேறு பிரிவினர் இலக்கியங்களில் குறிக்கப் பெறுகின்றனர். அவை,
· விறலியர்
· வயிரியர்
· கோடியர்
· கண்ணுளர்
· ஆரியர்
விறலியர்
எண்
வகையான மெய்ப்பாடுகளையும் புலப்படுத்தும் விறல்(வீரம், திறமை) மிக்கவளே விறலி எனப்பட்டாள். விறலியாற்றுப்படை என்ற துறை தமிழிலக்கியத்தில் உள்ளது. பின்னணி இசைக்கேற்ப அடிப்பெயர்த்துத் தோள் அசைத்து விறலி
ஆடுவாள். அவளது ஆடல்
மயிலின் ஆடல் போல் அழகு பொலிந்திருக்கும். இயற்கை எழிலோடு செயற்கை அழகும் சேர பொலிவுடன் விறலி காட்சி
தருவாள். தலைமகள் ஒருத்தி
விறலியின் எழில் கண்டு வியந்தாள். தானும் விறலி போன்று இயங்க நினைத்து நிழற் கண்ணாடி நோக்கித்
தன் அணிகளைத் திருத்திக் கொண்டாள் என்று பரிபாடல் (21:20-24) பகருகின்றது. கூத்துக்கள்
நிகழ்த்த வேண்டி இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்வாள் விறலி. அவ்வாறு செல்லும்
பொழுது அயலிட நிகழ்ச்சிகளுக்குத் தனித்துச் செல்வதில்லை. கூத்தரோ, பாணரோ வழி காட்டிய வண்ணம் முன்னே செல்ல விறலி பின்னே சென்றாள். விறலியர் கற்பு
தமிழிலக்கியங்களில் பல இடங்களில் வியந்து பேசப்பட்டுள்ளது.
‘முல்லை சான்ற கற்பின் மெல்லியல்’ எனச் சிறுபாணாற்றுப்படை (30) இயம்புகிறது. நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிற வேளையில், பாறை மருங்கில்
தனது பிணையை மயில்முன் வைத்தே தழுவும் கல்லாக் கடுவன் போன்று முழவோன் மிக நெருங்கி
நிற்க விறலி கூத்து நிகழ்த்தினாள் என்பதனை அகம் (353:2-6) கூறுகின்றது. இவ்வாறு ஆடவரோடு
பல காலம் நெருங்கிப் பழகித் தங்கள் கூத்துத் தொழிலை நிகழ்த்தியபோதும் கற்புநிலை தவறாது
விறலியர் வாழ்ந்தனர்.
வயிரியர்
வயிர் என்பது வால் போல் நீண்டு வளைந்து இருக்கும் கொம்புக் கருவி. சங்கோடு ஒத்த இசைக்கருவி எனலாம்.
இக்கருவியைப் பயன்படுத்திக் கூத்து நிகழ்த்தியவர் வயிரியர் எனப்பட்டனர். பாணர் புலவரில்
வேறானவர் வயிரியர். இதனை,
”பாணர் வருக, பாட்டியர் வருக
யாணர்ப்
புலவரோடு வயிரியர் வருக” (ம.காஞ்சி 749-750)
என்னும் மதுரைக்காஞ்சி
வரிகளால் உணரலாம்.
கோடியர்
”கோடு என்பது வயிரில் வேறுபட்ட இசைக்கருவி.
கோடு வாய் வைத்துக் கொடுமணி இயக்கி” என்று
வரும் திருமுருகாற்றுப்படை (246) குறிப்பால் கோடு என்பது ஊதுகருவி எனப் புலனாகிறது.
இக்கருவியின் இசைக்கு ஆடவல்ல கூத்தர்கள் கோடியர் என அழைக்கப்பட்டனர். பறை என்றும்ம்
கருவியினையும், இசை முழவினையும், நரம்பிசைக் கருவிகளையும் கோடியர் இசைக்க வல்லவர்களாய்
இருந்தனர். ஆயினும் வாயால் ஊதி இசை உண்டாக்கும் கருவி இசைக்கே முதலிடம் தந்தவர்கள்
இவர்கள். இதனை, முதுவாய்க் கோடியர் என்ற பட்டினப்பாலை (253) வரியின் மூலமும் உணரலாம்.
காடுகளைக் கடந்து வெகுதூரம் வரை சென்று கூத்து நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் வண்ணம் அவர்களுக்குத்
தொலைவிடங்களிலிருந்தும் அழைப்பு இருந்தன. கோடியர் பற்றி குறிப்பு வரும் இடங்களிலெல்லாம்
அவர்கள் காடு கடந்து செல்வதாகவே கூறப்படுகின்றது.
கண்ணுளர்
கண்ணுளர் என்று குறிக்கப் பெறுபவர்கள் ‘சாந்திக்
கூத்தினர்’ என்று அடியார்க்கு நல்லார் உரைக்கின்றனர். ‘கண்ணுளாளர்’ என்று
இவர்களை மதங்கர் என்றும் அடியார்க்கு நல்லார் நவில்கின்றார். மாதங்கி நடனம்
தெலுங்கு நாட்டில் நிகழ்ந்த நடனம் என்பது அறிஞர் கருத்து. கம்பர் சடகோபர் அந்தாதியில்
மாதங்கி பற்றிக் குறித்துள்ளார். மதங்கர் என்ற பெயருடன் மதங்க சூளாமணி என்ற நூலின்
பெயரும் ஒப்பு நோக்கி ஆராயத்தக்கது.
ஆரியர்
கழைக் கூத்தரே சங்க காலத்தில் ஆரியர் என்று அழைக்கப்பட்டனர். ஆரியர் கயிறாடு
பறையில் என்று குறுந்தொகையில் (7) வரும் குறிப்பால் ஆரியர் கழைக்கூத்தர் என்பது புலனாகிறது.
இரண்டு கழைகளின் நடுவே கட்டிய கயிற்றில் பறைத்தாளத்திற்கு ஏற்ப ஆரியர் ஆடினர். இவர்கள்
தொம்பறவர் என்றும் குறிக்கப்டுவதாக அபிதான சிந்தாமணி கூறுகின்றது. ஆரியக் கூத்தினைப்
பெண்பாலர் ஆடியதாக இலக்கியங்கள் காட்டுகின்றன. ஆயினும் பெண்பால் கழைக்கூத்தர்க்குத்
தனிப்பெயர் எதுவும் இல்லை. அவர்களும் ஆரியர் என்றே அழைக்கப்பட்டனர்.
Comments
Post a Comment