விருந்து - அன்றும் இன்றும்
பண்பாட்டைப் போற்றி வாழ்ந்தவர் பழந்தமிழர். இன்றும் அப்பண்பாட்டின்
மரபுநிலை தொடர்கிறது. அவர்கள் போற்றிய பண்புகளில் தலையாய பண்பு விருந்தோம்பல். விருந்து
என்றால் புதுமை, புதியவர் என்று பொருள். ‘விருந்தே புதுமை’ என்பர் தொல்காப்பியர். இன்று
உற்றார், உறவினர், நண்பர்களையும் விருந்து என்கிறோம். ஆயின், பழங்காலத்தில் முன் அறியாதவர்களாய்
வீடு தேடி வருவோரை விருந்தினர் எனப் பெற்றனர். அக்கால மக்கள் அவர்களை அகமும் முகமும்
மலர வரவேற்று விருந்தோம்பினர்.
பண்டமாற்றுமுறை வழக்கிலிருந்த அக்காலத்தில்
போக்குவரத்து வசதிகளும் இல்லாத சூழ்நிலை நிலவியது. எனவே இரவலர்கள் மட்டுமின்றி ஏனையோரும்
ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கால்நடையாகவே நடந்து செல்ல வேண்டிருந்தது. உணவு
விடுதிகளும் இல்லாத காரணத்தினால் உண்டிக்கும் உறையுளுக்கும் அனைவரும் செல்லும் ஊர்களையே
நம்ப வேண்டியிருந்தது. ஆகவே புதிதாக வருவோர்க்குப் பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்தமையான்
விருந்தோம்பும் பண்பாடு தமிழகத்து இல்லங்களில் உருவாயிற்று.
இப்பண்பாடு தொல்காப்பயிர் காலத்திலேயே போற்றப் பெற்றது என்பதை,
”புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப்
பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும்
வேளா ணெதிரும் விருந்தின் கண்ணும்” (தொல்.களவியல் – 17)
என்று களவியலிலும்,
”விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும்”
(தொல்.கற்பியல்-5)
என்று கற்பியலிலும்
இடம்பெற்றுள்ள நூற்பாக்களால் அறியலாம்.
விருந்தோம்பும்
முறை
விருந்தோம்புவார்க்கு வேண்டிய இன்றியமையாப்
பண்புகள் அகமலர்ச்சி, முகமலர்ச்சி, இன்சொல் ஆகியன. சிறுகுடி கிழான் பண்ணன் இல்லம்
விருந்தோம்பும் பண்புச் சிறப்பின் காரணமாக, பசிப்பிணி மருத்துவன் இல்லம் என்று
புகழப்பெற்றது.
விருந்தினரைப் பேணும் முறையினை,
”விருந்தினனாக ஒருவன்வந் தெதிரின்
வியத்தல்நல் மொழியினி துரைத்தல்
திருந்துற நோக்கல் வருகென உரைத்தல்
எழுதல்முன் மகிழ்வன செப்பல்
பொருந்துமற் றவன்றன் அருகுற இருத்தல்
போமெனின் பின்செல்வ தாதல்
புரிந்துதல்
முகமன் வழங்கல் இவ்ஒன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே”
என்ற விவேக
சிந்தாமணிப் பாடல் விருந்தோம்பும் பண்புகளை விளக்கிக் காட்டுகிறது.
விருந்தோம்புதலின்
பயன்
இல்லறத்தின் சீரிய பண்பாகத் திகழ்ந்த விருந்தோம்பலுக்குத் தனியொரு அதிகாரம்
அமைத்தப் பெருமை வள்ளுவரைச் சாரும். விருந்தோம்பலை வேள்வி என்று குறிப்பிடும் வள்ளுவர்,
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று” (குறள் -83)
என்று விருந்தோம்புதலின்
பயனை எடுத்துரைப்பர்.
விருந்தோம்புபவரின் செல்வம் நல்வழிப் படுதலால்
மகிழ்ச்சியும் விளையும். அவன் செல்வமும் பெருகும்.
தொன்றுதொட்டு நிகழ்ந்து வரும் விருந்தோம்பல்
பண்பாடு தமிழரின் அடிப்படைப் பண்பாடு என்றும், தொடர்ந்து வரும் பண்பாடு எனலாம். பற்றாக்குறை,
விலைவாசி ஏற்றம், வேலையின்மை போன்ற நெருக்கடி நிலைகள் ஏற்பட்டபோதும் இன்றும் நம் மக்கள்
விருந்து போற்றுவதைத் தவறாது தம் கடமையாகச் செய்து வருகின்றனர். நல்லவர் பலரைக் காண்பதற்கும்
அவர் சொல் கேட்பதற்கும் அவரோடு பழகுவதற்கும் விரும்தோம்பல் வழி வகுக்கிறது. வாழ்க்கைக்கு
இன்றியமையாப் பண்பான அன்பையும் அறிவையும் வளர்க்கும் வாயிலாக விருந்தோம்பற் பண்பாடு
விளங்குகிறது.
Comments
Post a Comment