குற்ற மனமும் குற்றச் செயலும்
ஒரு மனிதன் குற்றம் செய்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. தனிமனிதன் இயல்பு, குடும்பச் சூழல், சமுதாயச் சூழல், நாட்டுச் சூழல் எனச் சூழல்களும் குற்றங்கள் தோன்றுவதற்குக் காரணங்களாக உள்ளன. எனவே தண்டனை
வழங்குவதற்கு அக்குற்றம் செய்யப்பட்ட சூழலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுதல் வேண்டும்.
ஒருவரது
செயலைக் குற்றச் செயல் என்று தீர்மானிப்பதற்கு அவரது மனநிலையே முக்கியப் பங்கு வகிக்கின்றது. குற்றமனமில்லாச்
செயல், குற்றம் எனக்
கொள்ளப்படுவது இல்லை. இது ஆங்கிலச் சட்டநெறியின் சால்பினை எடுத்துரைக்கும் சட்டக்
கோட்பாடு ஆகும் இக்கருத்தை,
”ACTUS NON FACIT REUM
NISI MENS SIT REA”
என்னும் இலத்தீன் முதுமொழி
விளக்குகின்றது. இந்த முதுமொழியை,
குற்றமில்லாச் செயல்
குற்றமென ஆவதில்லை
என்று மொழி பெயர்க்கலாம். இதன் பொருள், மற்றவர்க்குத்
தீமை செய்யவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செய்யப்படும் கொடுஞ்செயலே குற்றச் செயலாகக்
கருதப்படும் என்பதாகும். இவ்வாறு குற்ற நோக்கத்தோடு செய்யப்படும் செயலால் விளையும்
தீமைக்கு உயர்ந்த அளவிலான தண்டனை வழங்கப்படுகின்றது.
பிறருக்கு
மனத்தளவில் துன்பம் செய்யக் கருதாமல் இருக்கவேண்டும் என்னும் கருத்தைத் திருக்குறளும்
வலியுறுத்துகின்றது. செயலை மட்டும் பார்க்காமல் செயலைத் தூண்டிய மனத்தில் ‘குற்ற உணர்வும்’ , குற்றம் செய்யும்
நோக்கமும் இருந்ததா என்பதை ஆராய்தல் வேண்டும். இதனை,
”எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணா செய்யாமை
தலை”
என்னும் குறள் ”மனத்தோடு உளவாகின்ற
இன்னாத செயல்களை எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம். ஈண்டு மனத்தான்
ஆகாதவழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம்” என்று குறிப்பிடுகின்றனர். எனவே இங்கு குற்றமனத்துடன் செய்யாத செயலைப் பாவம் (குற்றச்செயல்) இல்லை என்று
உரைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குற்றமனத்துடன்
செய்யப்படாத செயலைப் பழந்தமிழரும் குற்றச் செயலாகக் கருதவில்லை என்பதற்கு பெண் கொலை
புரிந்த நன்னன் வரலாறு சான்றாக அமைகின்றது.
நன்னன்
என்னும் சங்ககால மன்னன் இருந்தான். ஒருநாள் அவன் நாட்டுக் காவல் மரக்கனி (மாங்கனி) நீரில் மிதந்து
வந்தது. மிதந்து வந்தது
காவல் மரக்கனி என்று அறியாத கருவுற்ற பெண் ஒருத்தி, அதை எடுத்து உண்டாள். இதைக் கண்ட காவலர்கள் அப்பெண்ணை அரசினின் முன்நிறுத்தினர். அவன் அப்பெண்ணிற்குக்
கொலைத் தண்டனை வழங்கிவிட்டான்.
காவல்
மரக்கனியை உண்பது அரசக் குற்றமாகும். அவ்வரசனை அவமதிக்கும் நோக்கத்தோடு அச்செயலைச் செய்யும் போதுதான்
அது குற்றமாகும். ஆனால் மிதந்து வந்தது காவல் மரக்கனி என்பதை அறியாமலும், அரசனை அவமதிக்க
வேண்டும் என்ற குற்ற நோக்கம் இன்றியும் செய்யப்பட்ட செயலுக்காக, அப்பெண்ணிற்குக்
கொலைத் தண்டனை வழங்கியது தவறு என்பதைச் சுட்டிக்காட்டவே அம்மன்னனைச் சங்க இலக்கியங்கள், ‘பெண் கொலைபுரிந்த
நன்னன்’ என்று பழித்துக்
கூறுகின்றன.
மேலும், சாத்தனார் என்னும்
சங்கப்புலவர், இளம் கண்டீரக்கோவைக்
காணச் சென்றார். அப்போது இளவிச்சிக்
கோவும் அங்கு வந்திருந்தான். இருவரும் புலவரை இனிது வரவேற்றனர். ஆனால், அப்புலவர் இளம்
கண்டீரக்கோவைத் தழுவிக் கொண்டார். இளவிச்சுக்கோவைத் தழுவவில்லை. அதற்குப் புலவர், ”நின் முன்னோருள் ஒருவன்
பெண்கொலை புரிந்த நன்னன் ஆவான்” என்று மறுமொழி
விடுத்தார்.
இந்நிகழ்ச்சி
நன்னன் வழங்கிய தண்டனைக்குச் சான்றோரிடையே எதிர்ப்பும் வெறுப்பும் இருந்து வந்தமையைப்
புலப்படுத்துகிறது. மேலும் குற்றமனமில்லாமல் செய்த செயலுக்குத் தண்டனை வழங்கிய
தமிழ் மன்னனைத் தமிழ் இலக்கியம் இன்று வரையில் பழித்துக் கூறுவதையும் கருத்தில் கொள்ள
வேண்டும்.
பார்வை நூல்கள்
1. இலக்கியங்களில் சட்ட நெறிகள் - முனைவர் மு.முத்துவேலு, அருள் பதிப்பகம், சென்னை-600 078.
Comments
Post a Comment