ஓவியங்கள்
ஓவியக்கலை ஒரு சிறந்த கலை. அதன் மூலம் மக்களுக்குப் பல உண்மைகளை உணர்ந்த முடியும்.
ஓவியங்களின் வாயிலாக மக்களிடம் ஒழுக்கத்தை வளர்க்க முடியும். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும்
கல்வி பயிற்சியும் கொடுக்க முடியும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர்.
ஆகையால் அவர்கள் ஓவியக் கலையை வளர்த்து வந்தனர்.
இன்றும் பல கோயில்களிலே மண்டங்களிலே பல ஓவியங்கள்
தீட்டியிருப்பதைக் காண்கின்றோம். அவ்வோவியங்கள் பெரும்பாலும் புராண வரலாறுகளைக் குறிப்பனவாகவே
யிருக்கின்றன. பண்டைக் காலத்திலும், மக்கள் கூடும் கோயில் மண்டபங்களிலே ஓவியங்கள் தீட்டி
வைக்கும் வழக்கம் இருந்தது. அக்காலத்து ஓவியங்களிலே தெய்வங்களைப்பற்றிய வரலாறுகளை நினைவூட்டும்
ஓவியங்களும் இருந்தன. மக்களுக்கு அறிவூட்டும் இயற்கை நிகழ்ச்சிகளைக் காட்டும் ஓவியங்களும்
இருந்தன. நல்லொழுக்கத்தைப் போதிக்கும் கதைகளை விளக்கும் ஓவியங்களும் எழுதப்பட்டிருந்தன.
இவ்வுண்மையைப் பரிபாடலிலே பார்க்கலாம்.
சூரியனுடன் சேர்ந்து வருகின்ற சந்திரன்,
நட்சத்திரங்கள் ஆகியவை சக்கரவாள கிரியைச் சுற்றிவருவதைப் போல் எழுதப்பட்டுள்ள கிரகங்களின்
காட்சியைக் காண்பர். அக்காட்சியிலே ஈடுபட்டு நிற்பார்கள் சிலர்.
இரதியையும் மன்மதனையும் இணை பிரியாத நிலையே
அமைத்து எழுதப்பட்டிருக்கும் ஓவியத்தைக் காண்பர். கணவனுடன் சேர்ந்து செல்லும் பெண்கள்
அதைக் கண்டவுடன் இவள்தான் இரதியா? இவன்தான் மன்மதனா? என்று கேட்பர். கணவன்மார்கள் ஆம்
என்று அக்கேள்விக்கு விடையளிப்பர்.
அகலியையின் வரலாற்றை விளக்கி எழுதப்பட்டிருக்கும்
ஓவியத்தைக் காண்பர். இவன் இந்திரனாகிய பூனை, இவள் அகலிகை, அகலிகையைக் கற்பழித்த இந்திரன்,
வெளியில் வரும் சமயத்தில் சென்ற கவுதமன். சினங்கொண்டதனால் அகலிகை கல்லுருப் பெற்ற விதம்
இது, என்று அந்த ஓவியத்தைப் பார்த்து உரையாடுகின்றனர்.
இத்தகைய பல வகையான ஓவியங்கள் நிறைந்த மண்டபத்தை
யடைந்தவர்கள் அவைகளைக் குறித்துக் கேள்விகள் கேட்டனர். அக்கேள்விகளுக்கு விடையும் அளித்தனர்.
”என்றூழ் உறவரும் இருசுடர் நேமி
ஒன்றிய
சுடர்நிலை உள்படுவோரும்
இரதி
காமன் இவள் இவன் எனாஅ
விரகியர்
வினவ வினா இறுப்போரும்;
இந்திரன்
பூசை, இவள் அகலிகை, இவன்
சென்ற
கவுதமன், சினன் உறக் கல்லுரு
ஒன்றியபடி
இதுஎன்று உரைசெய்வோரும்
இன்ன
பல பல எழுத்துநிலை மண்டபம்
துன்னுநர்
சுட்டவும், சுட்டறி வுறுத்தவும்” (பா.19 வரி 46-54)
இது செவ்வேளைப்
பாடும் பாடல், பரங்குன்றத்தில் உள்ள சித்திர மண்டபத்தின் சிறப்பைக் கூறியிருக்கின்றது.
சங்க காலத்திலே ஓவியக்கலை உயர்ந்த நிலையிலிருந்தது. அது மக்களுக்கு நல்லொழுக்கம், உலக
ஞானம், தெய்வபக்தி இவைகளைப் போதிக்கப் பயன்பட்டு வந்தது என்று அறிகிறோம்.
Comments
Post a Comment