போர் - அன்றும் இன்றும்
அணு
ஆயுதங்களின் மூலம் தம் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இன்று உலக நாடுகளிடையே பனிப்போர்கள்
பெருகி வருகின்றன. இத்தகைய சூழலில் போர் என்பதன் பொருள் யாது? போரில் பின்பற்ற
வேண்டிய நெறிகள் யாவை? என்பவற்றை அறிதற்குப் பண்டைத் தமிழர் போரில் பின்பற்றிய நெறிகள்
துணைபுரியும். ‘பொரு’ என்னும் வேர்ச் சொல்லினடியாகப் பிறந்தது ‘போர்’ எனும் சொல், ஆற்றலினும் படை பலத்திலும் ஒத்தத் தன்மையுடையாரோடு பொருதலே
போர் என்பது பண்டைத் தமிழரின் கொள்கை, தற்காலத்தில் நிகழ்வது போல் எதிர்பாராது தாக்குதல், மறைந்திருந்து
தாக்குதல், அதிரடித் தாக்குதல்
போன்ற முறைகளில் போர் நிகழவில்லை. போர் செய்யப் போவதை அறிவித்தப் பின்னர்ப் போர் செய்வது மரபாக
நிலவியது. வெண்ணி, வாகை, திருப்போர்ப்புறம்
ஆகிய இடங்களில் களங்குறித்துச் செய்த போர்கள் பற்றிய செய்திகளை இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இக்காலத்தைப்
போலக் கண்ணுக்குத் தெரியாத அணு ஆயுதங்களைக் கொண்டு அவர்கள் போர் நிகழ்த்தவில்லை. தேர், யானை, குதிரை, காலாள் என நால்வகைப் படைகளும் அணி வகுத்துப் போரில் ஈடுபட்டன. வில், வாள், வேல் போன்ற படைக்கலங்கள் போரில் பயன்படுத்தப்பட்டன. அப்படைகளும், படைக்கலங்களும்
இன்று வழக்காறாற்றுப் போயின. எனினும் அவர்கள் படைபலத்திலும் அறமே வெற்றிக்கு அடிப்படை
என்று கருதினர் என்பதை, ”மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” எனப் புறநானூறு
புலப்படுத்துகிறது. இன்று போல அன்று அண்டை நாட்டு எல்லையை ஆக்கிரமிப்பதறகாகப்
போர் நிகழவில்லை. ஆவூர், கருவூர் ஆகிய ஊர்களின் உரிமை காரணமாக வேந்தர் முற்றுகையிட்டனர். முற்றுகை நீட்டித்த
நிலையில் போருக்கு வராத வேந்தனுக்கு அறிவுரை கூறிப் புலவர் அவர்களை அறநெறிப்படுத்தினர்
என்பதை இலக்கியங்கள் விரிந்துரைக்கின்றன.
அண்மையில்
காஷ்மீரை அகப்படுத்திக் கொள்ள எண்ணி நிகழ்ந்த ‘கார்கில்’ போரில் படைகள்
பின் வாங்குவதாக அறிவித்துப் பின் மறைந்திருந்து ஊடுருவிச் செல்லுதல் போன்ற அறமற்ற
நெறிகள் பண்டைத் தமிழர் போர் நெறியில் இடம் பெறவில்லை. வெற்றி அல்லது வீரமரணம் என்பது அவர்கள் குறிக்கோளாக இருந்தமையால்
களத்தில் நேரடியாகப் போர் நிகழ்த்திய வீரப் பண்பாட்டைச் சங்க இலக்கியம் நமக்குப் புலப்படுத்துகின்றது.
போரின் பண்புகள்
போர்ப்
பண்பு என்பது என்றும் மாறாத உலகியற்கை என்பதை,
”ஒருவனை யொருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்றிவ் வுலகத் தியற்கை” (புறம் 70;1-2)
என்று சங்க இலக்கியம் தெளிவுப்படுத்துகின்றது. மனித இனவாழ்வில்
போர் என்பது ஓர் உயிரியல் தேவை. அஃது ஒழுக்கங்களை நெறி நிறுத்தி வகைப்படுத்தும் இன்றியமையாத
ஒரு கருவி என்பர் அறிஞர் பென்கர்த்தி. அர்னால்டு டாயின்பீ (Amold Toynbee) போன்ற வரலாற்று
ஆசிரியர்கள் போர் தவிர்க்க முடியாதது என்றும், அது மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது என்றும், பிறப்போடு தொடர்புடையது
என்றும் இந்துக்களின் ஊழ்வினைக் கருத்தோடு தொடர்புபடுத்திக் கூறுவர். மானிட சமூக
இயலார் போர் இயற்கையானது. போரிடுவது மனிதர்களின் தொன்மையான பண்புகளுள் ஒன்று என்று
கூறுவர். போர் என்பது
நாடுகளுக்கிடையே மாறாத ஒன்று என்பதை நமக்குக் கடந்த கால வரலாறு உணர்த்துகின்றது.
சங்க
காலத்தில் தமிழகம் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்களாலும் பல குறுநில மன்னர்களாலும்
ஆளப்பட்டு வந்தது. அக்காலச் சமுதாயம் வீரத்திற்கு முதன்மை அளித்ததால், போர் தவிர்க்க
இயலாததாகவும், காலத்தின் தேவையாகவும்
கருதப்பட்டது. எனவே, மூவேந்தர்களிடையே
அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன.
”போந்தை வேம்பே ஆரென வரூஉம்
மாபெருந் தானையர்
மலைத்த பூவும்” (தொல்.புறத்.63)
என்ற நூற்பா தொல்காப்பியர்
காலத்திற்கு முன்பே மூவேந்தரிடையே போர்கள் நிகழ்ந்த செய்தியைத் தெளிவுப்படுத்துகிறது.
போருக்குரிய
காரணங்கள்
சங்க
காலத்தில் மன்னர்களிடையே போர் பல நிகழினும், அவர்கள் தகுந்த காரணங்களுக்காகவே போரில் ஈடுபட்டனர். உரிமை, புகழ், வேட்கை, எல்லையை விரிவுபடுத்துதல், குடிக்கடன், மானவுணர்வு, செல்வ மேம்பாடு, மகட்கொடை மறுப்பு
ஆகியவை காரணமாகச் சங்க காலத்தில் போர்கள் நிகழ்ந்தன.
·
ஆவூரின் உரிமை
காரணமாகச் சோழன் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் நிகழ்ந்தது.
·
கரிகாற் பெருவளத்தான்
தனக்குரிய அரசுரிமையைப் பெறுவதற்கு தாயத்தாருடன் போருடற்றினான்.
·
மூவேந்தரும்
ஒன்று சேர்ந்து தம்மினும் புகழில் மேம்பட்டு விளங்கும் பாரியை அழிக்க அவனுடன் போர்
புரிந்தனர்.
·
இருபெரு வேந்தரும்
ஐம்பெரும் வேளிரும் இளையன் இவன் என உளையக் கூறிதனால், அவரொடு தலையாலங்கானத்துச்
செருவென்ற நெடுஞ்செழியன் போருக்கு எழுந்தான்.
·
மகட்கொடை மறுப்புக்
காரணமாக நிகழ்ந்த போர்கள் புறத்திணை இலக்கணத்தில் மகட்பாற் காஞ்சி எனப் பெயர் பெற்றன.
போர் நெறிகள்
பகைமை
பற்றி எழும் போரிலும் அறநெறி தவறாத பண்பாடுடையராகப் பண்டைத் தமிழர் விளங்கினர். தொல்காப்பிய
புறத்திணையில் கூறப்படும் திணைகளும், துறைகளும் அக்காலப் போர் வகைகள் பற்றியும், ஒவ்வொரு வகைப்
போரிலும் அமைந்த பல்வேறு படிநிலைகள் பற்றியும் விளக்குகின்றன. வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை ஆகிய புறத்திணைகள்
ஐந்தும் பண்டைத் தமிழரின் போர் அற அடிப்படையிலான வாழ்க்கை நிலைகளைக் கூறுவன. போர் தொடங்குவதற்கு
முன்னால் போர் செய்யப் போவதை வெளிப்படையாக முரசறைந்து தெரிவித்தல் மரபாக இருந்தது. இதனை, ‘அறத்தாறு நுவலும்
பூட்கை’ எனப் புறநானூறு
சிறப்பிக்கின்றது.
அறத்தோடு போர்
செய்தல்
பகைவர்
நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் அழிக்க வேண்டும் என்பது போர் மேற்செல்லும் மன்னனின்
நோக்கம் அன்று. எனவே, பிறர்க்குத் தீமை செய்யாத ஆக்களும், அந்தணர்களும், துன்புறதல்
தகாது என்று எண்ணினர். தமக்குப்பின் குடிகாத்து ஓம்பும் மக்களைப் பெறாதோர் ஆகியோரைப்
போரினால் ஏற்படும் துன்பத்தினின்று காத்தல் அறம் ஆதலின், அவர்களைப் பாதுகாப்பினைத் தேடிக் கொள்ளுமாறு அறிவுறுத்துவர். என்பதை,
”அவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யிரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை” (புறம்,9:1-6)
எனப் புறநானூறு உணர்த்துகின்றது. இது போர் முன்
பாதுகாப்பு நடவடிக்கை என்பர்.
ஒத்த வலியாருடன்
பொருதல்
பண்டைத் தமிழர் போர்க்களத்தில் பகைவரொடு போருடற்றும் போதும் அறநெறிகளையே பின்பற்றினர்.
‘போர்’ என்னும் தமிழ்ச் சொல் அறத்தின் அடிப்படையில் போர்கள் நிகழ்ந்ததை அறிவிக்கின்றது.
‘போர்’ எனும் சொல் ‘பொரு’ அல்லது ‘பொருவுதல்’ ஒப்புதல் அல்லது ஒத்திருத்தல் எனப் பொருள்படும்.
ஒப்பு, போர் என்னும் பொருள்படும் ‘சமம்’ என்னும் சொல் தனித்தும், ‘செல்சமம்’ , ‘எழுசமம்’,
‘பொருசமம்’ என்று அடையொடு புணர்ந்தும் இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது. எனவே, ஆற்றலாலும்
கருவியாலும் ஒத்த இருபடைகள் கலந்து பொரும் களம் போர்க்களம் எனப் பெயர் பெற்றது. போர்க்களத்தில்
வீரர் விழுப்புண் பட்டாரோடு பொருவதன்றிப் பிறர் எதிர்ந்த வழி அவரொடு போர் புரிதல் சிறப்புற்றது
எனப் புறக்கணித்தும் ஒத்தாரோடு பொருதல் போரறம் எனவும் கொண்டனர். யானை, பிறர் கணையால்
புண்பட்டோர், இளையோர், முதியோர் ஆகியோர் மீது அம்பு எய்தல் குற்றம் என்று அவரோடு பொருதல்
இல்லை என்ற நெறியைச் சீவக சிந்தாமணி எடுத்துரைக்கின்றது. அதனால், ‘மைந்துடை நல்லமர்’
என்று அவர் ஆற்றிய போரும் புகழப் பெற்றது. கடல் பிறக்கோட்டிய குட்டுவன் ஆற்றிய போரினை,
”நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்
அம்புசே
ருடம்பினர் நேர்ந்தோ ரல்லது
தும்பை
சூடாது மலைந்த மாட்சி
அன்னோர்
பெரும நன்னுதல் கணவ
அண்ணல்
யானை யடுபோர்க குட்டுவ
மைந்துடை
நல்லமர்க கடந்து வலந்தரீஇ” (பதிற்.42:4-9)
எனப் பரணர்
பாராட்டுவர்.
புறமுதுகிடுவோருடன்
போர் செய்யாமை
போர்க்களத்தில் புறமுதுகிடாமையும், புறமுதுகிடுவாருடன் போர் செய்யாமையும் போரறமாக
மதித்தவர் பண்டைத் தமிழர் என்பதை, ‘நற்போர் ஓடா வல்வில்’ என்ற தொடர் உணர்த்தும். ‘நற்போர்’
என்பதற்கு அறத்தாற் பொருகின்ற போர் என்று நச்சினார்க்கினியர் உரை கூறியுள்ளார். புறமுதுகிடுதல்,
புறப் புண்படுதல் ஆகியவற்றை இழிவாகக் கருதியவர் பண்டைத் தமிழர். வெண்ணிப் போரில் மார்பிலே
தைத்த வேல் புறத்தையும் ஊடுருவிச் சென்ற புண்ணிற்காக நாணி உயிர் விட்டவன் பெருஞ் சேரலாதன்
என்று புறநானூறு எடுத்துரைக்கின்றது. இதனை,
”கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக
ழுலக மெய்திப்
புறப்புண்
ணாணி வடக்கிருந் தோனே” (புறம்:66:6-8)
என்ற பாடல்
புலப்படுத்துகின்றது.
படைமடம் படாமை
சங்க கால படைமடம் படாதவர் என்ற செய்தியை,
”கடாஅ யானைக் கழற்காற் பேகன்
கொடைமடம்
படுத லல்லது
படைமடம்
படான்பிறர் படைமயக் குறினே” (புறம்:142:4-6)
என்று பேகன் பாராட்டப்படுவதன் மூலம் அறியலாம். ”படைமடமென்றது,
வீரர் அல்லாதார் மேலும், முதுகிட்டார் மேலும், புண்பட்டார் மேலும், மூத்தார் இளையார்
மேலும் செல்லுதல்” என்ற உ.வே.சாமிநாதையர் விளக்கம் அளித்துள்ளார்.
பருவங்குறித்துப்
போர் புரிதல்
ஓராண்டினைக் கார், கூதிர், முன்பனி, பின்பனி,
வேனில் இளவேனில் என ஆறுவகையான பருவங்களாகப் பகுத்துக் கொண்ட பண்டைத் தமிழர் போர்
செய்வதற்குரிய பருவம் தேர்ந்தே போர் செய்தனர். போர்க்குரிய பருவங்களாக வேனிற் பருவமும்
கூதிர்ப்பருவமும் கொள்ளப்பட்டன. மன்னர் பாசறை அமைத்துத் தங்கியிருந்து போர உடற்றினர்.
இதனை,
”கூதிர் வேனில் என்றிரு பாசறைக்
காதலின்
ஒன்றிக் கண்ணிய மரபினும்” (தொல்.புறத்.75)
என்பர் தொல்காப்பியர்.
நெடுநல்வாடை கூதிர்ப்தபாசறை யமைத்துத் தங்கியிருந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் போர்ச்
செயல்களைக் குறிப்பிடுகின்றது. முல்லைப்பாட்டு வேனிற் பாசறை இயல்பினை விரித்துரைக்கின்றது.
போரினால் ஆட்சிக் குழப்பமோ, நாட்டில் பஞ்சமோ, மக்கள் செய்யும் தொழிலுக்கு இடையூறோ உண்டாகக்
கூடாது என்பதில் கண்ணுங் கருத்துமாக இருந்து வந்தனர். அதற்காகவே உழவுத் தொழில் செய்வோர்
அறுவடையை முடித்து ஓய்வாக இருந்த கூதிர்ப் (குளிர்காலம்) பருவ முதல் வேனிற் காலம் வரையுள்ள
இடைக் காலத்தைப் போர் புரிவதற்கு ஏற்ற காலமாகத் தேர்ந்தெடுத்தனர். இவற்றால் நாட்டின்
நடைமுறை நிகழ்ச்சிகள் மாறுபடா வண்ணம் பருவம் குறித்துப் போர் செய்த பண்டைத் தமிழரின்
பண்பாடு வெளிப்படுகின்றது.
களங் குறித்துப்
போர் செய்தல்
பண்டைத் தமிழர் பகைவரை எதிர்பாராது தாக்குதலின்றிக் களங்குறித்துப் போர் செய்தனர்.
‘பறந்தலை’, ‘வியன் களம்’ ஆகிய தொடர்கள் பெருநிலப்பரப்பில் போர்கள் நடைபெற்றன
என்பதை விளக்குகின்றன. சோழன் கரிகால் பெருவளத்தானுக்கும் பெருஞ்சேரலாதனுக்கும் இடையே
வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் நிகழ்ந்த போர்ச் செய்திகளைப் புறநானூறும், பொருநராற்றுப்படையும்
விவரிக்கின்றன.
தலையாலங்கானம் என்னும் இடத்தில் இருபெரும்
வேந்தரையும் ஐம்பெரு வேளிரையும் பாண்டியன் நெடுஞ்செழியன் வென்ற திறமும், அதனால் அவன்
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பெற்ற சிறப்பும்
புறநானூற்றில் எடுத்துரைக்கப்படுகின்றன. வாகைப் பறந்தலைப் போரில் கரிகாலனுடன் எதிர்த்து
நின்ற ஒன்பது வேந்தரும் ஒரு பகற் போதிலேயே அவன் ஆற்றலுக்காற்றாது தோற்றோடிய செய்தியை,
”பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்
சூடா
வாகைப் பறந்தலை ஆடுபெற
ஒன்பது
குடையும் நன்பக லொழித்த
பீடில்
மன்னர் போல” (அகம்:125,18-22)
என்று அகநானூறு
எடுத்துக் காட்டுகின்றது.
பண்டைத் தமிழர் களங்குறித்துப் போர் செய்ததை
இச்செய்திகள் தெளிவுறுத்துகின்றன. இக்காலத்தில் நடைபெறுவது போன்று திடீரென்று தாக்குதல்,
மறைந்து இருந்து தாக்குதல் போன்ற போர் முறைகள் அக்காலத்தில் இல்லை. பலர் அறிய வஞ்சினம்
கூறி, பொது இடத்தில் தம்மொடு ஒப்பாரிடம் மட்டும் போரிடும் அறப்பண்பு வாய்ந்தவர்களாகப்
பழந்தமிழர் வீரா் விளங்கினர்.
இரவில் போரிடாமை
பகலில் போரிட்டு இரவில் போரிடாமையைப் பண்டைத்
தமிழர் போரறமாகக் கொண்டு ஒழுகினர். பகலில் மட்டும் களம் குறித்துப் போரிடல் பண்டைய
மரபு என்பதை,
”வெம்போர்ச் செழியனும் வந்தன னெதிர்ந்த
வம்ப மன்னரோ பலரே
எஞ்சுவர் கொல்லா பகறவச் சிறிதே” (புறம்.79,4-6)
என்ற புறநானூற்றுப்
பாடலடிகள் தெளிவுப்படுத்தும். நெடுநல்வாடை, பாசறைகளில் காயமுற்ற வீரர்களுக்கு ஆறுதல்
சொல்லும் அரசனின் கடமையுணர்வையும் செயல்களையும் எடுத்தியம்புகிறது. நெடுஞ்செழியன் வாடைக் காற்றுடன் மழைத் துளிகளும் வீழ்கின்ற இரவு நேரத்திலும் படைத்தலைவன் உதவியுடன் சென்று
காயமுற்ற வீரர்களைக் கண்டு ஆறுதல் மொழிகளைக் கூறினான் என்பதை எடுத்துக் கூறி, இதன்
மூலம் பகலில் போரிடுவதும், இரவில் போரை நிறுத்துவதும் வழக்கமாயிருந்தன. மகாபாரதப் போரிலும்
அறப்போர்களிலும் இதுவே பின்பற்றப்பட்டது என்பர் பேராசிரியர் இராமச்சந்திர தீட்சிதர்.
போரின் இறுதிநிலை
போரில் வெற்றி பெற்ற மன்னர் பகைவர் நாட்டை
நாற்படை கொண்டு அழித்தனர். கழுதை ஏரைக் கொண்டு உழுவித்துப் பாழ் செய்தனர். விளை வயல்களில்
தேர்களைச் செலுத்திப் பயிர்களை அழித்தனர். நீர் நிலைகளில் களிறுகளைப் படிவித்துக் கலக்கினர்.
பகைவர் நாட்டைத் தீக்கிரையாக்கினர். அவர் நாட்டுப் பொன்னையும் பொருள்களையும் கொள்ளை
இட்டனர். நாற்படையுள் யானைப்படை பகைவர் நாட்டு மதில்களை அழிக்கப் பயன்பட்டது. ‘நாடெனும்
பேர் காடாகப்’ பகைவர் நாடு பாழ்நிலமாக்கபட்டதை மதுரைக்காஞ்சி விவரிக்கின்றது.
திருமாவளவன் தெவ்வர் கோக்கிய வேற்படையின்
வெம்மையைப் பட்டினப்பாலை பகர்கின்றது. பண்டைத் தமிழர் போர் முறையில் பகைவர் நாட்டின்
அழிவு இழிப்பினும் அது போரின் இறுதி நிலையாகவே இருந்தது. பகைவர் தம் படைபலத்தைப் பெருக்கி
மீண்டும் தம்மைத் தாக்காது காத்து கொள்ளும் நோக்கமே இதற்குக் காரணம் ஆகும். பொருளாதார
நிலையில் அவர்களின் உயர்ச்சியைத் தடுத்தற்கும், மீண்டும் தம் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளாதவாறு
தகைத்தற்கும் இத்தகைய அழிவுச் செயல்கள் மேற்கொள்ளப் பெற்றன.
பண்டைத் தமிழர் போர்க்களத்தை வீரத்தின் விளைநலமாகக்
கருதினர். போர்க்களத்தில் பகைவரின் படைகளைக் கொன்று குவித்தாலும் அதைக் கொலைக் களம்
என்று கூறுவதில்லை. கொலைக் களத்தில் தன்னைக் காத்துக் கொள்ள ஒருவர்க்கு வலிமையோ வாய்ப்போ
கிட்டாது கொல்லுஞ் செயல் நடைபெறுகின்றது. ஆயின், போர்க்களத்தில் தமக்குச் சமமான வலிமையில்லாதவரோடு
போர் செய்வது அறமாகக் கொள்ளப்படுவதில்லை. பழந்தமிழ்ச் சமுதாயம் மறமாட்சி மிக்கது. போர்ச்
செயல்களைப் புகழ்ச் செயல்களாகப் போற்றியது. ஒத்த படைகள் மோதிக் கொள்ளும் தொழிலுக்குரிய
களமாகப் போர்க்களம் விளங்கியது. அதனால் புலவர் பாடும் புகழ் பெற்றது.
நம்பிக்கை
போர்க்களத்தில் இறப்போர் துறக்கவுலகம் புகுவர்
என்பது பண்டைத் தமிழரின் நம்பிக்கைகளுள் ஒன்று.
”முன்சமத் தெழுதரும் வன்க ணாடவர்
தொலையாத்
தும்பை தெவ்வழி விளங்க
உயர்நிலை
யுலக மெய்தினர் பலர்பட
நல்லமர்க்
கடந்தநின் செல்லுறழ் தடக்கை” (பதிற்.52:7-10)
என்று மன்னர்
அறநெறி நின்று ஆற்றிய நல்லமரும், அதன் காரணமாகப் பகைவர் உயர்நிலையுலகம் புகுந்த நிலையும்
கூறப்பட்டுள்ளன. அவ்விண்ணுலகம் தேவருலகம் என்றும் மேலோருலகம் என்றும் புகழ்ந்துரைக்கப்
பெற்றது. போர்க்களத்தில் இறவாது நோயினாலோ மூப்பினாலோ இறப்போரைத் தருப்பைப் புல்லிற்கிடத்தி
வாளினாற் போழ்ந்து அடக்கம் செய்வதை மன்னர்கள் மரபாகக் கொண்டிருந்தனர். என்பதை,
”நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதள்
மறந்தவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி
கொள்கை நாள்மறை முனிவர்
திறம்புரி
பசும்புற் பரப்பினர் கிடப்பி
மறங்கந்
தாக நல்லமர் வீழ்ந்த
நீள்கமுன்
மறவர் செல்வுழிச் செல்கென
வாள்போழ்ந்
தடக்கலு முய்ந்தனர் மாதோ” (புறம்.93,5-11)
என்ற புறநானூற்றுப்
பாடல் அறிவிக்கின்றது. போர்க்களத்தில் இறப்போர் பெறும் பேற்றை இவர்களும் பெறட்டும்
என்பதே இதன் நோக்கம்.
”குழவி யிறப்பினும் மூன்றடி பிறப்பினும்
ஆளன்
றென்று வாளிற் றப்பார்” (புறம், 74,1-2)
என்ற சேரமான்
கணைக்காலிரும்பொறையின் பாடல் சாக்குழவி பிறந்தாலும், ஊன்பிண்டம் (தசைப் பிண்டம்) பிறந்தாலும்
அவற்றையும் வாளினாற் போழ்ந்து அடக்கஞ் செய்யும் வீர மரபை, வீரப் பண்பாட்டை உணர்த்துகின்றது.
Comments
Post a Comment