ஆரியர்கள்
வட நாட்டினரை ஆரியர்கள் என்ற பெயரால் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அகநானூற்றிலும்
இதைக் காணலாம். தமிழ் நாட்டு மன்னர்களுக்கும், வடநாட்டு மன்னர்களுக்கும் சங்க காலத்திற்கு
முன்பே பல போர்கள் நடந்திருக்கின்றன. தமிழர்களும் வடநாட்டின் மேல் படையெழுத்திருக்கின்றனர்.
ஆரியர் – தமிழர் போராட்டங்களுக்கு இனவெறியோ,
மதவெறியோ கலாசார வெறியோ காரணங்கள் அல்ல. தமிழ்நாட்டு மன்னர்கள் – சேர, சோழ, பாண்டியர்கள்
அடிக்கடி தங்களுக்குள் போரிட்டு வந்தனர். இவர்கள் போரிட்டுக் கொள்வதற்கு என்ன காரணமோ
அதே காரணந்தான் தமிழரையும் ஆரியரையும் சண்டையிடச் செய்தது. சேர, சோழ பாண்டியர்கள் கலாசாரத்தில்
எப்படி ஒன்றிபட்டிருந்தனரோ, அதைப் போலத்தான் அக்காலத்தில் ஆரியரும் தமிழரும் கலாசராத்தில்
ஒன்றுபட்டிருந்தனர்.
”ஆரியர்
பொன்
படுநெடுவரை (அகம். பா.398)
ஆரியர்களின் பொன் விளைகின்ற உயர்ந்த இமயமலை
“ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத்
தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணத்தோன்
வஞ்சி” (அகம்.பா.396)
ஆரியப் படைகள் அலறும்படி தாக்கி-பெரும் புகழும்
பழமையும் வாய்ந்த இமயமலையிலே – வளைந்த வில் முத்திரையைப் பொறித்து-தன்னை எதிர்த்த கோபமுடைய
வடநாட்டு மன்னர்களைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்ட சேரனது வஞ்சிமா நகர்
இவைகளால் வடநாட்டினரை ஆரியர்கள் என்று கூறியிருப்பதையும்,
தமிழ் மன்னர்கள் வடநாட்டின்மேல் படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதையும் காணலாம்.
“மாரி அம்பின் மழைத்தோல் சோழர்
வில்லீண்டு
குறும்பின் வல்லத்துப் புறமிளை
ஆரியர்
படையின்” (அகம்.பா.336)
மழையைப் போன்ற
அம்புகளையும், மேகத்தைப் போன்ற கேடகங்களையும் உடைய சோழமன்னர்களின் – விற்படையோர் நிறைந்த
சிற்றூர்கள் சூழ்ந்த – வல்லத்தின் புறத்திலே, காவற்காட்டிலே தோற்று ஓடிப்போன ஆரியர்களின்
படையைப் போல,
ஆரியர் படைகள், தஞ்சையின் பக்கத்திலே உள்ள
வல்லம் வரையிலும் படையெடுத்து வந்த செய்தியை அறியலாம். இந்தப் படையெடுப்பு வடநாட்டிலிருந்து
வந்த ஆரியர் படையெடுப்பா? அல்லது தமிழ் நாட்டிலே நிலைபெற்றிருந்த ஆரியர்களின் படையெடுப்பா?
என்பது ஆராயத் தக்கது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டிலே
ஆரிய அரசன் பிரகத்தன் என்பவன் ஒருவன் ஏதோ ஒரு சிறு நிலப்பகுதியை ஆண்டு வந்தான் என்று
அறிகின்றோம். திருநெல்வேலிச் சீமையிலே திருக்குற்றாலத்தை யுள்ளிட்ட ஒரு பகுதிக்கு ஆரிய
நாடு என்று பெயர் வழங்கியிருக்கின்றது.
ஆரியங்கா, ஆரியக்குடி, ஆரியரூர், ஆரியப்படையூர்,
ஆரியன் குப்பம் என்ற பெயர் கொண்ட இடங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஆரியக்குடி,
அரியக்குடி என்றும் ஆரியரூர் அரியலூர் என்றும் இக்காலத்தில் வழங்குகின்றன.
Comments
Post a Comment