Skip to main content

தமிழர் வீரம்

 

தமிழர் வீரம் 

          தமிழர்களின் ஒப்பற்ற வீரத்தைப் பற்றி உரைக்கும் பாடல்கள் பலவுண்டு. வீரம் என்றால் இளைத்தவர்களை- வீணாக இன்னலுக்கு ஆளாக்கித் தான் மட்டும் இன்புற்று வாழ்வதன்று. மற்றவர்களைக் காட்டிலும் தான் ஆற்றலுடையவன் என்பதை அறிவித்துக் கொள்ளுவதன்று; தான் கொண்ட கொள்கையிலே உறுதியுடன் நிற்றல்; தான் செய்யத் தொடங்கிய செயல்களை முட்டுக்கட்டைகளுக்கு அஞ்சாமல் முயற்சியுடன் செய்து முடித்தல்; தன் மானத்திற்கு இழுக்கு வராமல் தன் செயலிலே வெற்றியடைதல்; தன்னைக் காரணமின்றித் தாழ்த்திப் பேசுவோர் நாணும்படி அவர்கள் செருக்கைச் சிதைத்தல். இவைகளே வீரத்தின் இயல்பு. இத்தகைய சிறந்த வீர முடையவர்களே இந்நாட்டுத் தமிழ் மன்னர்கள்.

          பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடல் வழி அறியலாம். இவன் வீரத்திலே மிகுந்த வேந்தன் மட்டுமன்று; செந்தமிழ் புலவனாகவும் சிறந்திருந்தான்.

          ”படை பலத்தால் என்னை இகழ்ந்துரைத்த வேந்தர்களுடன் வீரப்போர் புரிவேன்; அவர்கள் சேனைகள் சிதையத் தாக்குவேன். அவர்களுடைய முரசுகளுடன் அவர்களையும் சிறை பிடிப்பேன். இப்படிச் செய்யேனாயின் என் குடை நிழலிலே இருப்பவர்கள், தாங்கள் போய்த் தங்குவதற்கு வேறு இடங்காணாமல் எமது அரசன் கொடுங்கோலன்” என்று என்னைத் தூற்றும் கொடியவனாவேன்.

          உலகம் உள்ளவரையிலும் மாறாத புகழுடைய மாங்குடி மருதனாரைத் தலைமையாகக் கொண்ட புலவர்கள் என்னுடைய நாட்டைப் புகழ்ந்து பாடாமல் புறக்கணிப்பார்களாக. இரக்கின்றவர்களுக்கு எதையும் கொடுக்க முடியாத வறுமையையும் யான் எய்துவேனாக.

          ”உறுதுப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கிச்

          சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை

          அரும்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு

          ஒருங்கு அகப்படேஎனாயின், பொருந்திய

          என்நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது

          ”கொடியன் எம்இறை” எனக் கண்ணீர்பரப்பிக்

          குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக;

          ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

           மாங்குடி மருதன் தலைவனாக

          உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்

          புலவர் பாடாது வரைக என்நிலவரை;

          புரப்போர் புன்கண்கூர

          இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே”  (புறம்.72)

      இந்தப் பாட்டிலே நெடுஞ்செழியனுடைய வீரமும், நேர்மையும், புலவர்களுடைய பெருமையும் காணப்படுகின்றன. பகைவர்க்குப் பணிகின்றவன் வீரமுடைய வேந்தன் அல்லன்; குடிகளைக் கொடுமைப்படுத்துகின்றவன்; அவனுடைய நாட்டையே பாராட்டிப் பாடுவார்கள், கோழையைக் கொஞ்சமும் மதிக்கமாட்டார்கள். இவ்வுண்மை இப்பாடலிலே பொதிந்திருப்பதைக் காணலாம்.

          இளஞ்சேட் சென்னி என்பவன் ஒரு சேர மன்னன்; ஒப்பற்ற வீரன். ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் அவனைப் பாராட்டிப் பாடியிருக்கின்றார்.

          ”பகைவர்களுடைய கோட்டை அவர்களிடம் இருக்கும்போதே, அதைப் பிறர்க்குத் தானமாகத் தந்து விடுவாய்! ” அந்தக் கோட்டை உங்களுடையது; என்று உன்னைப் புகழ்ந்து பாடும் பாணர்களுக்குக் கொடுக்கும் பண்புடைய வள்ளல் நீ.

          ”ஒன்னார்

          ஆர் எயில் அவர்கட் டாகவும் நுமது எனப்

          பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்!” (புறம்-203)

இப்பகுதி அந்த இளஞ்சேட் சென்னியின் வீரத்தை விளக்கும் இவ்வீரமும் தன்னலமற்ற ஆண்மைக்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.

    எதிரியின் கோட்டையைத் தன் வசமாக்குவதற்கு முன்பே அதை மற்றொருவர்க்குக் கொடுப்பதென்றால், இதற்கு எத்தகைய நெஞ்சுரம் வேண்டும்? எதிரியை வெல்வது உறுதியென்பதில் எவ்வளவு நம்பிக்கை வேண்டும்? தோல்வி மனப்பான்மையே தமிழனிடம் இருந்ததில்லை என்பதற்கு இப்பாடல் ஒரு உதாரணமாகும்.

     இச்செய்யுளின் கருத்தைக் கம்பன் தன் காவியத்தில் ஓரிடத்திலே புகுத்தியிருப்பது புகழத் தகுந்தது. இராம-இராவணப்போர் தொடங்கவில்லை; இலங்கை இராவணன் வசத்திலேயே இருக்கின்றது; இந்நிலையிலே விபீஷணன் இராமனைச் சரணடைகின்றான். உடனே இராமன் ”இலங்கை அரசு உன்னுடையதே” என்று உறுதியொழியளித்தான்; அவனை இலங்கை மன்னனாக வைத்து முடிசூட்டினான்; வெற்றியிலே நம்பிக்கையுள்ள வீரன் இராமன் என்பதை விளக்கவே இக்கதையமைப்பு. புறநானூற்றைப் படித்த கம்பனுடைய கற்பனை இது, இவ்வாறு தமிழ் மன்னர்களின் அருமையான ஆண்மையை விளக்கும் விளக்கும் அழகிய பாடல்கள் பலவுண்டு.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...