கலித்தொகையில்
காளையின் வகைகள்
காளைகளின் இலக்கணத்தைக் கலித்தொகையிலே காணலாம்.
காளைகளிலே ஐந்து வகையுண்டு. அவை காரி, வெள்ளை, குரால், புகர், சேய் என்பன. காரி-கறுப்புக்காளை,
வெள்ளை- வெள்ளைக்காளை, குரால்-மயிலைக்காளை, புகர்-புள்ளிக்காளை, சேய்-சிவப்புக்காளை.
அவைகளின் தோற்றங்கருதி ஐவகையாகப் பிரித்தனர்.
”வள்ளுருள் நேமியான் வாய்வைத்த வளைபோலத்
தெள்ளிதின் விளங்கும், சுரிநெற்றிக் காரியும்”
திருமால் தன் வாயில் வைத்து ஊதுகின்ற வலம்புரிச்
சங்கினைப் போல், தெளிவாக விளங்கும் வெண்மையான நெற்றியையுடைய கறுப்புக் காளையும்,
”ஒரு குழையவன் மார்பில் ஒண்தார்போல்,
ஒளிமிகப்
பொருவறப்
பொருந்திய செம்மறு வெள்ளையும்”
பலராமனுடைய மார்பிலே நீண்டு தொங்குகின்ற
சிவந்த மலர் மாலையைப் போல, ஒளியுடன் அழகாக அமைந்திருக்கின்ற சிவந்த கோட்டையுடைய வெள்ளைக்காளையும்,
”பெரும்பெயர்க் கணிச்சியோன் மணிமிடற்றணி
போல
இரும்பிணர் எருத்தின் ஏந்திமில்குராலும்,
சிவபெருமானுடைய அழகிய கழுத்திலே காணப்படும்
கருமையணியைப் போல, கழுத்திலே கருமையும் உயர்ந்த திமிலையும் உடைய மயிலைக் காளையும்,
”அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரங் கண்ஏய்க்கும்
கணங்கொள்
பல் பொறிக் கடுஞ்சினப் புகரும்”
பகைவர்களை வருத்துந் தன்மையையுடைய வச்சிராயுதத்தைக்
கொண்ட இந்திரன், உடம்பிலே ஆயிரங் கண்கள் அமைந்திருப்பதைப் போல, கூட்டமான பல புள்ளிகளையுடைய
சினமுள்ள புள்ளிக் காளையும்,
”வேல்வலானுடைத் தாழ்ந்த விளங்கு வெண்துகிலேய்ப்ப,
வாலிது
கிளர்ந்த, வெண்காற் சேயும்,
வேற் படையோனான செவ்வேளினிடம் தாழ்ந்து கிடக்கின்ற
வெண்மையான உடையைப் போல, தூய்மையாகக் காணப்படும் வெண்மையான கால்களையுடைய சிவப்புக் காளையும்,
காளைகளின் இலக்கணம் இவை. மூன்று பாடல்களில்
காளைகளின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. மேலே எடுத்துக்காட்டிய பாடற் பகுதிகள் 105- பாடலில்
காளைகளுக்குக் காட்டப்பட்டிருக்கும் உவமைகள் என்பது குறிப்பிடத்தக்கவை.
Comments
Post a Comment