தும்மல்
தும்மலில் கூட நன்னிமித்தம் தீ நிமித்தத்தைத் தமிழர்கள் கண்டனர். தும்மல் என்பது
இயல்பாக வருவதாகும். ஆனால், யாரோ தம்மை நினைப்பதனால்தான் தும்மல் வருகிறது என்ற எண்ணம்
இதன்பால் உள்ள நம்பிக்கையைப் புலப்படுத்தும். இன்ன நேரத்தில், இன்ன இடத்தில் தும்மக்கூடாதென்னும்
நம்பிக்கை நடைமுறை வாழ்க்கையில் உள்ளது. மேலும் தும்மலில், ஒரு சிலர் தும்மினால் நன்மை
விளையும்; அல்லது துன்பமின்றிக் கழியும். ஆனால் ஒருசிலர் தும்மினால் தீமை விளைவதுண்டு
என்ற நம்பிக்கையும் மக்களிடையே இருந்து வருகின்றது. அதனால்தான் மங்கலக் காரியங்களில்
தும்மல் ஓசை காதில் விழாவண்ணம் மங்கல இசை பெருத்த ஓசையுடன் இசைக்கப்படுகின்றது எனவும்
கொள்ளலாம்.
சிறப்புடைச் சடங்கின்போதும், யாதொரு நற்செயலைத்
தொடங்கும்போதும், வெளியில் புறப்படும்போதும் தும்மக் கூடாதென்பர். அத்துடன் வீட்டின்
வாயில் நிலையில் அமர்ந்தவாறும், உணவு உட்கொள்ளும் போதும் தும்மக் கூடாதென்பர். இவையெல்லாம்
நடைமுறைப்பட்ட நம்பிக்கைகளாகும்.
தும்மல் வரின் அவரை யாரேனும் நினைப்பதாகவும்
கொள்வர். வள்ளுவர் இதனைப் ”புலவி நுணுக்கம்” என்னும் அதிகாரத்தில் சிறப்பாக
எடுத்தோதுவர்.
”வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித்
தும்மினீர் என்று”
எனவரும் குறளால்
இதனைத் தெளியலாம். மேலும் ஒற்றைத் தும்மல் சிறப்புடைத்தன்று எனவும், தொடர்ந்துவரும்
தும்மல் சிறப்புடைத்தெனவும் நம்பிக்கை கொண்டனர். இதனை,
”உள்ளிய தன்மையர்போலும் அடுத்து அடுத்து
ஒள்ளிய
தும்மல் வரும்”
எனவரும் ஐந்திணை
எழுபதால் அறியலாம்.
சிந்தாமணியில், தும்மல் நன்னிமித்தமாகச்
சுட்டப்படுகின்றது. கந்துக்கடன், இடுகாட்டில் சீவனாகிய குழந்தையை எடுக்கும்போது, அவன்
தும்முவது நன்னிமித்தமாகக் கூறப்பெற்றுள்ளது. மேலும், தும்மலில் வாழ்த்துகின்ற நிலையும்
உண்டு. ஒரு குழந்தை தும்மினால், ‘வாழ்க, தீர்க்காயுசு, நூறு’ என்று சொல்லுகின்ற
வழக்குண்டு. இவ்வாறு கூறுவது, நூறாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்துவதன் பொருளாகும்.
தும்மியவுடன் ‘ஜீவ, நந்த, வர்த்தஸ்வ’ என்று ஆசி கூறுதல் சைனமுனிவர்களுடைய வழக்கு.
அது போன்று, தும்மியவுடன் ‘சிவாய’ என்றல் சைவருடைய வழக்கமாகும். தும்மலில் வாழ்த்துகின்ற
நிலையினைத் திருக்குறளும் குறிப்பிடுகிறது.
Comments
Post a Comment