Skip to main content

இலக்கியங்களில் சிறை

 

இலக்கியங்களில் சிறை

        தமிழ் மொழியில் ”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப்பியம். தமிழில் ஒவ்வொரு சொல்லும் உணர்த்தும் பொருளுக்குக் காரணம் இருந்திருக்கவேண்டும். காலவோட்டத்தினால் அக்காரணங்கள் நமக்கு இன்று வெளிப்படாமல் இருக்கின்றன. எனினும் சில சொற்கள் உணர்த்தும் பொருளை ஆராயுமிடத்து அக்காரணம் இன்றளவும் புலப்படுவதுடன் அதன் சிறப்பும் விளங்குகின்றது.

சிறை – விளக்கம்

        சிறை என்பதற்குச் சென்னைப் பல்கலைக் கழகத்  தமிழ்ப் பேரகராதி ”காவல், காவலில் அடைக்கை, சிறைச்சாலை, அடிமைத்தனம், அடிமையாளன், பெண்டாளச் சிறை, பிடிக்கப்பட்ட இளம்பெண், ஆணை, நீர்நிலை, பக்கம், மதகு, கரைமதில், வரம்பு, இறகு, ஒலியெழாமல் தடைப்படுத்தி வைக்கும் யாழ் நரம்பு குற்றம் என்று பல பொருள்களைத் தருகின்றது. இவற்றை ஆராயுமிடத்து சிறை என்பது, காவலில் வைத்தல், காவல் செய்தல், தடுத்தல், வரம்பிடுதல் என்ற வகையில் ஒத்திருக்கும் பொருள்களுக்கும், நீர்நிலை, அணை, மதில் என்று ஒத்திருக்கும் பொருள்களுக்கும் ஆகி வந்திருப்பது தெளிவாகப் புலனாகிறது.

தமிழ் இலக்கியங்களில் சிறை பெறுமிடம்

      தொல்காப்பியத்தில் ‘சிறை’ என்னும் சொல் நீர்ப்பெருக்கைத் தடுக்கும் கற்றூண் என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது.

          ”வருவிசைப் புனலைக் கற்சிறை போல

            ஒருவன் தாங்கிய பெருமை யானும்”

          காட்டு வெள்ளத்தைத் தடுத்து அணையிடவில்லை என்றால்  வயலுக்குத் தீங்காய் அமையும். காட்டு வெள்ளம் போல் மனம்போன போக்கில் செயல்படும் ஒருவனால், சமுதாய அமைதிக்கும் ஒழுங்கிற்கும் தீங்கு நேர்கிறது. அடங்காத வெள்ளத்தைத் தடுத்து  வயல்களில் பாய்ந்து வளம் சேர்க்கப் பயன்படுவது கற்சிறை ஆகும். அதைப்போன்று விதிகளுக்கு அடங்காத தனி மனிதனைத் தடுத்து அவனை நல்வழிப்படுத்தும் அமைப்பே சிறை எனக் கொண்டுள்ளனர்.

          அழிக்க வரும் புனலைத் தடுக்கும் கற்றூணைக் குறிக்கப் பயன்பட்ட சிறை, அடுத்த நிலையில், தம் நாட்டை அழிக்கப் புறப்பட்டு வரும் பகை மன்னனின் படை வீரர்களைத் தடுத்து அரண்மனைக்குள் நுழையாது காக்கும் காவல்மிகு அரணைக் குறிப்பதற்கும் பயன்பட்டுள்ளது. இதனை,

          ”சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

         உறைநிலத்தோடு ஒட்டல் அரிது”

என்னும் குறளில் ‘சிறை’ என்னும் சொல் ‘அரண் தற்காப்பு’ என்ற பொருளில் வந்துள்ளது.

          இச்சொல் மேலும்,

          ”செருவந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்

         வெருவந்து வெய்வது கெடும்”

என்னும் குறளில் ‘அரணாக நின்று தடுத்தல்’ என்னும் பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

          பகைவரைத் தடுத்து நிறுத்தித் தன் தறுகண்ணமையைப் புலப்படுத்திய வீரனைப் புறப்பொருள் வெண்பாமாலை,

          ”செல்கணை மாற்றிக் குருசில் சிறைநின்றான்

         கொல்கணைவாய் வீழ்த்தல் கொடிது”

‘சிறை நின்றான்’ என்று குறிப்பிடுகின்றது. பகைவரால் நாட்டுக்கு நேரும் துன்பத்தைத் தடுப்பதற்கு அரணாக இருப்பது ‘கற்சிறை’ எனில், தனி மனிதனால் சமூகத்திற்கு உண்டாகும் தீமையைத் தடுப்பதற்கு அரணாக இருப்பது காவற்சிறையாகும்.

     சிறை என்னும் சொல் ‘தனித்திருத்தல்’ என்னும் பொருளிலும் தொல்காப்பியத்தில் ஆளப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்படுபவன் தனித்து வைக்கப்படுவதும், பிறர் எவரும் எளிதில் கண்டு பழகுவதற்கு இடந்தரா வண்ணம் மறைத்து வைக்கப்படுவதும் இச்சொல்லுக்கு மேலும் பொருட்செறிவைத் தருகின்றன எனலாம்.

          ‘சிறு’ என்னும் சொல்லுடன் ‘ஐ’ சேர்ந்து அடக்குதல், இயக்கத்தை நிறுத்துதல் என்ற பொருள் தருகின்றது. அதே ‘ஐ’ ஓர் உயிரின் இயக்கத்திற்குக் காரணமான இறகினையும் குறித்துள்ளது.

          இன்று சிறை என்பது குற்றவாளிகளைக் காவலில் வைக்கும் இடம். கட்டுப்பாடு மிக்க இடம் என்ற பொருளில் ஆளப்படுகின்றது. இக்கருத்தைத் திருக்குறள் எடுத்துரைக்கக் காணலாம். காவல் பற்றி உரைக்க வந்த வள்ளுவர் சிறை என்னும் சொல்லையும் அமைக்கிறார்.

போரும் சிறையும்

        இரு மன்னர்களுக்கிடையே போர் நிகழம்போது, அப்போரில் வென்றவர் தோற்ற மன்னனையும் அவன் போர் வீரர்களையும் சிறைப்பிடித்து வைப்பர். சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறைக்கும், பாண்டியன் தலையாலங்காணத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கும் போர் நடந்தது. இப்போரில் சேரமான் தோல்வியுற்றான். பாண்டியனால் சிறைப்படுத்தப்பட்டான் என்பதுடன், இச்சேரன் பாண்யரின் சிறையில் இருந்து தப்பிச் சென்றான் என்ற செய்தியையும் புறநானூற்றுப் பாடல் எடுத்துக் கூறுகின்றது.

          ”நீடுகுழி அகப்பட்ட

         பீடுடைய வெறுழ்முன்பிற்

         கோடு முற்றிய கொல்களிறு

         நிலைகலங்கக் குழிகொன்று

         கிளைபுகலத் தலைக்கூடியாங்கு”

எனவரும் புறநானூற்றுப் பாடல்(17), சேரன் தப்பிச் சென்ற திறத்தைக் களிறு ஒன்று தான் அகப்பட்ட குழியில் இருந்து தன் கோடுகளால் குத்தி மீண்ட செயலோடு ஒப்பிட்டுக் கூறுகின்றது.

குற்றவாளிகளுக்குச் சிறை

          நாட்டில் ஒருவர் பொருளை மற்றவர் களவாடுதல் அல்லது அரசின் பொருளை அவாவி களவாடுதல் என்னும் குற்றத்திற்கும் தண்டனையாகக் குற்றம் புரிந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதைச் சிலப்பதிகாரம் சுட்டிக் காட்டுகின்றது.

     அரசப் பதவியில் அமர்ந்திருந்த பார்ப்பான் ஒருவன் திடீரெனப் பெருஞ்செல்வம் சேர்த்து விடுகின்றான். அதனைக் கண்ட பிற அரசு அலுவலர்கள் அவன் செல்வச் செழிப்பு அரண்மனைப் பொருள்களைக் களவாடியதால்தான் ஏற்பட்டது என்று கருதினர். எனவே, அதற்குத் தண்டனையாக அவனைச் சிறையில் அடைத்துள்ளனர். இச்செய்தியை,

          ”படுபொருள் வௌவிய பார்ப்பான் இவன்என

         இடுசிறைக் கோட்டத்து இட்டனராக”

என்வரும் அடிகளில் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.

        சோழ இளவரசன் உதயகுமரன் கொலையுண்டு இறந்தமைக்கு மணிமேகலை காரணம் என்று சோழமன்னன் கருதினான். எனவே அவளை விசாரிப்பதற்குக் கைது செய்து காவலில் வைக்க ஆணையிட்டுள்ளான். இச்செயல் இன்று குற்றஞ் சாட்டப்பட்டவர்களை நீதி மன்றக் காவலில் வைக்கும் வழக்கத்தோடு ஒத்துச் செல்வதாக இருக்கின்றது. சோழன்,

           ”ஈங்கிவன் தன்னையும் ஈமத்து ஏற்றிக்

             கணிகை மகளையும் ‘காவல் செய்’ கென்றனன்”

என்று உரைக்கும் அடிகளில் ‘காவல் செய்’ என்னும் சட்டச்சொல் இடம் பெற்றுள்ளது. இது நடைமுறையில் இருக்கும் ‘கைது செய்‘ என்பதற்கு இணையானது என்று கொள்ளலாம்.

பொது மன்னிப்பு

        பொது மன்னிப்பு வழங்கும் முறை பண்டைத் தமிழகத்திலும் இருந்தது என்பதற்கு மணிமேகலை சான்றாக நிற்கின்றது. மணிமேகலை சிறையில் இருந்தோர்க்கு உணவளித்தாள். சிறைக் கைதிகளுக்குச் சீரிய நெறிகளை எடுத்துரைத்தாள். இதனைக் கண்ட சோழமன்னன், மணிமேகலையின் விருப்பதற்கேற்ப சிறையில் இருந்தோரை விடுவித்தான். துன்பம் தரும் இடமாக இருந்த சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக ஆக்கினான்.

          ”கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம்

           அறவோர்க்கு ஆக்கினான் அரசாள் வேந்தன்”

என்னும் மணிமேகலை அடிகள், சிறைச் சாலைகள் சீர்திருத்தம் என்னும் செம்மைநெறி புகட்டிய அறச்சாலைகளாக மாறிய புதுமையை விளக்கமுறக் காட்டுகின்றன.

    இன்றைய நாளில்  குற்றவாளிகள் என்னும் சொல்லுக்கு இணையான ‘கறையோர்’ என்னும் சட்டச் சொல்லும் இங்கு வெளிப்படக் காண்கிறோம். இச்சொல் கறைபடிந்தோர், குற்றம் புரிந்தோர் என்னும் பொருளைச் சுட்டுகிறது.

        கறை என்பது குற்றம் என்ற பொருளைக் குறிக்கப் பயன்பட்டதால், சிறையில் இருந்தோரைக் குற்றவாளிகள் அல்லர் என்று விடுவிப்பதைக் ‘கறைவீடு செய்தல்’ என்று தொடர் குறிப்பதாகக் கொள்ளலாம். கைதிகளுக்குப் பொது மன்னிப்பளித்து அவர்கள் திருந்தி வாழ்வதற்கு வழிவகுக்கும் முறையும் பண்டைத் தமிழகத்தில் இருந்த செய்தி வெளிப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...