தொல்தமிழர்
உணவுமுறைகள்
தமிழ் மக்கள் அனைவரும் ஒரே வகையான உணவை உண்டார்கள் என்பதற்கு எவ்விதச் சான்றுகளும்
இல்லை. இயற்கையாக அமைந்த
நிலப்பாகுபாடுகளில் ஆங்காங்குக் கிடைத்தப் பொருள்களையும், தங்கள் முயற்சியால் தட்பவெப்ப நிலைக்கேற்ப உற்பத்தி செய்தப்
பொருள்களையும் கொண்டு தங்கள் உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டார்கள் என்பதற்கும் பல
சான்றுகள் உள்ளன. உணவுப் பொருள்களை அப்படியே உண்ணாமல் நல்ல முறையில் பக்குவம்
செய்து சுவையேற்றி உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.
குறிஞ்சி நில
மக்களின் உணவுமுறைகள்
சோழநாட்டுக்
குறிஞ்சி நில மக்கள் கிழங்கையும் தேனையும் மகிழ்ந்து உண்டார்கள். இவ்விரண்டு
பொருள்களையும் பிறருக்கு விற்று அவற்றிற்குப் பதிலாக மீன், நெய்யையும் நறவையும் வாங்கிப் போய் உண்டுள்ளார்கள். சில சிறப்பான
நாள்களில் நெய் மிகுதியாகப் பெய்த உணவு அவர்களால் உண்ணப்பட்டது. மலை அடிவாரத்தில்
வாழ்ந்த சிற்றூர் மக்கள் தினைச் சோறு சமைத்து நெய்யில் இறைச்சியை வேகவைத்து இரண்டையும்
சேர்த்து உண்டார்கள்.
நன்னனுடைய
மலைகளில் வாழ்ந்த மக்கள் கடமான் இறைச்சியையும் பெண்நாய் கடித்துக் கொண்டுவந்த உடும்பின்
இறைச்சியையும் உண்டுள்ளார்கள். பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குழம்பை மூங்கிலரிசியால்
சமைக்கப்பட்ட சோற்றுடன் கலந்து உண்டார்கள். மலைநாட்டைக் காவல் புரிந்து வந்த வீரர்கள் இறைச்சியையும்
கிழங்கையும் உண்டு வந்தனர். மலைவழிகளில் சென்ற கூத்தர்கள் தினைப்புனங் காவல் செய்த காவலர்களால்
கொல்லப்பட்ட காட்டுப் பன்றியைப் பெற்று, அவற்றின் மயிரைப் போக்கி, அங்கே மூங்கில் உராய்தலால் பற்றி எரிந்துகொண்டு இருக்கும்
நெருப்பில் அவற்றை வதக்கி அந்தப் பன்றிகளின் இறைச்சியை உண்டார்கள்.
முல்லை நில
மக்களின் உணவுமுறைகள்
முல்லை
நிலத்தில் மாடுகள் வளர்ந்தன. எனவே பாலுக்குப் பஞ்சமில்லை. பாலையும் தினை அரிசிச் சோற்றையும் தொண்டைநாட்டு முல்லை நில
மக்கள் உண்டனர். முல்லை நிலப்
பகுதிகளில் சிறு ஊர்களில் இருந்த மக்கள் வரகரிசி சோறும் அவரைப் பருப்பும் கலந்து செய்யப்பட்ட
கூட்டாஞ சோற்றை உண்டு மகிழ்ந்தார்கள்.
நன்னன்
நாட்டில் முல்லைப் பகுதியில் வாழ்ந்த மக்கள் புளிங்கூழ் செய்து உண்டார்கள். சிவப்பு நிறமுடைய
அவரை விதைகளையும் மூங்கில் அரிசியையும் மேட்டு நிலங்களில் விளைந்த ஒரு வகை நெல்லரிசியையும்
கலந்து புளி கரைக்கப்பட்ட உலையில் பெய்து புளியங் கூழாக்கினார்கள் என அறிகிறோம். பலவகைப் பொருள்களையும்
கலந்து புளிப்புச் சேர்த்து வைத்த உணவு பல நாள்களுக்குக் கெடாது என்பது இன்றும் அறியப்பட்ட
உண்மை. வழிப்பயணம்
போகின்றவர்கள் கட்டுச் சோறாகப் புளிச்சோறு எடுத்துச் செல்வதை இன்றும் ஊர்ப்புறங்களில்
காண்கிறோம். பருப்பு, அரிசி, புளி ஆகிய மூன்றின்
கூட்டுக்கலவை சிறந்த உணவு என்பதை இன்றைய அறிவியலும் வற்புறுத்தும். மேலும் பொன்துகள்கள்
போன்ற சிறு அரிசியை இட்டு, வெள்ளாட்டு இறைச்சியையும் சேர்த்து ஆக்கிய சோற்றையும் இட்டு, வெள்ளாட்டு
இறைச்சியையும் சேர்த்து ஆக்கிய சோற்றையும் தினை மாவையும் உண்டார்கள் எனவும் தெரிகிறது. தினைமாவைப் பக்குவப்படுத்தியே உண்டிருத்தல் கூடும்.
முல்லை
நிலப் பகுதியில் அவரை பயிரிடப்படும். அவற்றை உரிய காலத்தில் கொய்வது மரபு ‘அவரை கொய்யுநர்’ என்றே இலக்கியம்
பேசுகிறது. இன்றும் ஊர்ப்புறங்களில்
கதிர் கொய்தல் என்னும் சொற்றொடர் வழங்குவதைக் காணலாம். அவ்வாறு அவரை கொய்பவர்களுக்கு ஆயர் மகளிர் உணவு சமைத்துக்
கொடுத்தார்கள். வரகை நன்குக்
குற்றி அரிசியாக்கிச் சோறு வடித்தனர். தெரு ஓரங்களில் முளைத்துள்ள வேளைச் செடியிலுள்ள பூக்களைப்
பறித்து வெள்ளிய தயிரின்கண் இட்டுச் செய்த புளிக்குழம்பையும் தயாரித்தனர். பிறகு வரகுச்
சோற்றையும், வேளைப்பூ மிதக்கும்
தயிர்க் குழம்பையும் அவரை கொய்யுநர்க்கு வழங்கினர்.
மருதநில மக்களின்
உணவுமுறைகள்
ஒய்மாநாட்டு
மருதநில மக்கள் வெண்மையான நிறத்துடன் கூடிய வெண்சோற்றை நண்டும் பீர்க்கங்காயும் சேர்த்துச்
செய்யப்பட்ட கலவைப் பொரியலுடன் உண்டார்கள். ஆகவே நெல் மிகவும் வெண்மைநிறமுடைய அரிசி ஆகுமாறு உமி நீக்கப்பட்டிருக்க
வேண்டும் என்றும், அந்த நெல் ஒருவகைச் சிறப்பு நெல்லாக இருந்திருக்கலாம் என்றும்
எண்ண இடமுள்ளது.
தொண்டைநாட்டு
மருதநிலத்துச் சிறுபிள்ளைகட்குப் பழைய சோறு தரப்பட்டது. இக்காலத்திலும் பழைய சோறு உண்பது வலுவூட்டும் எனக் கிராம
மக்களால் நம்பப்படுகிறது. அதுவும் காலையில் உண்ணப்பட்டால் உடலுக்கு வளமாகும் என ஊரிலுள்ள
உழைப்பாளி மக்கள் இன்றும் எண்ணுகின்றனர். ஆனால், பழைய சோறு எப்பொழுது உண்டார்கள் என்பதற்குத் தெளிவான சான்றுகள் இல்லை. மெலும் அங்கு அவல் இடித்து உண்டுள்ளார்கள் என்பதும் தெரியவருகிறது. ‘அவல்’ கெடாமல் நீண்ட
காலம் இருக்கக் கூடியது. ஆகவே சிறுவர்கள் பசிக்கும்போது உடன் உண்ணப் பக்குவமாகத் தயாரிக்கப்பட்ட
உணவாக அவலைக் கருதுவது தவறாகாது. இன்றும் கிராம வீடுகளில் அவல் சிறுவர்கட்கு உணவாகக் கொடுக்கப்படுவதைக்
காணலாம். அவலை நீரில்
ஊறவைத்து வெல்லப் பொடியுடன் கலந்து கொடுப்பதை இன்றும் காணலாம். அங்கு வாழ்ந்த
மக்கள் நெல்லரிசி சோற்றைப் பெட்டைக் கோழிப் பொரியலோடு உண்டார்கள்.
வளம்
நிறைந்த நிலத்திற்கு மென்புலம் என்றும், நீர்வளம் இன்றி வானத்தைப் பார்த்து நிற்கும் பகுதிக்கு வன்புலம்
என்றும் அக்கால மக்கள் பெயரிட்டார்கள். வன்புலத்தில் வாழும் மக்கள் மென்புலத்திற்குச் செல்வதுண்டு. அப்பொழுது மென்புலத்தார்
அவர்களை விருந்தினராக ஏற்று உணவளிப்பார்கள். விளைந்த நெல்லை அறுக்கும்போது அளிப்பார்கள். விளைந்த நெல்லை
அறுக்கும்போது வயல்களிலுள்ள கடைமடைகளிலிருந்த வாளைமீன்களை நெல்லறுக்கும் மக்கள் பிடித்து
வருவார்கள். பிறகு, அந்த வயல்களை
உழும்போது உழுபடையால், கொழுவால் – மேலே கொண்டுவரப்பட்ட ஆமைகளை எடுத்து வருவார்கள். கரும்புக் காடுகளில்
தேனிறால்கள் நிறைய தொங்கும் என்பதை இன்றைய நிலையிலும் காணலாம்.
கரும்புகளை
வெட்டுபவர்கள் அந்தத் தேனிறால்களை அழித்துத் தேன் எடுத்து வருவார்கள். அப்பொழுது பெரிய
நீர்த் துறைகளிலிருந்து பெண்கள் நீரை முகந்து வரும்போது அங்கிருந்த செங்கழுநீர்ப் பூவையும்
பறித்து வருவார்கள். விருந்தினர்களுக்குத் தங்கள் பகுதியில் கிடைத்த செங்கழுநீர்ப்
பூவையும் வரவேற்குமுகமாக தந்துள்ளார்கள். விருந்தினர்க்குப் பூக்கொடுக்கும் பழக்கம் இன்று தோன்றியதன்று. இந்த உயரிய
பண்பட்ட நாகரிகம் பழந்தமிழகத்திலிருந்தது என்பதை இவற்றின் மூலம் அறியலாம்.
உழவர்கள் தம் வயலில் உழுதலை நிறுத்திவிட்டுக்
காலையில் உணவு உண்பது வழக்கம். அங்கு வீடுகள் தூரத்திலிருப்பதால் சுடுசோறு கிடைக்காது.
ஆகவே அங்குப் பழஞ்சோற்றையே எளிமையாய்க் கொண்டு வருவார்கள். அப்பொழுது குறுமுயல்களின்
சூட்டிறைச்சியை வாளை மீன்களைக் கொண்டு செய்த அவியலைத் துணையாகக் கொண்டு பழஞ்சோற்றுடன்
உண்பார்கள். ‘உவியல்’ அவியலைக் குறிக்கும் எனக் கொள்ளலாம்.
கரிய கண்ணைக் கொண்ட கருணைக்கிழங்கைப் பொரித்து
அத்துடன் செந்நெல்லரிசியாலாக்கிய வெண்சோற்றையும் சேர்த்துத் தெய்வத்துக்குப் பலியிடும்
பொருளைக் காக்கைகள் தம் சுற்றத்துடன் கூடி உண்ணுவதற்கு வீட்டின் கண் அமர்ந்திருக்கும்
என்ற செய்தி உணவு வகைகளைக் காட்டுவதோடு அவை தெய்வத்திற்கும் படைக்கப்பட்டனவோ என எண்ணுமாறு
உள்ளது.
நெய்தல்நில
மக்களின் உணவுமுறைகள்
ஒய்மானாட்டு நெய்தல்நில மக்கள், பெண்கள்
அளித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச்சியையும் உண்டார்கள். தொண்டை நாட்டு
மக்கள் நெல்லையிடித்து மாவாக்கிப் பன்றிக்கு இட்டுக் கொழுக்க வைத்து நன்கு கொழுத்த
வைத்து நன்கு கொழுத்த பின் அப்பன்றியைக் கொன்று அதன் இறைச்சியைச் சமைத்து உண்டார்கள்
என அறிகிறோம்.
மீனவர்கள் கடல் இறாமீன், வயலில் கிடைத்த
ஆமை ஆகிய இரண்டையும் பக்குவம் செய்து உண்டு வாழ்ந்தார்கள். கள்ளுக் கடைகளில் மீன் இறைச்சியும்
விலங்குகளின் இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன.
பாலைநில மக்களின்
உணவுமுறைகள்
ஒய்மானாட்டுப் பாலைநில மக்கள் இனிமையுடைய
புளியங்கறி கலந்த சோற்றையும் ஆமாவின் சூட்டிறைச்சியையும் உண்டார்கள். தொண்டைநாட்டுப்
பாலைநில மக்கள் புல்லரிசியைச் சேகரித்துத் திரட்டி நிலத்திலே உரல் செய்து அதிலிட்டுக்
குற்றி அரிசியாக்கிப் புல்லரிசிச் சோறு சமைத்து உப்புக் கண்டத்தோடு உண்டனர். அவர்கள்
விருந்தினர்களுக்கும் உணவு தந்தனர். விருந்தினர்க்கு உணவை தேக்கிலையில் உணவு படைக்கும்
பழக்கம் இருந்து வருவதைக் காணலாம்.
மேட்டுநிலத்தில் ஒருவகை நெல் விளைந்தது.
அந்த நெல் பார்ப்பதற்கு ஈச்சங்கொட்டை போன்றிருக்குமாம். அந்த நெல்லிலிருந்து அரிசி
செய்து சோறு ஆக்கி அதனுடன் உடும்பின் பொரியலையும் சேர்த்துக்கொண்டு பாலைநில மக்கள்
உண்பதுண்டு.
அரசர் உணவுமுறைகள்
புலால் நாற்றம் வீசும் பசுமையான துண்டங்களைச்
சுடுவதற்குப் பூநாற்றம் வீசும் விறகுகளால் புகையுண்டாக்கி அவ்வாறு வெந்த ஊனையும், துவையையும்,
கறியையும், சோற்றையும் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனின் கைகள் உண்டன எனக் குறிப்பிடப்படுவதிலிருந்து
இவ்வகை உணவை அரசர்கள் என அறியலாம்.
மலராத முகைகளைக் கொண்ட பூக்களால் இடையிடையே
பசுமையான இலைகளை வைத்துப் பூப்பந்து கட்டுவது வழக்கம். வெண்மையான பூக்களும், பசுமையான
இலைகளும் கொண்ட பூப்பந்தினைப் போல ஊனினையும் சோற்றினையும் கலந்து உருண்டை உருண்டையாகக்
கவளங்கள் பிடிக்கப்பட்டுச் சோற்று அமலைகள் தயாரிக்கப்பட்டன. அவற்றை அரசர் அளிக்கப்
பாணர் கூட்டம் மகிழ்ந்துண்டது.
இந்த அமலைச் சோறு வேறு வகையாகவும் அமைவதுண்டு.
புன்செய் நிலங்களில் வரகு கிடைக்கும். அது புறாவின் கருப்போன்று தோன்றும். அந்த வரகிலிருந்து
அரிசி உண்டாக்கி, அதைப் பாலில் வேகவைத்துச் சமைப்பார்கள். மேலும், அந்தப் பாற்சோற்றைத்
தேனோடு கலந்து உண்பார்கள். மேலும், அச்சோறு சிறிய முயலின் கொழுத்த இறைச்சியுடன் கலந்து
அமலைகளாக வைக்கப்படும். கொழுப்பும், சோறுமாகக் கலந்திருந்ததால், ‘அமலைக் கொழுஞ்சோறு’
எனப் புலவர் குறித்தனர். சோற்று அமலைகள் இவ்வாறு தயாரிக்கப்பட்டன எனலாம்.
பாணர்கள் உணவு
உண்டமுறைகள்
அமலைக் கொழுஞ்சோற்றைப் பாணர்கள் மிக மகிழ்ந்து
உண்டார்கள். அவர்கள் நெஞ்சங்கள் மிக நேர்மையானவை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல்
ஆகிய கரத்தல் இல்லை. ஆகவே ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் இன்பமான விருப்பமுடைய சொற்களில்
மகிழ்ச்சியுடன் இன்பமான விருப்பமுடைய சொற்களில் பேசிக்கொண்டு நன்கு நிறைய உண்டார்கள்
எனத் தெரிகிறது. இத்தகைய உணவு உண்ணும் முறையை மேலைநாட்டார் நாகரிகமானதாகவும் அறிவியல்
முறைச் சிறப்புடையதாகவும் போற்றுவதை நாம் அறிவோம். இந்த நோக்கில் பாணர் உணவு உண்ட முறையைக்
காண்போமானால் அவர்களுடைய நாகரிகப் பண்பு எவ்வளவு உயர்ந்தது என்பது விளங்கும்.
குழந்தை உணவுமுறைகள்
குழந்தைகள் வளரத் தொடக்கநிலையில் பால் மட்டுமே
தரப்படும். நீர்மப் பொருள்களே அவர்களால் செரிக்கப்படும். ஆனால், தக்க பருவம் வந்தபின்
பாலை விட்டு அல்லது பாலுடன் உணவாகக் கட்டிப் பொருள்களைக் கலந்து கொடுப்பது வழக்கம்.
தலையாலாங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் இளமை வாழ்வுபற்றிக் கூறும் போது அவன்
பாலைவிட்டு அன்றுதான் மென்று தின்னும் உணவைக் (அயினி) கொண்டான் என இளமை வீரம்பற்றி
எடுத்துக் காட்டப்படுகிறது.
பகுத்துண்ணும்
பண்புகள்
விழாக் காலங்களில் உணவு பலர்க்கும் பங்கிட்டுத்
தரப்படும் எனத் தெரிகிறது. சான்றாகப் பொருட்டெழினியின் ஊர் விழாக்காலமல்லாத காலத்தும்
செம்மறியாட்டு உணவு எல்லோருக்கும் மகிழ்ந்துண்ணத் தரப்பட்டது என அறிகிறோம்.
வறியவரின் உணவுமுறைகள்
வெறும் மான்நிணத்தைச் சமைத்துக் கள்ளுடன்
சேர்த்து உணவாகக் கொள்வதும் உண்டு. சில நேரங்களில் சிலருக்கு வளமான உணவு கிடைக்காமல்
போவதுமுண்டு. வெறும் குப்பைகளில் விளைந்துள்ள கீரைகளைப் பறித்து அது முற்றாநிலையில்
இருக்கின்றவற்றைப் பறித்து அவற்றை வெறும் நீரைக் கொதிக்க வைத்து இட்டுச் சமைத்து உப்பும்
மோரும் இல்லாமல் அந்த வெந்த கீரையைச் சோறாக எண்ணி உண்பவரும் உண்டு.
நிறைவாக,
உணவின் பலவகையான பெயர்களாக. குய்யுடை
அடிசில், நெய்யுடை அடிசில், பாற்சோறு, ஊன்துவை அடிசில், வல்சி, சோறு, புழுக்கு, புற்கை,
அவிழ், அமுதம், கூழ், அயினி, வெண்சோறு எனப் பலவகைப் பெயர்கள் காணப்படுகின்றன. மேலும்
இவற்றைப் பக்குவப்படுத்துவதற்குப் பலவகை கருவிகள் கூறப்பட்டுள்ளன. பானை, மிடா, குழிசி
என்பன சோறு சமைக்கும் பாத்திரங்களாக இருந்தன. சுளகிலும், மான்தோலிலும் பொருள்களை உலர
வைத்துள்ளார்கள். எக்காரணம் கொண்டும் விதைப்பதற்காக வைத்துள்ள விதைகளை உண்பதில்லை.
விழாக் காலங்களில் சிறப்பான உணவுகளை உண்டார்கள். ஒரு நாழி அளவு பொதுவாய் உண்பது வழக்கம்.
Comments
Post a Comment