ஒழுக்கம்
ஒழுக்கம் என்பதற்குச் சாதி, மத, இன, கால,
நேர, இட, வேறுபாடுகள் கிடையாது. அது கவசம் போல் இருந்து மனித குணங்களைப் பாதுகாக்கிறது.
மனிதனுக்கு உயர்வுத் தாழ்வுகளைத் தருகிறது. அதனால் தான்,
”ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும்
ஓம்பப் படும்” (குறள்-131)
என்று திருவள்ளுவர்
பெருந்தகை விளக்குகின்றார். அன்புடையவனாக, அருளுடையவனாக, குணசீலனாக, ஞானியாக இருந்தாலும்
ஒழுக்கம் இல்லாதவனை மனிதனாக மதிக்கமாட்டார்கள். சாமியார்களைப் பற்றி அண்மைக் கால செய்தித்
தாள்களில் வந்த செய்திகளை மூலமும், அதே போன்று இன்று நீதி மன்றங்களில் நடைபெறுகின்ற
வழக்குகளில் பெரும்பான்மை ஒழுக்கக் கேடுகளினால் தோன்றிய வழக்குகள் அதிகமாக இருக்கின்றது.
·
முக்கோடி வாழ்நாளும்,
முயன்று பெற்ற தவமும் பெற்று சிறந்த பக்திமானாகப் பேரரசனாக ஆட்சி புரிந்த இராவணன் பிறன்மனையாளைக்
கவர்ந்து ஒழுக்கம் தவறியமைக்காக இன்றளவும் உலகம் அவனைப் பழிக்கிறது.
·
தருமராசன் சூதாட்டம்
என்ற தீய ஒழுக்கத்தைக் கைக் கொண்டதால் நாடிழந்து நல்ல மனையாளையும் இழந்தான். தீராத
பழியையும் சூடிக் கொண்டான்.
·
கொடையில் சிறந்த
கர்ணன் தனது இன்னுயிரையும் தானமாக ஈந்தவன். ஆனால் தீயவர்களான கௌரவர்கள் பக்கத்தில்
சேர்ந்ததனால் தீயவனாக நினைக்கப்படுகின்ற இழிந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றான்.
· தவ ஒழுக்கத்திலும்,
வேத வித்தைகளிலும் சிறந்தவனான, பரசுராமன் பாண்டவர்களின் குழந்தைகள் ஐவரையும் தூக்கத்தில்
கொன்ற மகாபாவியாகின்றான்.
·
ஒழுக்கத்தின்
மேன்மையால் நந்தன் நாயன்மார் வரிசையிலும், பாணன் ஆழ்வார் வரிசையிலும் வைத்துத் துதிக்கப்படுகின்றனர்.
·
நாகரிகம் இல்லாத
சேரிகளிலே சேற்றோடும் செடிகளோடும் உறைந்து அழுக்கில் புரண்டு அருவருக்கத்தக்க நிலையில்
வாழ்ந்த மக்களுடன் பழகி அவர்களைத் திருத்தி, சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தித் தெய்வ
நிலைக்கு உயர்ந்துள்ள அன்னைத் தெரசாவை மறக்க முடியுமா? அவருடைய தொண்டுகளை மறக்க முடியுமா?
ஆக ஒருவருடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் ஒழுக்கமே
சிறந்த காரணம் என்பதை அறிகிறோம்.
”தாயிற் சிறந்த ஒரு கோயிலும் இல்லை”
”ஈன்றாளோடு எண்ண கடவுளும் இல்”
”அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” (கொன்றை
வேந்தன்)
என்றெல்லாம்
பெருமையாகப் பேசப்படும் தாய்க்குப் பசிவந்தால்
கூட அப்பசியை நீக்கும் பொருட்டுச் சான்றோர் பழிக்கின்ற ஒழுக்கம் இல்லாத தீய
செயல்களைச் செய்யக் கூடாது என்று வள்ளுவர் கட்டளையிடுகிறார். அவர்,
”ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர்
பழிக்கும் வினை” (குறள்-656)
என்று உறுதியாகச்
சொல்கிறார்.
ஒழுக்கம் –
இன்றைய நிலை
நம் முன்னோர்கள் இயற்றிய இலக்கியங்கள் அனைத்தும் ஒழுக்கம், பிறன்மனை நோக்கா பேராண்மை, கற்பொழுக்கம் என்று அனைத்து நல் ஒழுக்கங்களையும் உணர்த்துகின்றது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஒழுக்கக்கேடு, பாலியல் துன்புறுத்தல், கள்ளக்காதல் என்று செய்தித்தாள்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சமுதாய மாற்றம் என்பது மக்களின் மனங்களை மாற்ற வேண்டும். இக்குற்றங்களுக்குத் தண்டனைக் கடுமையானதாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும்.
நிறைவாக,
தண்ணீரே சேற்றை உருவாக்குகிறது. அந்தச் சேற்றையும்
தண்ணீரே கழுவி சுத்தமாக்குகிறது. ஆக தண்ணீரை இதமாகப் பயன்படுத்தினால் சேற்றிலே புரள
வேண்டாம். அது போல் மனத்தை ஒழுக்க நிலையில் வைத்துக் கொண்டால் எப்போதும் உயர்ந்த நிலையில்
தண்ணீருக்கு மேலேயே இருக்கும் தாமரைப் பூவைப் போலத் தலை நிமிர்ந்து வாழலாம்.
Comments
Post a Comment