கொடுக்கல்
வாங்கல்
கொடுக்கல் வாங்கல் என்பது உலக வழக்கு. கடன்
கொடுப்பது கொடுக்கல். அதைத் திருப்பி வாங்குதல் வாங்கல். பணத்தை வட்டிக்குக் கொடுத்து
வாங்கும் முறை ஏற்பட்ட பிறகுதான் கொடுக்கல் வாங்கல் என்ற சொற்றொடர் பிறந்திருக்கக்
கூடும்.
பண்டைக் காலத்திலே பணத்தை வட்டிக்குக் கொடுத்து
வாங்கும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. பொருள் வேண்டியவர்கள். தமக்கு வேண்டிய பொருளை,
உள்ளவர்களிடம் கடனாக வாங்கி க் கொள்வார்கள். பிறகு கொடுத்து விடுவார்கள். இப்படி வாங்கும்
கடனுக்குத் தனிசு என்று பெயர்.
கடன் வாங்கும் போது முகமலர்ச்சியுடன் வாங்குவார்கள்.
அக் கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது வாங்கும் போதிருந்த முகமலர்ச்சியை அவர்களிடும்
காண முடியாது. இதை இன்றும் கடன் வாங்குவோரிடம் காணலாம். கடன் கொடுத்தவர்களுக்கும் கடன்
வாங்கினவர்களுக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதையும் காண்கின்றோம். வாங்கும்போது மகிழ்ச்சியடைதலும்,
கொடுக்கும்போது வருத்தமடைதலும் மக்கள் இயற்கையென்றுதான் கொள்ளவேண்டும். மிகவும் நேர்மையாக
நடந்துக்கொண்ட பண்டைக்கால மக்களிடமும் இக்குணம் இருந்ததாகத்தான் தெரிகின்றது.
”உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும்,
தாம்
கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறாகுதல்
பண்டும்இவ் வுலகத்து இயற்கை; அஃது இன்றும்
புதுவது அன்றே” (அகம்.பா.22)
உண்பதற்காக
வாங்கும் கடனைப் பெற, முறையோடு கூறி இரக்கும்போது காணப்படும் முகமும், தாம் வாங்கிய
கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது காணப்படும் முகமும் வேறு வேறாகக் காணப்படுதல் பண்டைக்
காலத்திலும் இயல்பாகும். இந்த இயல்பு இன்றும் உண்டு. இது புதியதன்று. பழமை தொட்டுத்
தொடர்ந்தே வருகின்றது.
Comments
Post a Comment