மணிமேகலை – கிளைக் கதைகள் -1
1.
சுதமதி கதை
சுதமதி
என்பவள் சண்பை நகரத்திலிருந்த கௌசிகன் என்னும் அந்தணன் மகள். இளம் பருவத்திலேயே
அன்னையை இழந்தாள். தந்தையால் அன்புடன் வளர்க்கப்பட்டாள். அவள் தனியாக
ஒரு பூஞ்சோலையில் மலர் கொய்து கொண்டிருந்தாள். அப்பொழுது வித்தியாதரன் ஒருவன் அவளைத் தூக்கிச் சென்றான். காமம் நுகர்ந்தபின்
அவளைக் காவிரிப்பூம்பட்டினத்தில் விட்டுச் சென்றான். அவள் ஒரு சமணப் பள்ளியில் வாழ்ந்து வந்தாள்.
அவள்
தந்தை கௌசிகன் மகளைக் காணாமல் மனம் வருந்தினான். கன்னியாகுமரிக்கு நீராடச் செல்லும் அந்தணர்களுடன் சேர்ந்து
அவனும் சென்றான். செல்லும் வழியிலே காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்தான். சங்கமுகத் துறையிலே
நீராடிவிட்டு வரும்போது வழியிலே சுதமதியைக் கண்டான். அவளிடம் கொண்ட அன்பினால் அவன் சுதமதியுடனேயே தங்கி விட்டான்.
கௌசிகன்
பிச்சை எடுத்துவரும் உணவைக் கொண்டு சுதமதியைக் காத்து வந்தான். ஒருநாள் அவன்
பிச்சைக்குப் போகும்போது இளம் கன்றையுடைய பசு ஒன்று அவனை முட்டிவிட்டது. அவன் வயிறு
கிழிந்து குடல் சரிந்தது. அவன் சரிந்த குடலைக் கையிலே தாங்கிக் கொண்டு சுதமதி தங்கியிருந்த
சமணப் பள்ளியிலே புகுந்தான். தன்னைக் காக்கும்படி முறையிட்டான். சமண முனிவர்கள்
அவன் முறையீட்டைக் கேட்கவில்லை. அவனையும், சுதமதியையும் வெளியிலே தள்ளி விட்டனர்.
இதனால்
துக்கம் அடைந்த கௌசிகனும் சுதமதியும் வாய்விட்டுப் புலம்பிக்கொண்டு வீதி வழியே சென்றனர். அப்பொழுது பிச்சைப்
பாத்திரத்தைக் கையில் ஏந்தி வந்து சங்கதருமன் என்னும் பௌத்த முனிவன் அவர்களைக் கண்டு
மனம் வருந்தினான். அவர்களை நெருங்கினான். பிச்சைப் பாத்திரத்தைச் சுதமதியின் கையிலே கொடுத்தான். கௌசிகனைத் தோளிலே
தூக்கிச் சென்றான். புத்த சங்கத்திலே சேர்த்துக் காப்பாற்றினான். அது முதல் சுதமதியும், கொளசிகனும்
பௌத்த சங்கத்திலே இருந்தனர். மாதவி பௌத்த சங்கத்தில் சேர்ந்தபின் சுதமதி அவளுடைய உயிர்த்
தோழியானாள்.
2.
கோதமையின் கதை
காவிரிப்பூம்பட்டினத்தில்
பழம்பெயர் சம்பாபதி என்பது. பாரத நாட்டின் பழம் பெயர் சம்பத் தீவு என்பது. சம்புத் தீவின்
தெய்வம் சம்பாபதி. அவள் வீற்றிருக்கும் நகரம் சம்பாபதி ஆகும். சம்பாபதி என்பவள்
ஒரு பெண் தெய்வம். சர்வ வல்லமையும் படைத்த தெய்வம்.
இந்தச்
சம்பாபதியிலே முதுமை பருவம் அடைந்த ஒரு பார்ப்பானும் பாப்பனியும் வாழ்ந்தனர். பார்ப்பனியின்
பெயர் கோதமை. அவர்களுக்குச்
சார்ங்கலன் என்னும் பெயருள்ள மகன் ஒருவன் இருந்தான்.
ஒருநாள்
சார்ங்கலன் அந்நகரின் சுடுகாட்டைக் கண்டான். அங்கே சென்றான். ஆடிக்கொண்டிருந்த பேய் ஒன்றைக் கண்டு அஞ்சி விட்டான். அவன் அலறிக்
கொண்டு தாயிடம் ஓடிவந்து தன்னைப் பேய் அறைந்து விட்டது என்று சொல்லி வீழ்ந்து இறந்தாள்.
கோதமை
அழுது புலம்பினாள். இறந்த மகளைக் கையில் ஏந்திக் கொண்டு சம்பாபதியின் கோயிலை
அடைந்தாள். சம்பாபதியை
வேண்டி, ”நீ என் மகளைக்
காப்பாற்றாமல் விட்டதற்கு காரணம் என்ன?” என்று கேட்டாள். அவள் முன் சம்பாபதித் தெய்வம் தோன்றி, ”அவனது அறியாமை
காரணமாக வந்த தீவினையே அவன் உயிரை உண்டது.” என்று கூறினாள் கோதமை, ”என் உயிரை எடுத்து கொள், இவன் உயிரைக் கொடு, இவன் கண்ணிழந்த தந்தையைக் காப்பான்” என்று இரந்தாள். சம்பாபதி ”போன உயிர் மீளாது, தன் வினையின்படி
மறுபிறப்புப் பெற்று விடும். நீ சொல்வது என்னால் முடியும் காரியம் அன்று” என்றாள். கோதமை, ”நீ கேட்ட வரங்களையெல்லாம்
தருவாய் என்று நூல்கள் கூறும். நான் கேட்பதைத் தராவிட்டால் இங்கேயே இறப்பேன்” என்றாள்.
3.
இலக்குமியின்
கதை
அசோதர
நகரத்து மன்னன் இரவிவன்மன். அவனது மனைவி அமுதபதி. அவர்களுக்குத் தாரை, வீரை, இலக்குமி என்று மூன்று பெண்கள். இவர்களுள் இலக்குமி என்பவள் இராகுலன் என்னும் வேந்தனுக்கு
வாழ்க்கைப்பட்டாள். அவள் சாது சக்கரன் என்னும் முனிவனுக்கு உச்சிப் பொழுதில்
உணவிட்டு உபசரித்தாள். அவள் கணவன் இராகுலன் திட்டிவிடத்தால் மாண்டான். அவனுடன் தீப்புகுந்து
மாண்டாள். இவளே காவிரிப்பூம்
பட்டனத்தில் மாதவிக்கும் கோவலனுக்கும் மகளாகப் பிறந்தவள். மணிமேகலை எனப் பெயர் பெற்றாள்.
4.
தாரையும் வீரையும்
அங்க
நாட்டுச் சச்சய நகரத்து அரசன் துச்சயன். அவன் இலக்குமியின் மூத்த சகோதரிகளாகிய தாரையையும், வீரையையும்
மணந்தான். ஒரு நாள் அவன்
தன் மனைவியருடன் கங்கைக் கரையை அடைந்தான். அங்கிருந்த அழகிய காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தான். அங்கே அறவண
அடிகள் வரக் கண்டான். அவரை வணங்கினான். தாங்கள் யார்? என்று வினவினான். தாங்கள் யார்? என்று வினவினான். அறவண அடிகள், ”நான் பாதபங்கய மலையைத் தரிசிக்க வந்தேன். ஆதிகாலத்தில்
புத்தர் பெருமான் அம்மலையின் மேல் நின்று மக்களுக்கு நல்லறம் போதித்தார். அதனால் அம்
மலையைப் பாபங்கயமலை என்று அழைத்தனர். நீங்களும் அம்மலையைக் கண்டு வணங்குங்கள் என்று கூறிச் சென்றார். துச்சயனும், தாரையும், வீரையும் சென்று
அம்மலையைத் தரிசித்துத் திரும்பினர்.
அதன்பின்
ஒருநாள் வீரை, மதுவுண்ட மயக்கத்தால்
ஒரு யானை முன் சென்று வீழ்ந்து மாண்டாள். தங்கையிறந்த துக்கத்தை தாங்காமல் தாரையும் ஒரு மாடத்தின்
மீதேறி வீழ்ந்து மாண்டாள். இதனால் துச்சயன் துக்கம் அடைந்தான். பாத பங்கய மலையைத்
தரிசித்த புண்ணித்தாலேயே தாரையும், வீரையும் முறையே மாதவியாகவும், சுதமதியாகவும் பிறந்தனர்.
5.
இராகுலன் கதை
அத்திபதி
என்றும் அரசனுக்கும் நீலபதி என்னும் அரசிக்கும் மகனாகப் பிறந்தவன் இராகுலன் என்பவன். அவன் இரவிவன்மன்
மகள் இலக்குமியை மணந்தான்.
அவனும்
அவளும் ஒருநாள் சோலையிலே தங்கியிருந்தனர். அப்பொழுது இலக்குமி அவனுடன் ஊடியிருந்தாள். ஊடலைத் தீர்க்க
இராகுலன் அவள் அடியில் வீழ்ந்து பணிந்தான். அப்பொழுது நல்ல உச்சி வேளை, சாதுசக்கரன் என்னும் பௌத்த சாரணமுனிவன் வானத்திலிருந்து அங்கே
இறங்கினான். அவனைக் கண்ட
இராகுலன், ”இங்கே வந்தவன்
முனிவனை வணங்கும்படிக் கூறினான். அவளும் அவனும் முனிவனை வணங்கினர். அவனை உபசரித்து
உணவு உண்பித்தனர்.
பிரம
தருமன் என்னும் முனிவன் காயங்கரை என்னும் ஆற்றங்கரையில் அமர்ந்து புத்த தேவரின் வருகையை
அறிவித்துக் கொண்டிருந்தான். அவனை இலக்குமியும் இராகுலனும் வழிபட்டனர். அவனுக்கு அமுது
செய்விக்க அமுது செய்விக்க எண்ணி விரும்பி அழைத்தனர். அவனும் அமுதருந்துவதற்கு ஒப்புக் கொண்டான்.
இராகுலன்
சமையற்காரனிடம் விடியற்காலத்திலேயே உணவு ஆக்கும்படி உத்தரவிட்டான். சமையற்காரன்
சிறிது காலந் தாழ்ந்து வந்தான். அச்சத்தால் விரைந்து அடுக்களையில் புகும்போது கால் வழுக்கிச்
சமையல் பாண்டம் சிதையும் படி விழுந்தான். அது கண்ட இராகுலன் கோபங்கொண்டான். அவன் கழுத்தை
வாளால் வெட்டித் துண்டாக்கினான். இத்தீவினை காரணத்தால்தான் இராகுலன் திட்டிவிடத்தால் இறந்தான். அவனுடன் இலக்குமியும்
தீப்பாய்ந்து இறந்தாள்.
இந்த
இராகுலனே உதயகுமாரனாகப் பிறந்தான். முன் செய்த தீவினையால், காஞ்சனன் என்னும் வித்தியாதரனுடைய வாளுக்கு இரையானான்.
6.
காயசண்டிகையின்
கதை
வடக்கில் வித்தியாதரர் உலகில் காஞ்சம் என்பது ஓர் ஊர். அவ்வூரிலிருந்த
காயசண்டிகை என்பவளும் அவன் கணவனும் பொதியமலை வளம் காணப் புறப்பட்டு வந்தனர். வரும் வழியில்
ஒரு காட்டாற்றங் கரையில் தங்கினர். அங்கே விருச்சிகன் என்ற முனிவன் ஒருவன் பனம்பழம் போன்ற நாவல்
கனி ஒன்றை ஒரு தேக்கிலையிலே வைத்துவிட்டு நீராடப் போயிருந்தான். அக் கனியைக்
காயசண்டிகை காலால் மிதித்துக் கெடுத்து விட்டாள்.
நீராடி மீண்டு வந்த முனிவன் அக்கனி சிதைந்திருப்பதைக் கண்டான். கோபங்கொண்டான். காயசண்டிகையைப்
பார்த்து, ”இக்கனி பன்னிரண்டு
ஆண்டுக்கு ஒரு முறைதான் கிடைக்கும். நான் பன்னிரண்டு ஆண்டுகள் பட்டினியிருந்து இக்கனி கிடைக்கும்போது
உண்பேன். இதை நீ சிதைத்து
விட்டாய். நான் இன்னும்
பன்னிரெண்டு ஆண்டுகள் பசித்திருக்கவேண்டும். ஆதலால், நான் மீண்டும் இக்கனியைப் பெறும் வரையிலும் நீ ஆனைத்தீ என்னும்
பசி நோயால் வருந்தக் கடவது. வான்வழிச் செல்லும் மந்திரத்தையும் மறப்பாயாக. என பசி நீங்கும்
போது உன் பசியும் ஒழிவதாக” என்று சாபம் இட்டான்.
அப்பொழுதே காயசண்டிகையைப் பசி பிடுங்கித் தின்றது. அவள் கணவன்
காய், கனி, கிழங்குகளை
ஏராளமாகத் தேடித் தந்தான். அவற்றை உண்டும் அவள் பசி அடங்கவில்லை. அவள் வான்வழிச்
செல்லும் மந்திரத்தையும் மறந்தாள். ஆதலால் அவன் தன்னுடன் அவளை அழைத்துச் செல்ல முடியவில்லை. ”நீ நடந்து சென்று
காவிரிப்பூம்பட்டினத்தில் இரு. அங்கே உள்ள மக்கள் உணவிடுவார்கள். நான் ஆண்டுதோறும்
இந்திர விழா நடக்கும்போது அங்கு வருவேன்” என்று சொல்லிப் போய் விட்டான்.
காயசண்டிகை காவிரிப்பூம்பட்டினத்தில் வந்து தங்கியிருந்தாள். மணிமேகலையிடம்
அமுதசுரபியிலிருந்து உணவு பெற்று உண்டாள். பசி நீங்கினாள். பன்னிரெண்டு ஆண்டு கழிந்ததால், விருச்சிக முனிவன் தந்த சாபமும் விலகிற்று. அவள் மணிமேகலையிடம்
விடைபெற்று தன்னூர்க்குத் திரும்பினாள். போகும் வழியில் விந்தாகடிகை என்னும் தெய்வத்தால் விழுங்கப்பட்டாள். காயசண்டிகையின்
கணவன் காஞ்சனன் இச்செய்தியை அறியான். காயசண்டிகையைத் தேடிக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்தான்.
மணிமேகலை காயசண்டிகை உருவில் உலக அறவியில் உறைந்தாள். அவளை நாடிவந்த
உதயகுமரன் மேல் காஞ்சனன் ஐயங்கொண்டு அவனை வாளால் வெட்டி வீழ்த்தினான். அவன் காயசண்டிகை
உருவில் இருந்த மணிமேகலையிடம் நெருங்கும்பொது அங்கிருந்த கந்திற்பாவை அவனைத் தடுத்தது. காயசண்டிகையின்
கதியை உரைத்தது. அவன் உள்ளம்
வருந்தித் தனது ஊருக்குச் சென்றான்.
1. மணிமேகலை காட்டும் மனித வாழ்வு - சாமி.சிதம்பரனார், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-600017
Comments
Post a Comment