மணிமேகலை
கிளைக்
கதைகள் – 2
7. ஆதிரையின்
கதை
ஆதிரை கற்பிலே சிறந்த காரிகை. காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்தவள். அவள் கணவன்
சாதுவன் என்பவன். அவன் பரத்தையின் இணக்கத்தால் செல்வத்தை இழந்தான். பொருள் தேடும் பொருட்டுச்
சில வணிகருடன் கப்பலேறி வேற்று நாட்டுக்குப் புறப்பட்டான். கடும் புயலில் கப்பல் கடலில்
விழுந்தது. அதன் பாய்மரத் துண்டு ஒன்றின் துணை கொண்டு சாதுவன் நாகர்கள் வாழும் தீவில்
உள்ள ஒரு மலைப் பக்கத்தை அடைந்தான். நாகர்கள் உடையில்லாமல் வாழ்பவர்கள். நர மாமிசம்
புசிப்பவர்கள்.
சாதுவனுடன் சென்ற வணிகர்களில் சிலர் தப்பிப்
பிழைத்துக் காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்தனர். அவர்கள் ஆதிரையைக் கண்டு, சாதுவன் கடலில்
மூழ்கி இறந்தான் என்று கூறினர். ஆதிரை மிகவும் வருந்தினாள். தீ மூட்டி, ”கணவன் அடைந்த
உலகை யானும் அடைவேன்” என்று கூறி அத்தீயிலே இறங்கினாள். தீ அவளை எரிக்கவில்லை. ”உன்
கணவன் நாகர் மலையில் உயிருடன் உள்ளான். இன்னும் சில தினங்களில் திரும்புவான். என்று
ஆகாசவாணி அறிவித்தாள். ஆதிரையும் மனம் தேறிக் கணவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
நாகர் மலையை அடைந்த சாதுவன் ஒரு மரநிழலிலே
படுத்து உறங்கினான். அவன் உடம்பை உண்பதற்காக நாகர்கள் அவனை எழுப்பினர். அவன் எழுந்து
நாகர்களின் மொழியிலே அவர்களுடன் பேசினான்.
அவர்களை அவனைத் துன்புறுத்தவில்லை. ”எங்கள் குருவினிடம் வா” என்று கூட்டிச் சென்றனர்.
மாமிச உணவுகளுக்கு மத்தியிலே பெண்டுடன் கூடியிருந்த நாகர் குருவை சாதுவன் கண்டான்.
அவனைத் தன் பேச்சால் தன் வயப்படுத்திக் கொண்டான். சாதுவன், தான் அங்கு வந்து சேர்ந்த
வரலாற்றைக் கூறினான்.
நாகர் குரு தன் ஊழியரைப் பார்த்து, ”இவனுக்குக்
கள்ளும் ஊனும் கொடுத்து இளைய மங்கை ஒருத்தியையும் கொடுங்கள்” என்று உத்தரவிட்டான்.
சாதுவன் ”அவைகள் வேண்டாம்” என்று மறுத்தான். ஊன், கள்,காம்ம் இவற்றின் தீமைகளை எடுத்துரைத்தான்.
புண்ணிய பாவங்களின் தன்மைகளைப் புகன்றான். நல்லொழுக்கங்களைப் பற்றி போதித்தான்.
சாதுவன் மொழிகளைக் கேட்டு மகிழ்ந்த நாகர்
தலைவன் சாதுவனுக்குப் பல பரிசுகளை அளித்தான். சந்தனம், அகில், துகில் ஏனைய செல்வங்கள்
அவன் அளித்த பரிசுகள், அதன் பின் சாதுவன், அங்கு வந்த சந்திர தத்தன் என்னும் வணிகனது
கப்பலிலே ஏறிக் காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்தான். தன் மனைவி ஆதிரையுடன் கூடித் தானதர்மங்கள்
செய்து வாழ்ந்திருந்தான். இந்த ஆதிரையின் கையால்தான் முதன் முதலில் மணிமேகலை அமுதசுரபியில்
பிச்சையேற்றாள்.
8. சுகந்தன்
கதை
காந்தன் என்னும் அரசன் காவிரிப்பூம்பட்டித்தை
ஆண்ட காலத்தில், பரசுராமன் அவனுடன் போர் புரிய வந்தான். காந்தனும் அவனுடன் போரிடப்
புறப்பட்டான். அப்பொழுது துர்க்காதேவி, ”நீ இப்பொழுது பரசுராமனுடன் போர் செய்யப் புகுதல்
தகாது” என்றாள். ஆதலால் அவன் அந்த நகரைவிட்டு வேறு இடம் செல்லத் துணிந்தாள். தான் சென்றபின்
இந்நகரை ஆளத்தக்கவர் ஆர் என்று ஆராய்ந்தான்.
காவல் கணிகையின் மகன் சுகந்தன் என்பவன் சிறந்த
வீரன். அரசகுலத்தான் அல்லன். அவன் அரசு புரிந்தால் பரசுராமன் பூம்புகாரின் மேல் போருக்கு
வரமாட்டான் என்று துணிந்தான் காந்தன். உடனே சுகந்தனை அழைத்து, தன் கருத்தை அவனிடம்
கூறினான். ”நான் அகத்தியரின் அருள் பெற்று மீண்டும் வரும்வரையில் நீயே இந்த நகரத்தை
ஆளவேண்டும்”. என்று உரைத்தான். நீ ஆள்வதனால் இந்நகருக்குக் காகந்தி என்று பெயர் வழங்குவதாக
என்று சொல்லி விட்டுத் தான் செல்ல நினைத்த இடத்துக்குச் சென்றுவிட்டாள்.
சுகந்தனுக்கு இரண்டு பிள்ளைகள். சுகந்தன்
அறநெறி தவறாமல் ஆட்சிப் புரிந்தான். அவனது பிள்ளைகளில் இளையவன், காவிரியில் நீராடிவிட்டுத்
தனித்துவந்த மருதி என்னும் பார்ப்பினியைக் கண்டு காதல் கொண்டான். அச்செய்தியை அறிந்த
சுகந்தன் அவனை வெட்டிக் கொன்றான்.
சுகந்தனது மூத்த மகன் விசாகை என்னும் பத்தினிப்
பெண்ணைத் தெருவில் கண்டாள். அவள் மேல் மோகம் கொண்டான். தன் தலையிலிருந்த மலர் மாலையை
எடுத்து அவள் கழுத்தில் போடுவதற்கு எண்ணினான். தன் கையைத் தன் குடுமியிலே உள்ள மாலையை
எடுக்கக் குடுமியில் வைத்தான். அவன் கை அப்படியே நின்று விட்டது. இதை அறிந்த சுகந்தன்
அவனையும் மகனென்று பாராமல் வெட்டி மடிந்தான். இவ்வாறு மாதர்களின் கற்பை காப்பத்திலே
தலைநின்றாள்.
8. மருதியின்
கதை
மருதி என்னும் பார்ப்பனி காவிரியில் நீராடிவிட்டு
தனியாக வந்தாள். சுகந்தனது இளைய மகன், அவனைக் கண்டு காமஞ் கொண்டான். இதை அறிந்த மருதி
வருந்தினாள். ”நான் பிறர் நெஞ்சு புகுந்தேன், பத்தினிப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்.
இனி நான் என் கணவனுடன் வாழத் தகுதியுள்ளவள் அல்லேன்”. என்று துன்புற்றாள். தன் வீட்டுக்குச்
செல்லாமல் பூத சதுக்கத்தை அடைந்தாள். ”நான் எக்குற்றமும் இழைத்திலேன். பிறர் நெஞ்சு
புகுந்த காரணம் அறியேன். தெய்வமே நீதான் எனக்கு உண்மையை உணர்த்த வேண்டும்” என்று புலம்பினாள்.
அவள்முன் சதுக்கப்பூதம் தோன்றியது. ”நீ தெய்வம்
தொழாஅல் கொழுநன் தொழுது எழுவாள் பெய் எனப் பெய்யும் மழை” என்று தெய்வப்புலவன் மொழியை
மறந்தாய். நகைச் சுவை தரும் கதைகளையும், பொய்க் கதைகளையும் கேட்பதில் நாட்டங் கொண்டாய்.
திருவிழாக்களை விரும்பினாய். தெய்வங்களைப் பணிந்தாய். ஆதலால் தான் பிறர் நெஞ்சு புகுந்தனை.
ஆயினும் உன்பால் தவறு புரிந்த அரசகுமரனை ஏழு தினங்களுக்குள் அரசன் தண்டிப்பான். இன்றேல்
நான் தண்டிப்பேன் என்று கூறிற்று. அரசகுமாரன் எழு தினங்களுக்குள், தந்தையால் வெட்டி
வீழ்த்தப்பட்டான்.
பார்வை நூல்கள்
1. மணிமேகலை காட்டும் மனித வாழ்வு - சாமி.சிதம்பரனார், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-600017
Comments
Post a Comment