மணிமேகலை – கிளைக்கதைகள் - 3
1.
விசாகையின்
கதை
காவிரிப்பூம்பட்டினத்திலே தருமதத்தன்
என்னும் வணிகன் ஒருவன் வாழ்ந்தான். அவனது மாமன் மகள் விசாகை என்பவள். இருவரும் அழகுள்ளவர்கள்.
அவர்கள் அடிக்கடி சேர்ந்து அன்புடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அது கண்ட ஊரார் அவர்கள்
காந்தர்வ மணம் புரிந்து கொண்டார்கள் என்று கதை கட்டினர். அப்பழியைப் பொறுக்க முடியாத
விசாகை உலக அறவியை அடைந்தாள். ”என் மேல் ஊரார் சுமத்தும் பழியை நீக்கிவாய்” என்று கந்தில்
பாவையிடம் முறையிட்டாள். ‘அத்தெய்வம் விசாகை குற்றமற்றவள்’ என்று ஊரார்க்கு உரைத்தது.
ஊராரும் அவனைப் புகழ்ந்தனர்.
‘கந்திற்பாவை சொல்லாவிட்டால் என்மேல் ஊரார் கொண்ட
ஐயம் ஒழியாது. இப் பிறப்பில் நான் மணம் புரிந்து கொள்ள மாட்டேன். மறுபிறப்பில் எனது
மைத்துனையே மணப்பேன்’ என்று விசாகை தனது தாயிடம் கூறினாள். கன்னிமாடம் புகுந்து தவம்
புரிந்து கொண்டிருந்தாள்.
தருமதத்தனும் தன் மீது உண்டான பழியைப்
போக்கிய கந்திற் பாவையைப் போற்றினான். அந் நகரை விட்டு தென்மதுரையை அடைந்தாள். ”விசாகையைத்
தவிர வேறு மங்கையை மணக்க மாட்டேன்” என்று விரதம் பூண்டான். மதுரையிலே வணிகம் புரிந்து
அறநெறியிலே அளவற்ற பொருள் சேர்த்தான். அரசனால் எட்டி என்னும் பட்டமும் பெற்றுப் புகழுடன்
வாழ்ந்தான்.
தருமதத்தனுக்கு வயது அறுபது முடிந்தது.
அப்போது ஓர் அந்தணன் அவனிடம் வந்தான். ”நீ மனையில்லாமல் செய்யும் தருமத்தால் பயன் இல்லை.
உனது ஊருக்குச் செல்லுக” என்று கூறினான். தருமதத்தனும் மதுரையை விட்டு காவிரிப்பூம்பட்டினத்தை
அடைந்தான்.
தருமதத்தன் வந்திருந்ததை அறிந்த
விசாகை அவனிடம் வந்தாள். ”முன்பு மயக்கிய அழகு இப்பொழுது எங்கே? உனக்கு வயது அறுபது.
நானும் நரை கொண்டேன். மறுபிறப்பில் நாம் இருவரும் மணமக்களாவது உறுதி. இளமையும் செல்வமும்
நிலையற்றவை. புதல்வரால் தேவலோகப் பதவி கிடைக்கும் என்பது பொய். நாம் செய்யும் அறமே
நமக்குத் துணையாகும். ஆதலால் அறம் புரிக” என்றாள். தருமதத்தனும் தன் செல்வங்களை அறநெறியிலே
செலவு செய்து வாழ்ந்தான்.
இந்த விசாகை, தன் பழி நீங்கி, உலக
அறவியிலிருந்து திரும்பி வரும்போது தான் சுகந்தனது மூத்தமகன் இவள் மேல் மோகமுற்றான்.
அக்குற்றத்திற்காகக் கொலையுண்டான்.
2. பரதன் கதை
கலிங்க நாட்டில் உள்ள சிங்கபுரத்து அரசன் வசு என்பவன். கபிலபுரத்து
அரசன் குமரன் என்பவன். இருவரும் பகைவர்கள்.
சங்கமன் என்னும் வணிகன் தன் மனைவியுடன் சிங்கபுரத்திற்குச்
சென்றான். கடைவீதியிலே வியாபாரம் செய்து கொண்டிருந்தான். அதைக் கண்ட பரதன் என்பவன்:
பொறாமை கொண்டான். பரதன் சிங்கபுரத்து வேந்தனிடம் வேலை பார்ப்பவன். அவன் சங்கமனைப் பற்றி
”கபிலபுரத்து அரசனது ஒற்றன்“ என்று கோள் மூட்டி விட்டான். குற்றமற்ற சங்கமனைக் கொலைபுரியும்படி
சதி செய்து விட்டான். சங்கமனும் அரசனால் கொலையுண்டான்.
சங்கமன் கொலையுண்டதால், அவன் மனைவி நீலி என்பவள் அளவற்ற துன்பத்தால்
வருந்தினாள். அவள் ஒரு மலையின் மேற் ஏறி நின்று, ”எனக்கு துயர் இழைத்தோர் மறுபிறப்பில்
இத்துன்பத்தை அடைவார்களாக” என்று சபித்து விட்டு கீழே விழுந்து இறந்தாள்.
சங்கமன் கொலைக்குக் காரணமாயிருந்த பரதனே மறுபிறப்பில் கோவலனாகப்
பிறந்து கொலையுண்டான். அவன் மனைவியே கண்ணகியாய் பிறந்து துன்புற்றாள்.
3.
பழங்கோவலன்
கதை
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் வேந்தன் முற்காலத்தில் வஞ்சிநகரத்தை ஆண்டுவந்தான்.
அவனும் அவன் மனைவியும், ஒரு நாள் சோலையிலே உறைந்தனர். அப்பொழுது புத்த சாரணர்கள் சிலர்
வந்தனர். அவர்கள் இலங்கையில் உள்ள சமனொளி என்னும் மலையில் வலம் செய்து வணங்கிவிட்டு
ஆகாய வழியாக அங்கு வந்தனர். அங்கிருந்த சிலாதலத்தில் அமர்ந்தனர்.
அவர்களைச் சேரலாதன் வணங்கி அமுது செய்வித்தான். அவர்கள் அரசனுக்குப் புத்தத்
தருமத்தை போதித்தனர்.
சிலப்பதிகாரக் கோவலனுக்கு ஒன்பது தலைமுறைக்கு முன்னே அவன் குலத்தில் கோவலன்
என்று ஒருவன் இருந்தான். அவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு நெருங்கிய நண்பன். சாரணர்கள்
புத்த தர்மம் போதிக்கும் போது அவனும் அரசனுடன் இருந்தான். சாரணர்கள் சாற்றிய தர்மங்களை
அவனும் கேட்டான். அவன் தன் பெரும் செல்வத்தை எழு தினங்களுக்குள் இரவலர்களுக்கு ஈந்தான்.
பின்பு தவம் புரிந்தான்.
அக் கோவலன் அக்காலத்தில் வஞ்சிநகரத்தில் புத்த தேவனுக்காக பீடம் ஒன்றைக் கட்டுவித்தான்.
அந்தப் புத்த சைத்தம் மணிமேகலை காலத்திலும் நிலைத்திருந்தது. சிலப்பதிகாரக் கோவலனுடைய
தந்தை மாசாத்துவான் அப்புத்த சைத்தத்தைத் தரிசிப்பதற்காக வஞ்சிநகரம் சென்றான். அதைத்
தரிசித்தான். அந்நகரிலேயே புத்த சங்கத்தில் இருந்தான்.
4.
கடல்
கொண்ட கதை
மணிமேகலை காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தை ஆண்ட அரசன் நெடுமுடிக்கிள்ளி.
இவனுக்கு மாவண்கிள்ளி, கிள்ளிவளவன், வடிவேற்கிள்ளி, வெண்வேற்கிள்ளி என்ற பெயர்களும்
உண்டு. இவன் உதயகுமரன் தந்தை.
நெடுமுடிக்கிள்ளி ஒருநாள் காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையிலே
புன்னை மரச்சோலை ஒன்றிலே இருந்தான். அப்பொழுது அழகு நிறைந்த மங்கை ஒருத்தியைக் கண்டான்.
அவளுடன் ஒரு மாதம் அச்சோலையிலேயே தங்கியிருந்தான். அவள் ஒருநாள் திடீர் என்று அரசனிடம்
சொல்லாமல் மறைந்து விட்டாள்.
அரசன் அவளைத் தேடி அலைந்தான். அப்பொழுது அற்புத சக்தி படைத்த
சாரணன் ஒருவன் அங்கு வந்தான். அவனை அரசன் வணங்கி, ”என் உயிர் போன்ற காதலியை அடிகள்
கண்டதுண்டோ?” என்று கெஞ்சிக் கேட்டான்.
”நாக நாட்டரசன் வளைவணன். அவன் மனைவி வாச மயிலை. அவர்கள் பெற்றெடுத்த
மகள் பீலிவளை. அவள் பிறந்தபோது, ‘இவள் சூரியகுல அரசன் ஒருவனை அணைந்து கருவுற்று வருவாள்’
என்று கணிகள் கூறினர். அவள் தான் உனது காதலியாக இருந்தவள். அவளை இனி நீ காண முடியாது. அவள் வயிற்றில் பிறக்கும் மகன்தான்
வருவான். நீ வருந்தாதே” என்று சாரணன் கூறினான்.
”ஆண்டுதோறும் தவறாமல் இந்திரவிழா நடைபெறவேண்டும். இவ்விழா
நடைபெறாத ஆண்டில் இந் நகரத்தை மணிமேகலா தெய்வத்தின் ஏவலால் கடல் கொள்ளும். இவ்வாறு
இந்திரனுடைய சாபமும் உண்டு. ஆதலால் மறவாமல் ஆண்டுதோறும் இந்திரவிழாச் செய்து வருக”
என்றும் அந்தச் சாரணன் சொல்லிவிட்டுச் சென்றான்.
அரசனை விட்டுச் சென்ற பீலிவளை ஓர் ஆண்மகனைப் பெற்றெடுத்தாள்.
ஒருநாள் அவள் தன் பிள்ளையுடன், மணிபல்லவத் தீவை அடைந்தாள். புத்த பீடிகையை வலம் வந்து
வணங்கினாள். அச் சமயம் காவிரிப்பூம்பட்டினத்துக் கம்பளச் செட்டி என்பவனது கப்பல் அங்கு
வந்தது. பீலிவளை அவனிடம் அணுகி, தன் பிள்ளையை அவனிடம் கொடுத்து, ”அரசன் மகன் இவன்.
அரசனிடம் சேர்த்து விடு” என்று சொல்லிச் சென்றாள்.
கம்பளச் செட்டியின் கப்பல் காவிரிப்பூம்பட்டினத்தை நோக்கி
வரும்போது நடுக்கடலில் உடைந்து போயிற்று. செட்டியும் அரசகுமாரனும் கடலில் ஆழ்ந்தனர்.
கப்பலிலிருந்து தப்பிவந்த சிலர் நெடுங்கிள்ளியை நெருங்கி இச்செய்தியைக் கூறினர். அரசன்
துன்பத்தால் மனங்கலங்கினான். கடற்கரையை அடைந்து மகனைத் தேடி அலைந்து கொண்டிருந்தான்.
ஆதலால் இந்திர விழாச் செய்வதை மறந்தான்.
அரசனுடைய-கலக்கத்தால்- மறதியால்-உரிய காலத்தில் இந்திர விழா
நடைபெறவில்லை. மணிமேகலா தெய்வம் கோபங் கொண்டாள். ”காவரிப்பூம்பட்டினத்தைக் கடல் விழுங்குக”
என்று சபித்தாள். நகரத்தைக் கடல் மூடி விட்டது. அரசன் எங்கோயோ போய்விட்டான். அந் நகரிலிருந்த
அறவண அடிகள் மாதவி, சுதமதி ஆகியோர் தப்பித்து வஞ்சி நகரத்தை அடைந்தனர்.
பார்வை நூல்கள்
1. மணிமேகலை காட்டும் மனித வாழ்வு - சாமி.சிதம்பரனார், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-600017
Comments
Post a Comment