பொதியில்,
அம்பலம்
மன்றம், பொதியில், அம்பலம் என்பவை
ஊர் நடுவில் அமைந்த இடம் என்ற ஒரு கருத்தும், அம்பலமும் பொதியிலும் ஒரு மாளிகையில்
அமைந்திருந்தவை என்ற மற்றொரு கருத்தும் நிலவுகின்றன. ஊர்களில் கூடின கூட்டத்திற்கு
மன்றம், பொதியில், அம்பலம் அவை என்னும் பெயர்கள் வழங்கியிருந்தனவாகப் பண்டைய
தமிழ் இலக்கியங்களில் இருந்து அறிகிறோம். இவை யாவும் ஊர்க்கூட்டத்தில் பெயர்களென கருதலாம்.
”சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பழங் கடம்பும்
மன்றமும்
பொதியிலும் கந்துடை நிலையிலும்”
(திருமுருகாற்றுப்படை-255-256)
எனவரும் திருமுருகாற்றுப்படையில்
மட்டும் மன்றமும், அம்பலமும் வேறுபடுத்திக் கூறப்பட்டுள்ளன. அதன் உரையாசிரியர் பின்வருமாறு
கூறியுள்ளார். மன்றம் என்பது ஊர் நடுவிலுள்ள மக்கள் கூடிய இடம் எனவும், அம்பலம்,
பொதியில் என்னும் இரண்டும் ஒரு சிறு மாளிகையைக் குறிப்பிட்டன என்றும், அதன் நடுவில்
ஒரு பீடம் இருந்ததாகவும் அறிஞர் கருதுகின்றனர். இதையொட்டிப் பல அறிஞர்கள் பலவித கருத்துக்களை
வெளியிட்டுள்ளனர்.
எடுத்துக்காட்டாக கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார்
மன்றம் என்றது ஒரு மாளிகை என்றும், பொதியில் என்றது பொது, இல், இரு என்னும்
சொற்களின் இணைப்பில் ஏற்பட்டதெனலாம். அதாவது பொதுவில் என்பதற்குப் பொதுவான இருப்பிடம்
என்ற பொருள் இருந்தமையை எடுத்துக் காட்டுகின்றார்.
அம்பலம், பொதியில், மன்றம் என்னும்
சொற்களும் பொதுவாக இடத்தைக் குறிப்பினவே ஆகும். பொதியில் எவ்வாறு பொதுவான இடத்தைக்
குறிக்கின்றதோ அதைப் போன்றே அம்பலமும் மன்றமும் பொதுவான இடத்தையே குறிக்கும் சொற்கள்
எனலாம்.
நடனக் கோலத்தில் நிற்கும் சிவபெருமானை வாழ்த்திப்
பாடும் சேக்கிழார், ‘அம்பலத்தாடுவான்’ என்கிறார். பொதுவில் நடம் புரியும் அரசு
என்பதும், மன்றுடையான், மன்றாடி, என்னும் சொற்களும் இறைவன் என்னும் பொதுவான
இடத்தில் நடம் புரியும் நிலையைக் காட்டுவனவாக அமைந்துள்ளன. மேலும், அம்பலம் என்பது
அரங்கு என்னும் சொல்லுக்கு எதிர்மறையான சொல் என்பதும் புலப்படும். ”அறையில் ஆடித்தான்
அம்பலத்தில் ஆடவேண்டும்” என்னும் வழக்கில் உள்ள பழமொழியும் இதை உறுதி செய்கிறது.
ஊர்களில் கூடிய இக்கூட்டத்தின் நிகழ்வுகளைக்
காண்பதற்கு ஊர்மக்கள் அனைவரும் திரண்டு வருவது மரபானதால், இக்கூட்டங்கள் மாளிகைக்கு
உள்ளோ அல்லது நான்கு சுவர்களுக்கு நடுவிலோ கூடியிருக்க வாய்ப்பில்லை. எனவே, இவை ஊருக்குப்
பொதுவான இடத்தில் கூடின என்றும், வழக்குகளுக்குத் தீர்ப்பளித்தல் என்பது மக்கள் அனைவரும்
காணும் வகையில் நடைபெற்றது என்றும் கொள்வதே பொருத்தம் ஆகும்.
Comments
Post a Comment