மணிமேகலை காப்பியத்தில்
நம்பிக்கை, பழக்கவழக்கங்கள்
மணிமேகலை காலத்திலே இந்நாட்டிலே பல தெய்வங்களை மக்கள் வணங்கி வந்தனர். அந்தரி என்னும்
பெயருள்ள துர்க்கை, சம்பாபதி, மதுராபதி, கன்னியாகுமரியில் உள்ள குமரித் தெய்வம், சிந்தாதேவி (சரஸ்வதி), மணிமேகலா தெய்வம், தீவதிலகை, விந்தா கடிகை, இந்திரன், கந்திற்பாவை, சிவபெருமான், திருமால், பலதேவன், பிரமன், முருகன், மன்மதன், மகாப் பிரம்மா, சதுக்கபூதம், அருவப் பிரம்மர்
நால்வகையினர், உருவப் பிரம்மர்
பதினாறு வகையினர் ஆகிய தெய்வங்கள் மக்களால் வணங்கப்பட்டன.
·
மக்களால் வணங்கப்பட்ட
தெய்வங்களுக்குக் கோயில்கள் இருந்தன. உருவச் சிலைகள் இருந்தன. அவைகளுக்குத் தினப் பூசைகளும், ஆண்டு விழாக்களும் நடைபெற்று வந்தன.
ஆண் தெய்வங்களை விடப் பெண் தெய்வங்களே மிகுந்த சக்தி படைத்தவைகளாக
இருந்தன. மக்களும் பெண்
தெய்வங்களையே மிகுதியாக வணங்கிவந்தனர் என்று ஊகிக்க இடம் உண்டு. இவைகளை மணிமேகலையிலிருந்து
அறியலாம்.
·
நகரங்கள், தீவுகள், மலைகள், ஆறுகள், இவற்றைத் தெய்வங்கள்
காத்து வந்தனர். சம்பாபதி, காவிரிப்பூம்
பட்டினத்தைக் காவல் தெய்வம், மதுராபதி, மதுரையின் காவல் தெய்வம், தீவதிலகை, மணிபல்லவத்தின் காவல் தெய்வம், விந்தாடிகை, விந்த மலையின் காவல் தெய்வம், குமரி, குமரியாற்றின் காவல் தெய்வம், காவல் தெய்வங்கள் எல்லாம் பெரும்பாலும் பெண் தெய்வங்களாகவே
இருந்தன.
·
அந்தணர்கள்
வேத வேள்விகளைச் செய்வதால் தான் மழை பெய்கின்றது என்ற நம்பிக்கை இருக்கிறது. மழைவளம் தரூஉம் அழல் ஓம்பாளன் (காதை 5) என்பது மணிமேகலை.
அழல் என்பது வேத வேள்வியைக் குறிக்கும். தமிழகத்தில் வேத வேள்விகள் நடைபெற்று வந்தன.
புத்த மதத்தினர்அவ்வேள்விகளை ஆதரிக்கவில்லை. எதிர்த்தனர். இதனை ஆபுத்திரன் கதையால்
அறியலாம்.
·
ஒரு பெண்ணை,
அவள் கணவனைத் தவிர மற்றொருவன் கண்டு காதலிப்பானாயின் அப்பெண், கற்பிழந்தவள், கற்புள்ள
மகளிர் பிறர் நெஞ்சு புகார். இதுவே தமிழ் மகளிரின் சிறந்த கற்பு என்று நம்பப்பட்டது.
இதனை மருதியின் கதையால் எடுத்துக் காட்டுகிறது மணிமேகலை.
·
மணம் புரிந்து
கொண்டு. இல்லறத்தில் வாழ்ந்து புத்திரனைப் பெறாதவர் புண்ணிய லோகத்தை அடைய மாட்டார்.
இது தமிழகத்து மக்களின் நம்பிக்கை,
”பத்தினி இல்லோர் பலஅறம் செயினும்
புத்தேள் உலகம் புகாஅர்”
(காதை 22)
என்ற அடிகளால் அறியலாம்.
·
தேவர்கள் தம்முடைய
உருவை மறைத்துக் கொள்வார்கள். மக்கள் உருவின் தோன்றி மாநிலத்தில் நடமாடுவர். கரந்து
உருவெய்திய கடவுளாளர் (காதை 1) என்ற தொடரால் இதனை அறியலாம். தேவர்கள் உருவம் ஒளியுடன்
விளங்கும்.
·
செங்கற்களைக்
கொண்டுதான் பெரிய கட்டிடங்களைக் கட்டி வந்தனர். காவிரிப்பூட்டினத்தைக் கட்டிடங்கள்
எல்லாம் செங்கற்களால்தான் கட்டப்பட்டிருந்தன. சுடுமண் ஓங்களிய நெடுமலை மனை (காதை
3) என்பதனால் இதனை அறியலாம்.
·
பெரிய வீடுகளின்
முகப்பிலே பலவிதமான சிற்ப வேலைகள் செய்யப்பட்டிருக்கும். அவைகள் சுண்ணாம்பால் செய்யப்பட்டிருக்கும்
பல வகையான உயிர்களின் உருவங்களை அச் சிற்ங்களிலே காணலாம். கைதேர்ந்த சிற்பிகளால், காண்போர்
கண்களைக் கவருமாறு வீடுகளிலே சிற்ப வேலைகளைச் செய்து வைக்கும் வழக்கம் உண்டு. இதனை
3 வது காதையில் காணலாம்.
·
செல்வம் படைத்தவர்கள்,
பரத்தையரின் நட்பை விரும்பி வாழ்ந்தனர். இவ்வழக்கத்தை அவர்கள் பெருமையாகவே எண்ணினர்.
இழிவாகக் கருதவில்லை. (காதை 4)
·
பணம் படைத்த
வணிகர்கள் – வைசியர்கள் – அரசனால் எட்டி என்னும் பட்டம் பெற்றுப் பெருமையுடன் வாழ்ந்தனர்.
அந்த பட்டம் பெற்றதற்கு அடையாளமாக அவர்களுக்குப் பொன்னால் செய்த மலர் அளிக்கப்படும்
(காதை 4-22)
·
சுடுகாட்டிலே
அவரவர்கள் பிறந்த வருணத்திற்கு ஏற்றபடி, அருந்தவர், அரசர், பத்தினிப் பெண்டிர் இவர்களுக்காகச்
சமாதிகள் எழுப்பப்பட்டன. (காதை 6)
·
காவிரிப்பூம்பட்டினத்துச்
சுடுகாட்டிலே, இறந்து போன பிணங்களைச் சுட்டெரிப்பார்கள். ஆழக் குழித்தோண்டி, அதிலே
போட்டுப் புதைப்பார்கள். பள்ளம் கண்ட இடத்திலே பதுக்கி வைப்பார்கள். தாழியில் வைத்து
மூடிப் புதைப்பார்கள். இத்தகைய வழக்கங்கள் இருந்தன. இதனால் பலதிறப்பட்ட நாகரிகம் உள்ள
மக்கள் காவிரிப்பூம்பட்டினத்திலே இருந்தனர் என்று தெரிகிறது. (காதை 6)
·
தம்முயிரைத்
தாமே பலிக் கொடுக்கும் காபாலிக மதத்தினரும் செத்த பிணத்தைத் தின்னும் மக்களும் தமிழகத்தில்
இருந்தனர். (காதை6)
·
நாகர் தீவிலே
வாழ்ந்த மக்கள் நாகரிகம் அற்றவர்கள்: உடை உடுத்தார்கள்: நரமாமிசம் உண்போர்: மனிதர்களை
அடித்துக் கொன்று தின்று விடுவார்கள். இவர்களை ‘நக்க சாரணர் நாகர்’ என்று குறிக்கிறது
மணிமேகலை. நக்கம் என்றால் நிருவாணம் என்று பொருள். நக்க சாரணர் நாகர் – உடையில்லாமல்
திரியும் நாகர்கள். (காதை 16)
·
ஆண்கள் பரத்தையர்
நட்பை நாடித் திரிவதைப் பெண்கள் விரும்பவில்லை. வெறுத்தனர். ஆயினும் அவர்களால் ஆண்களின்
செய்கையைத் தடுக்க முடியவில்லை. பரத்தையர் மீது காதல் கொண்டு திரிவோர் தம் செல்வத்தையிழந்து
வறுமையால் வாடுவார்கள். இவ்வுண்மையைச் சாதுவன் கதையும், கோவலன் கதையும் எடுத்துக் காட்டுகின்றன.
·
செல்வர் வீட்டுக்
குழந்தைகள் பகல் பொழுதிலே சிறுதேர் இழுத்து விளையாடுவார்கள். அவர்கள் விடையாட்டு அயர்ந்த
களைப்பால், படுக்கையிலே படுத்து நன்றாக உறங்குவார்கள். அப்பொழுது செவிலித்தாயர் பேய்க்கு
பகையான வேப்பிலை, வெண்சிறு கடுகு இவைகளைக் குழந்தைகளின் தலையைச் சுற்றி எறிவார்கள்.
வாசனைப் புகை காட்டுவார்கள் (காதை -7)
·
குழந்தைகளுக்கு
ஐம்படைத் தாலி என்னும் ஆபரணத்தை அணிவிப்பார்கள். ஐம்படைத் தாலி என்பது காத்தல் கடவுளாகிய
திருமாலின் ஐந்து படைகளும் அமைந்தவை. சங்கு, சக்கரம், தண்டு, வாள், வில் இவைகளே திருமாலின்
ஐம்படைகள் (காதை -3-7)
·
வடநாட்டிலே
பாபம் செய்தவர்கள், தங்கள் பாவத்தைக் கழுவிக் கொள்ளத் தென்னாட்டுக் குமரிக்கு வந்து
நீராடுவார்கள்.
·
விபச்சாரத்தால்
பெற்ற குழந்தைகளை எங்கேயாவது எறிந்து விடுவதன் மூலம் தங்கள் விபசாரம் வெளிபடாமல் மறைக்க
முயல்வார்கள்.
·
குழந்தைகள்
பிறந்தால் அதை உறவினர்க்கு அறிவித்துக் கொண்டாடும் வழக்கம் இருந்தது.
·
பசுக்கள் மேய்வதற்காக
அரசாங்கத்தால் தனியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. பால் தரும் பசுக்கள், நன்றாக மேய்ந்து
கொழுத்திருந்தால்தான் நல்ல பால் ஏராளமாகக் கிடைக்கும். பாலும், நல்ல சுவையும் சத்தும்
நிறைந்ததாக இருக்கும். இதற்காகவே அரசாங்கத்தால் மேய்ச்சல் நிலங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
·
மக்களுக்குச்
சிறந்த உணவாக இருப்பது பசும்பால், இதற்காகவே பசுக்கள் புனிதமாகக் கருதப்பட்டன. போற்றி
வளர்க்கப்பட்டன. இத்தகைய பசுக்களைக் கொன்று வேள்வி செய்வது இரக்கமற்ற செயல். மேலே காட்டிய
18,19,20,21,22 ஆகிய செய்திகளைப் பற்றிக் காதை 13-ல் காணலாம்.
·
நாட்டிலே செல்வம்
கொழித்திருக்கும் காலத்தில் சோம்பேறிகள் மிகுந்திருப்பர். தீய நடத்தையுள்ள காம வெறியர்கள்,
பரத்தையரை நாடித் திரிவோர், பிறரை இகழ்ந்து கடுஞ்சொற் பேசுவோர், வேலையில்லாமல் சும்மா
சுற்றிக் கொண்டிருப்போர், இவர்கள் எல்லாம் கவலையின்றி வாழ்வார்கள். இவர்கள் பிறரை இகழ்ந்து
பரிகசித்துப் பேசி மகிழ்வார்கள். சூதாடிக் கூட்டங்களும் பெருகியிருக்கும். வீண் பேச்சுப்
பேசும் வம்பர் கூட்டங்களும் வளர்ந்திருக்கும். (காதை 14)
·
தமிழ்நாட்டினர்,
கப்பலேறிக் கடல் கடந்து, பிற நாடுகளுக்குச் சென்று வணிகம் புரிந்து பொருளீட்டி வாழ்ந்தனர்.
(காதை -14)
·
அரச குலத்திலே
பிறந்தவர்கள் போரிலேதான் மடியவேண்டும். பகையரசர்களை வென்று அவர்கள் நாட்டைத் தமது நாடாக்கிக்
கொண்ட வீரம் பொருந்திய மன்னர்களாயினும், அவர்கள் தமது இல்லத்தல் இயற்கையாக இறந்தால்,
அவர்களுடைய உடம்பை வாளால் பிளந்த பின்பே அடக்கம் செய்வார்கள். சும்மா அப்படியே உடலை
அடக்கம் செய்தால் அவர்களுக்கு வீரசொர்க்கம் கிடைக்காது. வயதேறி மூத்துச் சாவது அரசர்
குடிக்கு ஏற்றதன்று. இத்தகைய நம்பிக்கை குடிகொண்டிருந்தது. (காதை 23)
·
பத்தினிப் பெண்டிர்க்குக்
கோயில் கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது.
அவர்கள் பத்தினிப் பெண்டிரின் உருவச்சிலையை கோயிலில் வைத்து வணங்கி வந்தனர்.(காதை
26)
·
கோயில்களுக்குத்
திருவிழா நடைபெறும் காலங்களில் பரத்தையர் நடனம் ஆடுவார்கள். மதவாதிகளும், புலவர்களும்
மக்களுக்கு அறிவுரைகளைப் போதிப்பார்கள். (காதை 1)
·
தெய்வங்களுக்கு
உயிர்ப் பலியிடுவதை மணிமேகலை ஆதரிக்கவில்லை. மலர் பலியிட்டு வணங்கியதாகவே கூறப்படுகின்றது.
·
மக்கள் மந்திரத்திலே
நம்பிக்கை கொண்டிருந்தனர். நரகம், சுவர்க்கம் உண்டென்று நம்பினர். பாவம் புரிந்தோர்
நரகம் பெறுவர். வினைப்பயன் அனுபவித்து ஆக வேண்டும். மறுபிறப்பு உண்டு.
இது போன்ற பல செய்திகளை மணிமேகலை காப்பியத்தின் வாயிலாக அறியலாம்.
பார்வை நூல்கள்
1. மணிமேகலை காட்டும் மனித வாழ்வு - சாமி.சிதம்பரனார், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-600017.
2. காப்பியப் பார்வை - மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம்,
ராமையா பதிப்பகம், சென்னை-600 014.
Comments
Post a Comment