பழந்தமிழ்
இலக்கியங்களில் மண உறவு முறைகள்
மணவாழ்க்கை, பெரும்பாலும் ஒருவரையொருவர்
விரும்பும் களவு வாழ்க்கையினின்றும் அமைந்திருந்தது. ஒரு தார மணமே (Monogamy) சங்க
காலத்தில் மணமுறை. ஆயின் ஒருவன் ஒரு பெண்ணிற்கு மேற்பட்டும் மணக்கலாம் எனபதாக, ‘மின்முறை
துவை’(தொல்காப்பியம், பொருளதிகாரம், கற்பியல்) யைத் தொல்காப்பியர் எடுத்துக்காட்டுவர். திராவிடப்
பழங்குடிகளிடம், ஆடவன் பலரை மணத்தலும் (Polygamy), ஒருத்தி பலரைக் கணவனாகக் கொள்ளலும்(Polyandry),
இருந்து வந்த பழக்கமாகும்.
திருமணத்திற்கு முன்னரே உறவு கொள்ளும் முறை(Prd-marital Relationship) இருளர்,
தோடர், கோத்தர், குறும்பர், முதுவர், பழியர், ஊராளியர் முதலான திராவிடப் பழங்குடியினரிடம்
காணப்படுகின்றது. மணத்திற்கு முன்னர் களவு வாழ்க்கையில் ‘மெய் தொட்டுப் பயிறல், மெய்யுறு
புணர்ச்சி’ முதலான மெய்ப்பாடுகளை ஈண்டு நினைத்தல் தகும்.
பெற்றோர் பார்த்து முடிக்கும் மணமும் (Arranged Marriage) ஆணின் வீரவேட்ட ஆற்றலைக்
காட்டி முடிக்கும் மணமும்(Marriage by trial), விரும்பிய பெண்ணை மணமுடிக்க இசையாராயின்
அழைத்துக் கொண்டு அழைத்துக் கொண்டு உடன் போதலும்(Marriage by capture and
elopement) பின்னர் அதனையறிந்து பலரறி மணம் நடத்துவித்தலும், ஆண் வீட்டார் பெண் கேட்டலுமாகிய
மணமுறைகள் தென்னகப் பழங்குடிகளிடம் இருந்து வரும் பழக்கங்களாகும்.
தான் விரும்பிய பெண்ணை அடைய முடியாவிட்டால் தன்னுயிரை வதைத்துக் கொண்டு உயிர்விடும்
ஆண்மகன் உண்டு. படகரிடையே இப்பழக்கம் இருந்ததனை எட்கர் தார்ஸ்ட்டன் குறிப்பிடுவர்.
இந்நிகழ்ச்சி சங்க இலக்கியத்தில் காணப்படும் மடலேறுதல், வரைபாய்தல் ஆகிய சிந்தனைகளோடு
எண்ணத்தக்கது.
தாயும், தந்தையும் உடன்பட்டுத் தலைவி விரும்பிய தலைவனை மணமுடிப்பதைப் பற்றி
(குறுந்தொகை 51) சங்க இலக்கியத்தின் வழி அறியலாம். இப்பழக்கம் இன்றும் நீலகிரி வாழ்
பழங்குடி மக்களிடம் உண்டு. மணமாகாததற்கு முன் ஆண், பெண் வீட்டில் தங்கும் வழக்கம் உண்டு.
ஒத்த குலத்தில் மணம் பேசி முடித்தல் மணம் நிகழும். தோடர், இருளர் ஆகியோரிடத்து இம்முறைகளைக்
காணலாம். தோடர் தங்களுடைய பாடல்களில் குறிப்பாகக் காதல் பாடல்களில் குறிஞ்சிப் பூவையும்
காதல் வாழ்க்கையையும் இணைத்துப் பாடுவதைச் சங்க இலக்கியத்தோடு தொடர்புபடுத்தலாம்.
பரிசம் போடுதல் நீலகிரி வாழ் பழங்குடி மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம் (அகநானூற்று -90) சங்க இலக்கியத்தில் இடம்பெறும் பரியம், பாசிழைவிலை (புறம்-343) முதலானவற்றோடு இதனை இணைத்துக் காணலாம்.
பார்வை நூல்
1. தமிழும் பிறதுறைகளும் - பதிப்பாசிரியர் முனைவர் ந.கடிகாசலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். ப.125-126
Comments
Post a Comment