முருகனின்
அறுபடை வீடுகள்
1.
பழனி (ஆண்டிக்
கோலம்)
2.
திருச்செந்தூர்
(போர்க்கோலம்)
3.
திருப்பரங்குன்றம்
(திருமணக் கோலம்)
4. சுவாமி மலை(பொருள் உரை கோலம்)
5.
பழமுதிர்சோலை
(விளையாட்டுக் கோலம்)
6.
திருத்தணிகை
(சினம் தணிந்த கோலம்)
இவை ஆறுபடை
வீடுகள் என அழைக்கப்படுகின்றன.
1.
பழனி: முருகன் ஆண்டிக்
கோலம் பூண்டு, மேற்குத் தொடர்ச்சி மலையில் மேற்குத் திக்கில் நின்று அருள் புரிகிறார். இவ்வுருவினை மிகப் பழங்காலத்தில்
வாழ்ந்த போக முனிவர் என்னும் தமிழ் சித்தர் ஒன்பது விடங்களை இறுக்கி (நவபாஷாணம்) வடித்ததாகக்
கூறப்படுகிறது.
இவர் ஆண்டிக்கோலம் பூண்டு நிற்பதற்கு தமிழரிடையே வழங்கி வரும் கதை: திருக்கயிலையில்
ஒரு நாள் பார்வதி பரமேசுவரன் இருவரும் வீற்றிருந்தனர். அப்போது அங்கு வந்த நாரத முனிவர்
ஒரு மாம்பழத்தை ஈசனிடம் கொடுத்தார். அப்பழத்தை தந்தையிடம் இருந்த பெற விநாயகனும், முருகனும்
போட்டியிட்டனர். அதனால் ஈசன் அவர்கள் இருவருக்கும் ஒரு போட்டி வைத்தார். போட்டியின்
விதிப்படி, யார் இந்த உலகை வெகு விரைவில் சுற்றி விட்டு, முதலாவாதகத் திரும்புகிறாரோ
அவருக்கே ஞாலப்பழம் (மாம்பழம்) உரியதாகும்.
முருகன் நொடியில் மயிலேறி உலகம் சுற்றி வரக் கிளம்பினார். ஆனால் விநாயகனோ அமையப்பன்
ஆன சிவசக்தியே உலகம் என்பதால் சிவனையும் சக்தியையும் சுற்றி வந்து மாம்பழத்தைப் பெற்றுக்
கொண்டார். அதனால் கோபம் கொண்ட முருகன் கயிலை மலையை விட்டுக் கிளம்பி, ஆண்டிக் கோலத்துடன்
பழனிமலையை அடைந்து அங்கேயே நிரந்தரமாக வசிக்கலானார். அவரது நியாயமான சினத்தை ஆற்றுவதற்காக
உலக அன்னையான பார்வதி தேதி, முருகனிடம் ‘பழம் நீ’ (நீயேதான் பழம்) என்று கூறி சமாதானம்
செய்தார். அன்று முதல் அம்மலை பழநி மலை என்று அழைக்கப்படுகிறது.
பழனி மலையின் பெயர் காரணமாக இக்கதை கூறப்பட்டாலும் பழங்காலத்தில் இம்மலை பொதினி
(மேகமலை) என்றே அழைக்கப்பட்டது. மாமரங்கள் நிறைந்து காணப்பட்டதால் மாப்பழனி என்றும்
அழைக்கப்பட்டது. பிரளய காலத்தில் இம்மலையில் தொடர்ந்து நூறு நாட்கள் (அதில் இரவும்
பகலும் விடாமல் 40 நாட்கள்) மழை பெய்ததால் பழனி என்று அழைக்கப்பட்டது.
2.பரங்குன்று: திருப்பரங்குன்றம் மதுரைக்கு அருகில் உள்ள மலைக்குன்றாகும். இக்குன்றில் அமைந்துள்ள குகையில்
வடிக்கப்பட்ட பாறையில் முருகன் தெய்வயானையை மணக்கும் திருமணக் கோலத்தில் உள்ளார். முருகனின்
திருஉருவத்திற்கு மேலே சூரிய சந்திரர்களின் திருஉருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கந்த
புராணத்தில் முசுகுந்த சோழனும், இந்திரனும், (அனுமனும், இராமனும்) பரங்குன்றிற்கு வந்து
(அக்காலத்தில் மதுரை வெறும் கடம்ப வனமாக இருந்தது.) முருகன், தெய்வயானை திருமணத்தை
நடத்தி வைத்ததைக் கூறப்பட்டுள்ளது. தெய்வயானையைத் தன் மகளாகப் பாவித்து. இராமன் முருகனுக்கு
மாமன் நிலையில் நின்று இத்திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் தெய்வயானையின் சீர்வரிசையாக,
ஒரு யானையையும், இராமன் இக்கோயிலுக்குப் பரிசளித்தார். இதனால் முருகன், மாலின் மருமனாகக்
கருதப்படுகிறார். திருப்பரங்குன்றின் முருகன் அருளை வேண்டியே, மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின்
தலைமைப் புலவர் நக்கீரர் திருமுருகாற்றுப்படையை இயற்றினார்.
3. திருச்செந்தூர்: செந்தூர் முருகன் கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. அகத்தியர் அர்ச்சகராகப்
பணிபுரிந்த கோயில். திருச்செந்தூர் முருகன் போர்க்கோலம் பூண்டு அசுரர்களை அழித்த இடமாகும்.
அசுரர் என்பது தேவர் மனிதர்களைப் போல அல்லாமல், இயற்கையின் அழிவு சக்திகளைக் குறிப்பிடுகிறது.
திருச்செந்தூர், கபாடபுரம் அல்லது அலைவாய் (திருச்சீர் அலைவாய்) என்னும் பெயருடன் முற்காலத்தில்
பாண்டியரின் தலைநகராக விளங்கி வந்தது. இயற்கைச் சீற்றமான கடல்கோளால் (கடும்புயலினால்)
பாண்டியர் தலைநகரம் அழிந்தது. அந்த நாளை நினைவு கூறும் வண்ணமாகவே, இக்காலத்திலும் தீபாவளிக்கு
அடுத்த ஏழாம் நாள் சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது.
4.தணிகை மலை: திருத்தணிகைமலை திருவள்ளூர் மாவட்டத்தில் அரக்கோணம் அருகே அமைந்துள்ளது. மலையின்
மீது முருகன், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். தமிழரின் தலையாய தெய்வமான முருகன்,
திருமணப் பேற்றையும், குழந்தைப் பேற்றையும் அளிப்பவர். அதனால் முருகனின் திருத்தலங்களில்,
திருமண விழாக்களும், தலையை மொட்டை அடித்து காது குத்தும் சடங்குகளும் ஆண்டு முழுவதும்
நடந்து கொண்டே இருக்கும்.
இதற்குக் காரணம் சூரபத்மான் கதை – சூரபத்மன்
வீரமகேந்திரபுரத்தை (வீஜயாபுரி) அரசாண்ட கொடிய அசுரன். இவன் அமராவதஜ நகர் மீது படையெடுத்துச்
சென்று, தேவர்களை வென்று அமராவதியைக் கைப்பற்றினான். போரில் தோற்ற இந்திரனும், அமராவதியும்
(இந்திராணி) விசாலம் (விழுப்புரம் அருகில்) நகரிலும், சீர்காழி நகரிலும் ஒளிந்து வாழ்ந்தனர்.
போரில் தோற்ற ஆண்கள், பெண்கள் அனைவரையும் தனக்கு அடிமைகள் ஆக்கி, அவர்கள் தலையை மொட்டை
அடித்தான். தோற்றவர் வீடுகளில் இருந்த முதல் ஆண் குழந்தைகளை மொட்டை அடித்து சூரபத்மன்
முன் நிறுத்தினர். அவர்களில் உடல் ஊனமற்ற குழந்தைகள் சிலரைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு
நாளும், சூரபத்மன், அசுரர்கள் தெய்வத்திற்கு உயிர்ப்பலி (நரபலி) கொடுத்து வந்தான்.
அதனால் தேவர்கள் கதிகலங்கி அலறித் துடித்தனர். மலையாண்டியிடம் சென்று, சூரபத்மன் கொடுமையிலிருந்து
தங்களைக் காக்குமாறு வேண்டினர். முருகன், தேவர்கள் வேண்டுகோளை ஏற்று, சூரபத்மனுடன்
போர் புரிந்து அவனைக் கொன்றான்.
அன்று முதல் மக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகள் இறைவனுக்கு
மட்டுமே அடிமை என்னும் பொருளில், முருகன் தலங்களில் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கின்றனர்.
மேலும் சூரபத்மன், உடல் ஊனமுள்ள குழந்தைகளை நரபலியிடாமல் விட்டதால், மக்கள் தங்கள்
குழந்தைகளின் காதுகளில் சிறு துளைகளையிட்டு, சிறிய ஊனத்தை, செயற்கையாக உருவாக்கினர்.
இப்பழக்கம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து இக்காலத்திலம் வழக்கில் உள்ளது.
5. சுவாமி மலை: சுவாமி மலை என்று அழைக்கப்படும் திருவேரகம் கும்பகோணத்திலிருந்து
6 கி.மீ தொலைவில் அமைந்த முருகன் தலமாகும். முருகன் இங்கு தன் தந்தைக்குப் பிரணவ மந்திரத்தை
உபதேசம் செய்ததால் தகப்பன் சாமி எனப் பெயர் பெற்றார்.
அக்கதை
: பழங்காலத்தில் சிவனியன் (சிவபெருமான்) திருமூர்த்தி மலையில் யோகீஸ்வராக வாழ்ந்து
வந்தார். இவருக்கும் தட்சனின் மகளான தாட்சாயணிக்கும் (சக்தி) பிறந்த மகன் மலையாண்டி
ஆவான். முருகன் சிறுவனாக திருமூர்த்தி மலையில் இருந்தபோது, ஒருநாள் சிவனைக் காண, தேவேந்திரன்,
உபேந்திரன் (திருமால்), வீரமன்(பிரம்மன்) ஆகியோர் வந்தனர். மிகவும் கிழவனான வீரமன்
தட்சனின் தந்தையாவான். சிவனைக் காணச் செல்லும் வழியில் அனைவரும் முருகனைக் கண்டு (மலையாண்டி)
வணங்கிச் சென்றனர். வயதில் முதியவனான வீரமன், சிறுவனான முருகனை சிறுபயல் என்றும், அறியாச்சிறுவன்
என்றும் இகழ்ந்து சென்றான். பெரியவரான பிரம்மனிடம் நீர் பெரியவரனால் ஓம் என்னும் பிரணவத்திற்கு
பொருள் கூறிவிட்டு மேலே செல்லுங்கள் என்று கூறினான். பிரம்மன் ஓம் என்னும் சொல்லின்
பொருள் தெரியாது விழித்தான். அதனால் கோபம் கொண்ட முருகன் பிரம்மனை சிறையில் அடைத்தான்.
நிகழ்ந்ததை அறிந்த சிவன் ஓடோடி வந்து, பிரம்மனை விடுவிக்கும்படி, முருகனிடம் கோரினார்.
மலையாண்டி தந்தையின் கோரிக்கையை ஏற்று வீரமனை விடுதலை செய்தார். பின்னர் சிவனே
முறைப்படி (ஆசிரியர், மாணவன் நிலையில் நின்று) மலையாயாண்டியிடம் பிரணவத்தின் பொருளைக்
கேட்டு அறிந்து அகமகிழ்ந்தார். இக்கதையினை நினைவுக் கூறும் முகமாக இம்மலை சுவாமிமலை
என்று அழைக்கப்படுகிறது. முருகனின் திருஉருவம் இங்கு, சிவனின் திருஉருவை ஒத்துக் காணப்படுகிறது.
6. பழமுதிர்சோலை: சோலை மலை என்று அழைக்கப்படும் பழமுதிர்சோலை, மதுரைக்கு அருகே வடக்குத் திசையில்
அமைந்த முருகன் தலமாகும். இம்மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலையின் மீது
சோலைமலை முருகன் கோயிலும் உள்ளது.
”இழும்
இழும் என இழிதரம் அருவி
பழமுதிர்
சோலை மலை கிழவோனே”
என நக்கீரர்
திருமுருகாற்றுப் படையில் இம்மலை முருகனைத் துதிக்கிறார். முருகன் தலத்திற்கு சற்று
மேலே ராக்காயி கோயில் செல்லும் வழியில் நூபுர கங்கை அமைந்துள்ளது. இதிலிருந்து தூயநீர்
இரவும் பகலும் கொட்டிக் கொண்டே உள்ளது. ‘நூபுரம் சேர் மெல்லடியார்’ என்பர் திருஞான
சம்பந்தர் தன் தேவாரத்தில், இந்நீர் ஊற்றின் ஆதாரம் இதுவரை கண்டறியப்படவில்லை. பழங்காலத்தில்,
நூபுர கங்கையின் நீரே, சிலம்பியாறு ஆக மலை அடிவாரம் வரை ஓடியது. இந்த அருவியையே நக்கீரர்
‘இழிதரும் அருவி’ எனக் குறித்துள்ளார். பண்டைக் காலத்தில் இவ்வாற்றின் கரையிலேயே, முருகன்
கோவிலுக்குச் செல்லும் பாதை அமைந்திருந்தது. பழங்காலத்தில் குறிஞ்சி இன மக்கள் இங்கு
வேலினை மட்டுமே வைத்த வழிபட்டு வந்தனர்.
”சூரர் கிளைமடித்து, வேல் கரமெடுத்து
சோலை
மலையுற்ற பெருமாளே”
என்று அருணகிரிநாதர் இவரைப் பாடிப் பணிகிறார்.
இத்தலம் மதுரைக்குச் செல்லும் வழியில் அமைந்திருந்ததைச் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.
சோலைமலை முருகன், அவ்வையாரோடு தமிழில் விளையாடி அவருக்கு அருள் புரிந்தவர்.
துணை
நூற் பட்டியல்
1. தமிழர் வரலாற்றுக் கதைகள் - ஆதிரைசுகுமாரன், அன்பு இல்லம், சென்னை 600
014. ப-164 -172
Comments
Post a Comment