காப்பியங்களில் நங்கையரின் கற்பின் நிலைகள்
”காதலர் இறப்பிற் கனையெரி பொத்தி
ஊதுலைக்
குருகின் உயிர்த்தகத் தடங்காது
இன்னுயிர்
ஈவர்; ஈயா ராயின்
நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்;
நளியெரி
புகாஅ ராயின் அன்பரொடு
உடனுறை
வாழ்க்கைக்கு நோற்றுடன் படுவர் (மணி.2)
என்று மணிமேகலைப்
பகுதியில் 1. கணவன் இறந்தான் என்றதும் மார்படைப்பால் மனைவி உயிர் விடுதல் உண்டு;
2. தீமூட்டிப் பாய்ந்து உயிர் விடுதல் உண்டு; 3. மறுபிறப்பிலும் அவனை அடையப் பெறுவானாக
என்று கைம்மை நோற்றிருத்தல் உண்டு என்ற மூன்று நிலைகளை அறிகின்றோம். உடன் உயிர்
விடுதலைத் தலையாய கற்பு எனவும், தீப்பாய்தலை இடையாய கற்பு எனவும், நோற்றிருத்தலைக்
கடையாய கற்பு என்றும் கூறுவர்.
கணவன் இறந்தபின் மனைவி வாழ்நிலை குடும்பக்
கடமையைப் பொறுத்தது. கணவன் இறந்த நிலையையும் பொறுத்தது. மக்களைக் காக்கும் கடமை இருக்கையில்,
தாயும் மறைதல் மன்னாயத்தின் பாரமாகி விடும். மக்கள் பெற்றப் பின் தந்தை தாய் உறவாகக்
குடும்பப் பொறுப்பை ஏற்கின்றனர். அவர்களிடைக் காதலுறவு சுருங்கக் கடமையுணர்வு பெருகுகின்றது.
ஆதலின் நோற்று உறையும் கைம்மைப் பெண்டிரைக் கடையாய கற்பினர் என்பது பொருந்தாது. கடமையான
கற்பினர் என்று தெளியவேண்டும்.
சிலப்பதிகாரம்
–கண்ணகி
கோவலன் இறந்ததும் கண்ணகி உடனுயிர் துறக்கவில்லை
என்பது சிந்தனைக்குரியது. கோவலன் சாவு இயல்பான சாவில்லை. அவன் சாவு ‘வீவு’ எனப்படும்.
வீவு என்பதற்கு திடீர் இறப்பு என்பது பொருள். காதலன் தன் வீவும் காதலி நீபட்டதூஉம்’
என்பது சிலப்பதிகாரம். கள்வன் என்று குற்றம்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டான் கோவலன் ஆதலின்
அக்குற்றத்தைத் துடைப்பது கொளப்பட்டாளின் கடமையாகும். கணவனோடு அவளும் விரைந்து உயிர்
விட்டிருப்பாளேல் கள்வனுக்குக் கள்ளி உயிர்விட்டாள் என்று தூற்றுவரேயன்றிக் கற்பி என்று
புகழார். கோவலன் வீவு கேட்டு உடனே கண்ணகி இறக்க எண்ணவில்லை; ‘என் கணவன் மறைவு இயல்பான
மறைவில்லை, இயல்பான மறைவாக இருந்தால் அல்லவா இயல்பான குலமுறைகளைப் பின்பற்றமுடியும்?
”மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப
அன்பனை
இழந்தேன்யான் அவலங்கொண் டழிவலா” (சிலப்.19)
‘நான் அன்பனாகிய
கணவனை இழந்த முறை வேறு. மன்னவன் முறைக்கேட்டால் வந்த நிகழ்வு. ஆதலின் கணவன் போய்விட்டானே
என்ற அவலத்தால் சாம்பி முடியேன். தவறுடையான் மன்னவன்; தவறிலன் என் கணவன் என்று நாட்டும்
வரை வாழ்வது என் கடமை’ என்று தெளிந்தாள் கண்ணகி. இத்தெளிவோடு கோவலன் கொலைப்பட்ட இடத்தைக்
காணச் சென்றாள். கணவன் மார்பைப் பொருந்தத் தழுவினாள். அவன் திருவடியைத் தொழுதாள்.
கண்ணகியின் நினைவு அறாது கிடந்த கோவலன் ஓராற்றால் எழுந்திருந்து, ‘இருந்தைக்க’ என்று
ஒரு சொற் சொல்லிக் கடைசி மூச்சினையும் விட்டான். இச்சொல்லின் பெருங்குறிப்பு என்ன?
உடனுயிர் துறவாதே என்று மெய்ப்பாட்டாற் பொருள்பட
‘இருந்தைக்க’ என்று ஒரு சொற் சொல்லி அமைந்தான். இது கேட்ட பின்னர் மருண்டு சினந்து
எழுந்த கண்ணகி,
”காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்
தீவேந்தன் தனைக்கண்ணடித் திறங்கேட்பல் யான்”
(சிலப்.19)
என்று புறப்பட்டாள்.
கள்வன் என்ற பழியைப் போக்கிய பின்னரே கணவனைக் காண்பது அவள் வரவேற்புக்கு உரியதாகும்
என்பது கண்ணகியின் எண்ணமாகும்.
சிலப்பதிகாரம்
–மாதவி
மாதவி கணிகைக் குலத்தில் பிறந்தவளாயினும் கற்பு நோக்கம் உடையவள். கடற்கரையில்
கோவலன் தன்னைப் பிரிந்தபின் தன் கவலை தோன்ற இரு ஓலைகள் வரைந்து தூது விடுத்தாள். வாழ்நாள்
எல்லாம் துன்புற்றும் உடன் சென்ற கண்ணகியைக் குலப் பிறப்பாட்டி என்று மனம் விட்டுப்
பாராட்டினாள். தான் குற்றம் இல்லாதவள் என்று கோவலன் உணர்ந்து கொண்டாற் போதும் என்ற
அளவுக்குத் தனிவாழ்வு நடத்தினாள். கோவலன் இறந்தது கேட்டு உடன் இறக்கவேண்டும் என்பதுதான்
அவள் கோட்பாடு. ஆனால் தன் மகள் மணிமேகலை நிலை என்னாகும்? சிறு குழந்தையாகிய அவளைக்
கணிகையாக்கத் தன் தாய் சித்திராபதி சமயம் பார்த்துக் கொண்டிருக்கின்றாள் என்பது மாதவிக்குத்
தெரியும். தன் காதலனுக்காக மகளான மணிமேகலையைக்
கண்ணகி குலமாக்கவேண்டும் என்பது மாதவியின் ஆசை. உடனுயிர் துறப்பதா? மணிமேகலைக்காக உயிர்
வாழ்வதா? என்ற அருநிலையில் பின்னதே கோவலனுக்கும் உவப்பாகும் என்று துணிந்தனள்.
”காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப்
போதல்
செய்யா உயிரொடு நின்றே
பொற்கொடி
மூதூர்ப் பொருளுலை யிழந்து
நற்றொடி
நங்காய் நாணுத் துறந்தேன்;
காவலன்
பேரூர்க் கனையெரி யூட்டிய
மாபெரும்
பத்தினி மகள்மணி மேகலை
அருந்தவப்
படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச்
செய்கைத் தீத்தொழிற் படாஅள்” (மணி -2)
என்ற அடிகள்
மாதவி வயந்தமாலைக்குக் கூறிய மறுமொழிகள். அந்த ஆண்டு இந்திர விழாவிற்கு நடனமாட மாதவியும்
வரவில்லை; மக்கள் எல்லாம் மிகவும் எதிர்பார்த்த மணிமேகலையும் வரவில்லை என்று வருந்திய
தாய் சித்திராபதி செய்தி தெரிந்து வரும்படி வயந்த மாலையை மாதவியிடம் விடுக்கின்றாள்.
உடனுயிர் துறந்திருந்தால் இந்த ஊர்ப்பழிக்கு இடமிராது, மணிமேகலை வருவாள் என்று கூட்டம்
எதிர்பார்த்தது பிழை. அவள் கணிகைக் குலத்துப் பிறந்த என் மகள் இல்லை. மதுரைக்குக் கற்புத்
தீ வைத்த கண்ணகி மகள். தீய நெறியிற் சிறிதும் அடிவைக்க மாட்டாள் என்று மாதவி கூறும்
மறுமொழியில் காதலாகிய கோவலனோடு உடன் உயர் துறக்க விரும்பிய அவள் வேட்கையும், மணிமேகலையைக்
கண்ணகி மகளாக்கிக் காக்க அவள் மேற்கொண்ட வாழ்வும் புலப்படுகின்றன. மகளைத் தவத்தியாக்கும்
கடமையுணர்வு மாதவியை உயிர் வாழவைத்தது.
சீவகசிந்தாமணி
– விசயை
சீவகசிந்தாமணியில் அரசன் சச்சந்தன் கட்டியங்காரனோடு
போரிடப் போவதற்கு முன்னர், கருக்கொண்டிருந்த தன் மனைவி விசயையை மயிலூர்தி யேறிப் போகச்
செய்கின்றான். போரில் தான் இறப்பது அவனுக்குத் தெரியும்; விசயை கண்ட கனவுகளின்படி ஆண்குழந்தை
பிறந்து எண்மரை மணந்து அரசாளும் என்பதும் தெரியும். அப்போது பிரிவுக்குக் கலங்கும்.
விசயை,
”நங்கைநீ நடக்கல் வேண்டும்
நன்பொருட்கு; இரங்கல் வேண்டா;
கங்குல்நீ
யன்று கண்ட
கனவெலாம் விளைந்த தென்ன,
கொங்கலர் கோதை மாழ்கிக்
குழைமுகம் புடைத்து வீழ்ந்து
குழைமுகம் புடைத்து வீழ்ந்து
செங்கயற் கண்ணி வெய்ய
திருமகற்கு அவலஞ் செய்தாள் (சிந். 257)
என்று திருத்தக்கதேவர்
எடுத்துக்காட்டுகின்றார். பிரியாது, போரிடும் கணவனோடு உடனிருந்து இறப்பதா? பிரிந்து,
உள்ளிருக்கும் மகனுக்காக வாழ்வதா? என்று இக்கட்டான நிலையில் விசயை என்செய்வது என்று
அறியாது வயிற்றில் அடித்துக் கொண்டாளாம். வயிற்றில் அடித்துக் கொண்டாள் என்று பச்சை
மொழியிற் கூற மனம் வாராமல் காப்பியத்துக்கு நாயகனாய் உள்ளிருக்கும் திருமகனைத் துன்புறுத்தினாள்
என்று காப்பிய அவலம் சுரக்கப் பாடுவர் தேவர்,
”கைம்மாண் கடற்படையுள் காவலனை யாண்டொழியப்
பொய்ம்மா
மயிலூர்ந்து போகிப் புறங்காட்டுள்
விம்மாந்
தியான்வீழ வீழ்ந்தேன் துணையாகி
எம்மானே
தோன்றினாய் என்னை யொளித்தியோ” (சிந்.1801)
சீவகன் இறந்தான்
என்று தவறாத உணர்ந்தபோது ஒப்பாரிக்கும் விசயை பழைய தன் மனப் போராட்டத்தை நினைவு கூர்ந்து
சொல்லும் கருத்துடையது இச்செய்யுள். அரச கணவனை படை நடுவே விட்டுப் பொறிமயில் ஏறிச்
சுடுகாட்டில் இறங்கியதெல்லாம் மகனே நீ துணையாவாய் என்று அல்லவா? இப்போது அரசனும் மயிலும்
மறைந்தாற்போல நீயும் மறைந்தனையோ என்று புலம்புகின்றாள். எனவே கணவனோடு இறப்பை மாற்றிற்று
எனவும் காதலுறவை விடக் கடமையுணர்வு பெரிதாயிற்று என்று தெளிவாகிறது.
கம்பராமாயணம்
– மண்டோதரி
பிறன்மனை நயந்த இராவணன் இராமனது அம்பால்
தன்பெரும் பேறெல்லாம் இழந்து போர்க்களத்தில் வீழ்ந்தான். கணவன் வீழ்ச்சியைக் கேட்டுக்
களம் வந்த மண்டோதரி பல்லாற்றால் புலம்பியபின்,
”என்ற ழைத்தனள் ஏங்கி யெழுந்தவன்
பொன்ற
ழைத்த பொருவரு மார்பினைத்
தன்ற
ழைக்கைக ளாற்றழு வித்தனி
நின்ற
ழைத்துயிர்த் தாளுயிர் நீங்கினாள்” (யுத்த-இராவ)
என்று தானே
உயிர் போயதைச் சுருங்கக் கூறியுள்ளார் கம்பர்.
மண்டோதரிக்கு மேகநாதன் முதலிய மக்கள் முன்னரே மடிந்து போயினர். இராவணக் கணவனும் மடிவு
எய்தியபின், அவளுக்கு என்ன கடமை உண்டு? கணவனை நினைந்து கடைசி மூச்சினை விட்டாள். ‘கண்டாள்
அவள் தன்னைக் காணாக் கடுந்துயரம்’ என்று இளங்கோ அவலவுணர்வு சுட்டியதுபோல, மண்டோதரி
தனி நின்று அழைத்தாள்; இராவணனால் அவள் அழைக்கப் பெறவில்லை; அதனால் உயிர் நீங்கினாள்
என்று கம்பரும் ஒருபால் நிலையைப் புலப்படுத்துகின்றார்.
வாலி இறந்தபின் தாரை இறக்கவில்லை. தயரதன் இறந்தபின் வரைந்த தேவியர் மூவர் இருந்தும்
யாரும் இறக்கவில்லை. மகன் அங்கதனையும் சுக்கீரிவனுக்குத் துணை நின்று நாட்டின் அரசியலையும்
ஒழுங்கு செய்யும் கடமை தாரைக்கு இருந்தது போலும். இராமனுக்காகக் கோசலையும், இலக்கவனுக்காகச்
சுமித்திரையும், பரதனுக்காகக் கைகேசியும் உயிர் வாழ்ந்தனர்.
Comments
Post a Comment