தமிழர்களின்
மாற்றுமுறை மருத்துவம்
மாற்றுமுறை மருத்துவம் பலவிதமான மூலங்களைப் பெற்றுள்ளது. நாட்டுப்புற மரபு,
மரபான பழக்கங்கள், தத்துவக் கோட்பாடுகள், உடற்பயிற்சி முறைகள், யோகாசனங்கள் என அவற்றைக்
குறிப்பிடலாம். மாற்றுமுறை மருத்துவ சிகிச்சை அளிப்பவர்களில் சிலர் கற்றறிந்தவர்களாகவும்,
திறமையாளர்களாகவும் மற்றும் சிலர் அரைகுறையாளர்களாகவும் உள்ளனர். இவர்கள் முறையான இசைவு
பெற்றவர்களாகவோ, பதிவு பெற்றவர்களாகவோ இல்லாமல் பாமர நோயாளிகளை அணுகி அவலக்கு ஆளாகின்றனர்.
மாற்றுமுறை மருத்துவத்தை நான்கு வகையாகப்
பிரிக்கலாம். நம்பிக்கை அடிப்படையில் குணப்படுத்தல், மனோதத்துவவாதிகள், மந்திரவாதிகள்,
மற்றும் மனவியல் வல்லுநர்கள் ஆகியோர் இப்பிரிவில் அடங்குவர். உணவுமுறையின் மூலமாகச்
சிகிச்சை அளிப்பவர்கள் மூலிகைகளைக் கொண்டும் ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் போன்றவைகளைக்
கடைப்பிடிப்பவர்கள் இன்னொரு பிரிவினர். மூன்றாவது பிரிவில் ஓமியோபதி போன்ற மருத்துவ
முறைகளைக் கையாள்வோர், நான்காவது பகுதியில், சீனமக்களிடையே செல்வாக்குப் பெற்ற அக்குபஞ்சர்
(அலகுமுறை மருத்துவம்) முறையையும், தேகத்தைப் பிடித்துவிட்டுத் தேய்த்தும் அளிக்கப்படும்
நீவுகைச் சிகிச்சையும், காந்தசக்தி, மின்சாரம் ஆகியவற்றைக் கொண்டு அளிக்கப்படும் மின்னியற்
சிகிச்சையும் அடங்கும். இந்தப் பிரிவுகளில் அடங்காத முறைகளும் பழக்கத்தில் உள்ளன.
உலகத்தின் மற்ற பகுதிகளைப் போலவே நம்நாட்டிலும்
மாற்று மருத்துவ முறை பரவலாகக் கைக்கொள்ளப்படுகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு,
நெதர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மக்கள் இத்தகைய மாற்று முறைகளைப் பின்பற்றுகின்றன.
நம் நாட்டில் சிற்றூர்ப் பகுதிகளில் இம்முறைகள் பரவியிருப்பதற்கு முறையான கல்வியும்
பயிற்சியும் பெற்ற மருத்துவர்கள் அப்பகுதியில் கிடைக்காமையும் ஒரு காரணமாகும். நம்பிக்கை
இழக்கச் செய்யும் புற்றுநோய் போன்ற நோய்கள், இம்மாதிரி முறைகளுக்கு வழிகோலுகின்றன.
முறையான மருத்துவப் பராமரிப்புக்குத் தேவைப்படும் கவனிப்பும், பணசெலவும், நெடுநேரம்
மருத்துவமனைகளில் காத்திருக்க வேண்டிய நிலையும் மாற்று மருத்துவ முறைகளைத் தேடிச் செல்ல
நோயாளிகளைத் தூண்டுகிறது.
இம்முறை தீங்கற்றது. மலிவானது என்பதும் சுட்டத்தக்கது.
சாகும் தறுவாயில் இருக்கும் நோயாளிக்கு நம்பிக்கையூட்டி தாம் தேறி வருகிறோம் என்ற உணர்ச்சியை
இம்முறைகள் ஏற்படுத்துகின்றன. இவ்வாறு அமையும்
ஊக்கம் ஓரளவுக்கு வரவேற்கத்தக்கது.
இம்முறைகளில் குறைபாடுகளோ தொல்லைகளோ இல்லாமல்
இல்லை. இம்முறைகள் சில நேரங்களில் இடராகவும் அமைகிறது. உரிய நேரத்தில் முறையான சிகிச்சை
பெறுவதை இம்முறை தாமதப்படுத்தவும் செய்கிறது. உலோக மருந்துகள், பஸ்பங்கள் போன்றவை உடலுக்குத்
தீங்கிழைக்கின்றன. இம்மருத்துவம் சிகிச்சைமுறை குறித்து மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுப்
பயன்படுத்த முயற்சிக்கலாம்.
பார்வை நூல்
1. தமிழும் பிறதுறைகளும் - பதிப்பாசிரியர் முனைவர் ந.கடிகாசலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். ப.103-104
Comments
Post a Comment