மேற்கணக்கு கீழ்க்கணக்கு- விளக்கம்
சங்க காலத்தில் அறஇயலை இருவகையாக வகைப்படுத்திக் கூறியிருக்கின்றனர். அவைகளை
மேற்கணக்கு, கீழ்க்கணக்கு எனக் கூறலாம்.
மேற்கணக்கு நூல்கள் பதினெட்டு, கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு. மேற்கணக்கு தொகையும் பாட்டும், தொகை எட்டு பாட்டு பத்து, மேற்கணக்கு என்று அமைந்த காரணங்களைக் காணலாம்.
மேற்கணக்கு - விளக்கம்
மேற்கணக்கு நூல்கள் முன்னோர் வாழ்ந்து காட்டிய வரையறை கொள்கையை மையமாகக் கொண்ட
விளக்கங்கள். இன்று நீதி மன்றத்தில் முன்னொரு காலத்தில் நடைபெற்ற வழக்கு, தீர்ப்பு
ஆகியவை நிகழ்வுகளாகவே அமைக்கப் பெற்றிருப்பது போல இதுவும் வாழ்வியல் நிகழ்வுத் தொகுப்பு
நூல்கள். அவை இரண்டு வகை, ஒருவன் தன்னளவில் வாழ்ந்த நிலை; மற்றவர்களின் நன்மைக்காக
அவன் சமூகத்துக்கு ஆற்றிய தொண்டுகள். தன்னளவில் செய்த வாழ்வியல் அறங்கள் தொகையாயின.
பரந்து பட்டுச் சென்று புகழ்விளைத்ததாதலின் பாட்டு ஆயின. எனவே சங்க காலத்தில் தன்னளவில்
அறம் மேற்கொள்ளல் என்பதைவிட, சமூக நலன்கருதி அறம் மேற்கொள்ளுதல் அதிகம் என்பதனாலேயே
தொகை எட்டாகவும் பாட்டு பத்தாகவும் நின்றன.
கீழ்க்கணக்கு - விளக்கம்
கீழ்க்கணக்கு என்பது முன்னோர் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் நிகழ்வுகளிலிருந்து
அறக்கொள்கைகள் வடித்தெடுக்கப்படுகின்றன. கீழ்க்கணக்கு என்பது அறக்கொள்கை,
”தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்று கின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதுங் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே”
என்பது அப்பரடிகள்
வாக்கு. கீழ்க்கணக்கு என்பது செயலாற்றும் ஒருவனின் மனநிலையை மனத்தில் நிற்கும் அறக்
கொள்கையை அமைத்து அதற்கேற்பப் பயன் வழங்குதல். எனவே கீழ்க்கணக்கு என்பது அறஇயல் கொள்கை
அல்லது ஒழுக்கவியற் கூறுகள் எனலாம். மேற்கணக்கிலிருந்து கீழ்க்கணக்கு அமைகிறது.
பார்வை நூல்கள்
1.
தமிழும் பிறதுறைகளும்
ப.198-199 – பதிப்பாசிரியர் முனைவர் ந.கடிகாசலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை -600 113.
Comments
Post a Comment