தொல்காப்பியம்
காட்டும் எண்வகை மணங்கள்
தொல்காப்பியர், களவின் வழிவந்த மணத்தைப்
பற்றிக் கூறுங்காலத்து எண்வகை மணங்களைக் குறிப்பிட்டுச் செல்வது அறிதற்குரியது.
”இன்பமும்
பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டங் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே?”
எனவரும் நூற்பாவால் இதனை உணரலாம்.
இன்பமும் பொருளும் அறனும் என்று சொல்லப்பட்ட
அன்பொடு புணர்ந்த ஐந்திணையிடத்து நிகழும் காமக்கூட்டத்தினை ஆராயுங்காலத்து, மறை சுட்டிய
வழக்காகக் கூறப்பெறும் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்திருவம், அசுரம்,
இராக்கதம், பைசாசம் என்ற எண்வகை மணத்தின் கண்ணதாகிய காந்திருவத்தின் பாற்படும்.
பிரமம்: கன்னியை அணிகலன் அணிந்து
பிரமசாரியாய் இருப்பான் ஒருவனுக்குத் தானமாகக் கொடுப்பது.
பிரசாபத்தியம்: மகட்கோடற்குரிய
கோத்திரத்தார் மகள் வேண்டிய வழி இருமுது குரவரும் இயைந்து கொடுப்பது.
ஆரிடம்: ஓன்றானும், இரண்டானும் ஆவும்
ஆனேறும் வாங்கிக் கொடுத்துப் பெண்ணைப் பெறுதல்.
தெய்வம்: வேள்விக்கு ஆசிரியராய் நின்றார்
பலருள்ளும் ஒருவருக்கு வேள்வித் தீ முன்னர்ப் பெண்ணைக் கொடுப்பது.
காந்தருவம்: ஒத்த இருவர் தாமே கூடும் கூட்டம்.
அகரம்: வில்லேற்றி வழியோ, திரிபன்றியை
வீழ்த்திய நிலையிலோ பெண்ணைப் பெறுதல்.
இராக்கதம்: தலைமகளைத் தன்னினும் தமரினும் பெறாது வலிதிற் கொல்வது.
பைசாசம்: களித்தார் மாட்டுந் துயின்றார் மாட்டுங் கூடுதல்.
எண்வகை மணங்களைத் தொல்காப்பியர் குறிப்பிட்டாலும் முல்லை, குறிஞ்சி, மருதம்,
நெய்தல், பாலை என்ற ஐந்நிலத்தின் வழியாக பிறந்த ஒழுக்கத்தினை அன்பின் ஐந்திணையாக்க்
கொண்டு, அவ்வொழுக்கத்தினைக் களவு கற்பு என்னும் இருவகைக் கைக்கோளில் அவர் அடக்கிப்
போந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment