கன்னன்
கன்னன் மகன் விடசேனனை அருச்சனன் கொன்று வீழ்த்தினான். விடசேனன் வீழ்ச்சியினைக்
கண்ட அவன் படையினர் போரில் புறங்கொடுத்து ஓடிவந்து விடசேனனின் தந்தையான கன்னனது தேர்க்காலைச்
சூழ்ந்து நின்று கொள்கின்றனர். சிலர் இவ்விழப்பினைத் தரியாதவர் போன்று, மேலும் போர்புரிந்து
இறந்துபடுகின்றனர். விடசேனன் இறப்பினைக் கண்டு அஞ்சுதலும் அவன் இறப்பினால் கன்னனுக்கு
என்ன ஏற்படுமோ என்ற இரக்கவுணர்வுமே அவர்கள் தேர்க்காலைச் சூழ்வதற்குக் காரணமாயிற்றெனலாம்.
போரில் வெற்றி – தோல்விகளும் உயிரழப்பு போன்றவையும் ஏற்படுவதனை அறிந்திருக்கும்
கன்னனுக்குத் தம் மகன் இறப்பினைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. தன் மகன் இறந்தான் என்ற
செய்தியினைக் கேட்டதும், ”வேந்த னுங்கருத் தழிந்துதன் தேர்மிசை வீழ்ந்தனன்” என்று அவன்
நிலையை வில்லிப்புத்தூரார் குறிப்பிடுகின்றார். உரமும் வல்லமையும் வாய்ந்த கன்னன் தன்
மகன் இழப்புக்கு வருந்தி மயக்கமுறகிறான். சல்லியன் துரியோதனன் ஆகியோர் தேறுதல் கூற
அவன் ஆறுதல் பெறுகிறான்.
கன்னனது மகனிழந்தத் துயரம் அவனைக் கொன்ற அருச்சுனன் மீது சினமாகத் திரும்புகின்றது.
இச்சினமே அவன் மனத்தைக் கலக்கமுறாமல் செய்கிறது. இது பின்னரும் அவன் கூற்றால் தெளிவாகின்றது.
”மலை கலங்கினு மாதிரங் கலங்கினு மாதிரங்களில் விண்ணோர்
நிலை கலங்கினு நெடுங்கடல் கலங்கினு
நிலங்கலங்கினுஞ் சேடன்
றலை கலங்கினும் பேரவை மூன்றினுந் தளர்விலா
தவர் கற்ற
கலை கலங்கினும் போர்முகத்தென் மனங்கலங்குமோ
கலங்காதே”
இது கன்னன்
போர் வீரத்தையும் மகனிழப்பினும் கலங்காத மனத் திண்மையையும் காட்டுகின்றது. இந்நெஞ்சுரத்துடன்,
தன் மகனைக் கொன்ற அருச்சுனனது தலையைக் கொய்வேன். என்று சல்லியன், துரியோதனன், அசுவத்தாமன்
ஆகியோர் முன் சபதம் செய்கின்றான்.
போரில் இழப்பென்பது அறிந்தெதிர் கொள்வதாயினும்
அவ்விழப்பைக் கண்டு முதலில் பெருவீரனான கன்னன் உள்ளம் திடுக்கிட்டு மயக்கமடைகின்றது.
பின்பு நண்பர்கள் தேற்றத் தேறித் தன் மகனைக் கொல்லக் காரணமான அருச்சுனன் தலையைக் கொய்வதாகக்
கூறுகின்றான். இது மகனிழப்புத் துன்பத்தால் விளைந்தச் சினமாகும்.
பார்வை நூல்
1.
தமிழ்க் காப்பியங்களில்
அவலச்சுவை – முனைவர் அ.கோபிநாத், இந்திரா பதிப்பகம், திருச்சி -620 005.
Comments
Post a Comment