பரத்தையர்
பரத்தையர் சங்க இலக்கியங்களில் அதிக அளவுக்குச் சிறப்பிடம் பெற்றிருக்கின்றனர்.
‘கணிகையர்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். தொல்காப்பியம், ஆடவர்களுக்குரிய பிரிவு வகைகளில் ‘பரத்தையிற் பிரிவைக்’ குறிப்பிடுவதலிருந்தும்,
வள்ளுவர் ‘வரைவின் மகளிர்’ என்று தனி அதிகாரமே ஒதுக்கிப் பரத்தமை ஒழுக்கத்தைக் கண்டிப்பதிலிருந்தும்,
அவர்கள் சமூகத்தில் பெற்றிருந்த நிலைமையை உணரமுடிகின்றது. பரத்தைமைத் தொழிலால் வாழ்க்கை
நடத்தியவர்கள் எந்தவொரு தனிப்புரவலனிடமும் தனியன்பு கொண்டவரல்லர். இவர்கள் இரவுக்கோர்
வரவு பார்க்கும் பள்ளியறைப் பைங்கிளிகள்.
இவர்களைச் ‘சேரிப்பரத்தையர்’ அல்லது ‘காமக்கணிகையர்’
என்றனர். இன்னெரு வகையினர், யாரேனும் ஒரு தனிப்புரவலரோடு மிகுந்த அன்புகொண்டு அவர்களோடு
காதல் வாழ்க்கை நடத்தி வந்தனர். இவர்கள் யாரையும் மணம்செய்துகொண்டு வாழ முற்படவில்லை.
இவர்களைக் ‘காதற்பரத்தையர்’ அல்லது ‘காமக்கிழத்தியர்’ என்பர். இவர்கள் மணமாகாத வாழ்க்கைத்
துணைவியர்களாகவே கருதப்பெற்றனர்.
அரசமாளிகையில் இக்கணிகையர்கள் பெரும்பாலோர்
காணப்பட்டனர். அவர்கள் அரசருடைய மெய்க்காப்பாளராகவும் பணியாட்களாகவும் பணியாற்றினர்.
அவர்கள் அரசனோடு போர்க் களத்திற்கும் சென்றனர். இவர்கள் வனப்புடைய வனிதையர். இடையில்
சிறியதொரு வாளினைத் தமது கச்சையில் செருகியிருந்தனர். அரசனுடைய அக வசதிகளை மேற்பார்த்தனர்.
பரத்தையர்கள் நடனம், இசை, நாடகம் முதலியவற்றில்
வல்லமையுடையவராயிருந்தனர். இசையும் நாட்டியமும் இன்று வரை இவர்கள் பயிலும் மரபாக இருந்துவருகின்றது.
மேலும் இருவகைக் கூத்து (வேத்தியல் கூத்து, பொதுவியல் கூத்து), பந்தெறிந்து ஆடுதல்,
உணவு வகை பற்றிய கலையாக சமுத்திரம், காதற்கலையின் அனைத்துக் கூறுகள், திறமாகவும் நயமாகவும்
பேசும் கலை, பிறர் காணாது திரியும் கலை, பிறர் எண்ணங்களை உய்த்துணரும் வன்மை, கையெழுத்துக்
கலை, பூமாலை கட்டும் கலை, வேடமணிதல், உடை தயாரித்தல், முத்துக்கள் முதலிய அழகிய மணிகளைக்
கோத்தல், சோதிடம் முதலிய கலைகளைக் கற்றுத் தேர்ந்தனர்.
சோழமன்னர்கள் இவர்களை மிகவும் ஆதரித்து வந்தனர்.
ஒவ்வோராண்டிலும் மிகச்சிறந்த நாட்டியக்காரிகளைத் தெரிந்தெடுத்துப் பரிசும் பட்டமும்
வழங்கிச் சிறப்பித்தனர். பரத்தையர்களில் மிகச் சாதாரணமானவர்கள் இழிந்த, மோசடியான இழிதொழிலை
நடத்தினர். அவர்கள் தம் வீட்டுவாசலிலோ கடைத் தெரு ஓரங்களிலோ நின்று கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்குச்
சாடை காண்பித்து, கைத் தட்டிக் கூப்பிட்டுப் பிழைத்து வந்தனர்.
இவர்கள் நகரங்களில் ‘பரத்தையர் சேரிகள்’
என்னும் தனிப் பாக்கங்களில் வசித்து வந்தனர். மதுரையில் இரண்டு பெருந்தெருக்களில் இவர்களே
வாழ்ந்தனர் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. ஏனாதிப்பட்டம் பெற்றவன் ஒருவன்
ஏனாதிச்சேரி என்று ஒரு குடியிருப்பை இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருத்தான். ஆட்சியாளர்களின்
விருப்பக் கணிகையர் பலவித சிறப்புகளைப் பெற்றனர். தங்கத்தாலான வெற்றிலைப் பாக்குப்
பெட்டிகளை வைத்துக்கொள்ளுதல் முதலியவை இவர்கள் பெற்ற சிறப்புக்களாகும். இக்குலத்தாரைத்
தமது தொழிலை மறந்த அல்லது புறக்கணித்தக் கணிகையரைச் சட்டப்படித் தண்டித்தனர்.
Comments
Post a Comment