கட்டுக் கேட்டல்
களவொழுக்கத்தில்
ஈடுபட்ட தலைவியின் காமநோயை அறியாத தாயர், அவளது வேறுபாட்டை அறிதற்பொருட்டு கட்டுவிச்சியை அழைத்துக்
கட்டுக்குறி கேட்பர். ஆண்டு, அக்கட்டுவச்சி ஒரு முற்றத்தில் நெல்லையிட்டு அதனை எண்ணிப்
பார்த்து, அதனாற்போந்த
சில நிமித்தங்களை அறிந்து ‘இவள் முருகனால் அணங்கப்பட்டாள்’ எனக் கூறுவது வழக்கு. இவ்வழக்கினை, நற்றிணை உரையாசிரியர், ‘முறத்திலே பிடி நெல்லையிட்டு எதிரே தலைமகளை நிறுத்தித் தெய்வத்திற்குப்
பிரப்பிட்டு வழிபாடு செய்து அந்நெல்லை நந்நான்கு எண்ணி எஞ்சியவை ஒன்றிரண்டு மூன்றளவும்
முருகணங்கெனவும், நான்காயின் பிறிதொரு நோயெனவுங் கூறப்படும் எனபார். சிறு முறத்தில்
வட்டமாகப் பரப்பிய நெல்லில் பார்க்கும் ஒருவகைக் குறி என்பார் பொ.வே.சோமசுந்தரனார். கட்டுக்குறி
கேட்கும் முறையினை,
”நன்னுதல் பரந்த பசலை கண்டு
செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்
கட்டிற் கேட்கும் .....”
என நற்றிணை குறிப்பிடும். பெருங்கதையில்.
”கட்டறி மகடூஉக் கடிமுறத் திட்ட
வட்ட நெல்லும் .......”
எனக் குறிக்கப்பெறுவது கொண்டு
இதனைத் தெளியலாம். மேலும், கட்டுக்கேட்டலுக்குரிய பொருளாக நெல்லுடன் பிரப்பரசியும் பயன்படுத்தப்
பெறுவதை அகநானூற்றால் அறியலாம்.
கட்டுக்குறி
சொல்லும் கட்டவிச்சியை, ‘செம்முது பெண்டிர்” என நற்றிணையும், ‘அகவன் மகளிர்’ எனக் குறுந்தொகையும், ”முதுவாய்ப் பெண்டிர்” என அகநானூறும், ‘கட்டறி மகடூஉ’ எனப் பெருங்கதையும் குறிப்படும். குறி சொல்லும் அக்கட்டுவிச்சியர் கையில் ஒரு சிறு கோலும்
கொண்டிருப்பர். சங்ககாலத்தில், குறிசொல்லும்
அம்மகளிர் பிற்காலத்தில் குறத்தியர் என்ற பெயராலும் அழைக்கப்பட்டனர். இக்குறிபார்க்கும்
முறையே பிற்காலத்தில் குறவஞ்சி இலக்கியமாக வளர்ச்சிப் பெற்றது என்பர்.
பார்வை நூல்
1. ஐம்பெருங்காப்பியங்களில் சடங்குகளும் நம்பிக்கைகளும் - முனைவர் இரா.இரகோத்தமன்,குகன் பதிப்பகம், திருவாரூர் மாவட்டம்.
Comments
Post a Comment