கழங்கு
பார்த்தல்
கழற்சிக் காய்களை வைத்துக் கொண்டு வேலன்
குறியறிந்து உணர்த்துவது கழங்கு பார்த்தல் ஆகும். இக்கழங்கு பார்த்தல் இரு நிலைகளில்
நிகழ்த்தப் பெற்றமையைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. களவுக் காலத்தில் தலைமகளின்
வேறுபாட்டிற்குரிய காரணத்தை ஆராய்ந்தறிதற்பொருட்டு நிகழ்த்தப் பெறுவதொன்றாகும். மற்றொன்று
தலைமகளைத் தலைமகன் உடன்போக்கில் அழைத்துச் சென்றகாலை, தலைவன் தலைவியோடு தம் இல்லம்
அடைவானோ மாட்டானோ என கவலும் தாயர், விளைவது உரைக்கும் வேலனை அழைத்துக் கழங்கு பார்த்ததனை
அகநானூறு குறிப்பிடும்.
நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் அ.நாராயணசாமி
ஐயர் இக்கழங்குக் குறிபற்றி, ”கழங்கு – கழற்சிவித்துப் பலவற்றை முருகன் முன் போட்டு
வேலன் தன் தலையில் ஆடை சூடிக் கையிற் பல தலைகளிற் சிறுபைகளைக் கட்டிய கோலொன்றேந்தி
அக்கோலாற் கழங்கு வித்துக்களை வாரியெழுப்புழிக் குறிப்புக் காணுகின்ற ஒருவகைக் குறி”
எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இக்கழங்கு பார்த்தலைப் பற்றி, ”தன் தலையில் ஆடைகட்டிய
சிறிய பைகள் நாலவிட்ட பல கிளைகளையுடைய வளைந்த கொம்பொன்றினால் கழற்காய்களை முருகன்முன்
வைத்து அள்ளியெடுக்குங்கால் கண்டு கூறும் ஒரு வகைக் குறி” என ஔவை க. துரைசாமிப்பிள்ளை
குறிப்பிடுவார். கழங்கு பார்க்கும் வேலனின் தோற்றப் பொலிவையும், இக்குறி பார்க்கும்
முறையையும்,
”அறுவை தோயும் ஒருபெருங் குடுமிச்
சிறுபை
நாற்றிய பஃறலைக் கொடுங்கோல்
ஆகுவ
தறியும் முதுவாய் வேல
கூறுக மாதோநின் கழங்கின் திட்பம்”
எனவரும் அகநானூற்றின்
வழி தெளியலாம்.
சிலப்பதிகாரத்தில் வெறியாடல் நிகழ்ச்சி பேசப்
பெற்றுள்ளமையாலும், வெறியாட்டிற்கு முன்னர் நிகழ்த்தப் பெறுவனவாகிய கட்டுக்கேட்டலும்,
கழங்கு பார்த்தலும் ஒன்றுக்கொன்று வெறியாடலும் நெருங்கிய தொடர்புடையன.
பார்வை நூல்
1. ஐம்பெருங்காப்பியங்களில் சடங்குகளும் நம்பிக்கைகளும் - முனைவர் இரா.இரகோத்தமன்,குகன் பதிப்பகம், திருவாரூர் மாவட்டம்.
Comments
Post a Comment