Skip to main content

சங்க இலக்கியத்தில் – கோழி

 

சங்க இலக்கியத்தில் – கோழி

 

      சங்க இலக்கியத்தில் கோழி என்னும் சொல், ஊர்ப் பெயராகவும், புலவர் பெயராகவும், சோழ மன்னர்களின் பெயராகவும், முருகக் கடவுள் பெயராகவும், பறவையைக் குறிக்கும் பெயராகவும் வந்துள்ளது. கோழியும் அன்னமும் ஒருசார் விலங்காகும். ஆண் பறவையைச் சேவல் என்று சுட்டப்படுகிறது. கோழியின் வேறு பெயர்கள் நிகண்டுகளில் பதிவாகியுள்ளன. சங்க இலக்கியத்தில் கோழி என்னும் சொல் ஆண், பெண் இரு பாலையும் குறித்தே வந்துள்ளது. ஆண் பறவையைப் பிரித்துக் காட்டக் குடுமிக்கோழி, கூகைக் கோழி என அழைத்துள்ளனர். தலைப்பகுதியில் சிவந்த கொண்டை இதன் பாலை வேறுபடுத்திக் காட்டுவதால் சேவல் எனச் சொல்லாக்கம் பெற்றுள்ளதைச் சங்கப் பாடல்களில் வரும் சான்றுகள் சுட்டுகின்றன.

தமிழ்ச் சமூகத்தில் கோழி

     சங்க இலக்கியத்தில் உறையூர், கோழி என்று சுட்டப்பட்டுள்ளது. சோழர்களையும், சோழ நாட்டையும் கோழி என்னும் பெயரால் அழைத்ததற்கான குறிப்பும் சங்கப் பாடல்களில் உள்ளன. கோப்பெருஞ்சோழன் பாணர் சுற்றத்தினது பசிக்குப் பகையாய்க் கோழியான் என்று பிசிராந்தையார் புறப்பாடல் வழி அறியலாம்.

          இரவில் வேட்டையாடும் பறவையைத் தவிர பிற எல்லா இனங்களும் விடியற் காலையில் ஓசை எழுப்பது இயல்பு. அதிலும் குறிப்பாகக் கோழி அல்லது சேவல் வீட்டில் வளர்க்கப்பட்டதால் அது காலையில் எழுப்பும் ஒலி விடியலை மக்களுக்கு உணர்த்துவது என்னும் பொது நம்பிக்கையாக உலகம் முழுவதும் நிலவுகின்றது.

          ”பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த

         நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப

         ஏம இன்துயில் எழுதல் அல்லதை

         வாழிய வஞ்சியும் கோழியும் போல

         கோழியின் எழாதெம் பேரூர் துயிலே” (பரி.தி.7:6-11)

வேதமாகிய நான்மறையின் ஒலிகளைக் கேட்டு அல்லது கோழியின் ஒலிகேட்டு எழார் என்று பரிபாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

          துணைவரைப் பிரிந்தவருக்குக் குடுமிக்கோழி (சேவல்) கூவும் விடியற் காலமே மாலைப் பொழுதாகும் என்று குறுந்தொகை -234 பாடலிலும், வளர்ப்பு விலங்காக்க் கோழியை வளர்த்துள்ளனர் என்பது சங்கப் பாடல்களில் வரும் மனையுறை கோழி அகம்-122 பாடலிலும், உமணரால் கட்டப்பட்ட கோழி கிடக்கும் கூடு பெரும்.51-53 பாடல்களின் மூலமும் அறியலாம்.

          கூகைக் கோழி என்பதற்குப் புறநானூறு உரையில் காட்டுக்கோழி என உரை கூறப்பட்டுள்ளது. ”கானக்கோழி கதிர்குத்த, மனைக்கோழி தினை கவர (பொரு.222,223) காட்டில் உள்ள கோழிகள் நெற்கதிரைத் தின்னவும், எனப் பொருநராற்றுப்படையில் வருகின்றன. சிலப்பதிகாரத்தில் வரும் கான வாரணம் (சிலம்பு.13:37) என்னும் சொல்லிற்குக் காட்டுக் கோழி என்றே அடியார்க்குநல்லார் உரைப் பொருள் சுட்டியுள்ளது. ”மனையுறை கோழி மறனுடைச் சேவற், போர்புரி யெருத்தம் போல” என்னும் அகநானூற்றில் வரும் அடி வீட்டில் வளர்க்கப்படும்  போர் செய்யக் கூடிய ஆண்கோழி அல்லது சேவல் என்னும் பதிவையும் கொண்டு சங்க காலத்தில் வளர்ப்பு விலங்காகவும் இருந்தது என்னும் பதிவுகள் காணப்படுகின்றன.

கோழியின் தன்மைகள்

          சேவற்கோழியின் தாடி தொங்குவது போன்று யாமரத்தின் கவைத்த ஒளி பொருந்திய தளிர்விளங்கும். கூரிய அலகினையும், தீப்பிழம்பு தளிர்த்தாற் போன்று அழகாகச் செறிந்த மயிரினையும் உடையது மனையுறை கோழி. அக்கோழி போர் புரியும்போது அதன் கழுத்து மயிர்கள் செறிந்து காணப்படுவது போலச் செம்முருக்கின் பூங்கொத்து காணப்படுகிறது. மணிநிற மஞ்ஞை, மணிமயில் என்னும் சொற்களாலும் கோழி அழைக்கப்பட்டுள்ளது. மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடி (பரி.17-48) எனப் பரிபாடலிலும், மணிமயில் உயரிய மாறா வென்றி (புறம்.56-57) எனப் புறநானூற்றிலும் இடம்பெற்றுள்ளன. மணிநிறம் என்பது கருமை என்னும் பொருளினையும் மணிமயில் என்பது சிறிய கோழி என்னும் பொருளினையும் விளக்குவதாக அமைந்துள்ளது.

தமிழர்களின் சடங்குகளில் கோழி

·        தமிழர் சடங்குகளில் கோழி இடம் பெற்றுள்ளது. கோழி அறுத்தலும், கோழியை நேர்ந்து விடுதலும் சிறுதெய்வ வழிபாட்டில் இன்றியமையாத நேரத்திக் கடனாகும்.

·        கூவும் கோழி மட்டுமே அறுப்பதற்குக் கொடுக்கப்படுகிறது.

·        ஊர்ப்புறங்களில் பொருள்களை அல்லது பணத்தைத் திருடியவனைப் பழிவாங்குவதற்குச் சிறுதெய்வக் கோயிலில் கோழிகுத்துதல் என்னும் நிகழ்வு திருடியவனின் பெயரைச் சொல்லி கோழியைச் சூலத்தில் குத்தி வேண்டிக் கொள்கின்றனர்.

· இரவில் முட்டையிடும் சாமக்கோழி வீட்டிற்கு ஆகாது என்று இன்றளவும் மக்களிடம் வழக்கில் உள்ளது.

·        சனிக்கிழமை இறந்தோரின் பாடையில் கோழி கட்டப்படுகிறது.

 துணை நின்ற நூல்

1. பண்டைத் தமிழ்ப் பனுவல்கள் - கோ.சதீஸ், நீயு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை 600 098.

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...