Skip to main content

வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை (புத்தக மதிப்புரை)

  வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ( புத்தக மதிப்புரை )               புத்தக மதிப்புரையில் முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் எழுதிய ‘ வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை ’ என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்நூல்   2023 - ஆம் ஆண்டு ,   குமரி மாவட்டம் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 205,   விலை 1 50 ரூபாய்.             முனைவர் சி . இலட்சுமணன் அவர்கள் , தமிழ்ச் செம்மொழி வரலாற்று ஆய்வு மையத்தின் விடிவெள்ளி ; சுயமுன்னேற்றத்திற்கான நூல்களை எழுதி வருகின்ற சமுதாயச் சிற்பி ; தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தி வருகிறார் . பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .             நூலாசிரியர் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓலைச் சுவடித் துறையின் தலைவராக ,   பணியாற்றிய பொழுது பல்வேறு ஊர்களுக்குப் பயணம் ...

புலிப்பல் தாலி

 

புலிப்பல் தாலி

‘புலியின் பல்லைக் கோர்த்து செய்த கழுத்தணி எனவும் பொன்னுடைத் தாலி’ என்றும், ‘பொன்னோடு புலிப்பற் கோத்த புலம்பு மணித் தாலி’ என்றும் அழைக்கப்பட்டது. வீரத்தின் விளைவாக பெறும் புலிப்பல்லைப் பச்சிளம் சிறுவர்கட்கு அணிவித்தமை, வீரத்தை இளமையிலேயே உணரும் உணர்வைத் தூண்டுதல் என்ற வகையினிடம் பெற்றிருந்தது. சிறுவர், சிறுமியர் இருபாலருக்கும் புலிப்பல் தாலி அணிவிக்கும் வழக்கம் பண்டை குறிஞ்சி நில மக்களாகிய கானவரிடையே நிலவிய ஒன்று.

புலிப்பல் பெற்ற முறையைச் சிலப்பதிகாரம்,

”மறங்கொள்வயப் புலி வாய்பிளந்து பெற்று

 மாலை வென் பற்றாலி நிரை பூட்டி”

என்று வீரமிக்க வலிய புலியை கிழித்துப் பெற்றமை விளக்கப்பட்டுள்ளது. வேட்டையாடிப் பெற்ற  புலிப்பல் வீரத்திலன் விளைவால் கிடைத்தப் பொருள். எனவே வீரத்தின் அறிகுறியாகத் தம் மக்களுக்கு அணிவித்தவர் என்பதும் புலனாகிறது. பெரியபுராணத்தில்,

          ”ஆண்டெதிர் அணைந்து செல்ல விடும்

                                                அடித் தளர்வு நீங்கிப்

         பூண்டிதழ் சிறு புன்குஞ்சிப் புலியுதிர்ச் சுட்டி சாத்தி

         மூண்டெழு சினத்துச் செங்கண் முளவு முள் அரிந்துகோத்த

         நாண்டரும் எயிற்றித் தாலி நலங்கினர் மார்பில் தூங்க”(பெரிய.10:20)

எனக் கூறப்படுதலால் அறியலாம். மேலும் குழந்தைக்கு ஓராண்டாக இருக்கையில், தளர்நடைப் பருவத்தில் அணியப்பெற்ற அணி இது என்பதும் அறியமுடிகிறது.

இவற்றைத் தவிர பண்மணிச் சதங்கையொலிக்கும் அரைநாண் அணிவித்தனர். யானை மருப்பினால் ஆன தண்டையைக் காலிலே ஒலிக்கப் பூட்டினர். காப்புக் கலன்கள் என இவ்வணிகள் அணியப் பெற்றிருந்தமை சுட்டப்படுகிறது. இதனை,

”பாசொளி மணி யோடார்த்த பன்மணிச் சதங்கை ஏங்கக்

காசொடு தொடுத்த காப்பு கலன்புனை

                                                அரைஞாண் சேர்த்தித்

         தேசுடை மருப்பில் தண்டை செறிமணிக் குதம்பை மின்ன

        மாசறு கோலங் காட்டி மறு கிடையாறும் நாளில்” (பெரிய.10:20)

எனச் சுட்டுவார். சதங்கை, காசொடு தொடுத்த காப்புக் கலன்கள் இணைத்துக் கோர்த்த அரைநாண் குழந்தையின் இடையில் கட்டப்படுதல் கண்ணேறு படாமல் குழந்தையைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கைச் சார்ந்த செயலாக இடம் பெற்றிருந்த நிலையையும் உணர முடிகிறது.

          மறக்குல மகளிரும் புலிப்பல் தாலியை அணிந்த செய்தி அறியப்படுகிறது. கண்ணப்பரின் தாய், தந்தை இருவரும் மறவர் குல மரபு பேணிப் புலிப்பல் தாலியை, அணிந்திருந்தனர். வீரத்தின் விளைவாகப் பெற்ற பொருளை, வீரத்தைப் பறைச்சாற்றும் நிலையிலும், மங்கலச் சின்னமாகவும் கழுத்தில் அணிந்திருக்கலாம் என்று எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.

          புலிப்பல் தாலியை. அழகுக்காக அணியப்பட்டது என்பதை விட நம்பிக்கையின் அடிப்படையில் மனிதன் பிற இயற்கைக் கூறுகளின் பாதிப்பிலிருந்து தன்னைப் பாதுக்காத்துக் கொள்ள கைக்கொண்ட காப்பிணியாகக் கருதலாம். கலைக் களஞ்சியம் – தொகுப்பு 12.ப.1030

        காப்பியங்களில் மறவர் குலம் சார்ந்த சிறார்கள் அணிந்த குறிப்பு அமைகிறது. தொடர்ந்து வேடர் குலத்தைச் சார்ந்த திண்ணனார் அணிந்த குறிப்புப் பெரியபுராணத்தில் இடம் பெறுகிறது. எனவே குறிப்பிட்ட இனத்தார் தாங்கள் அரிதிற் பெற்ற பொருளைக் கொண்டு தங்கள் குழந்தைகள் புலிப்பல்லை பார்க்கும்போது, வீர உணர்வைப் பெறுவர் என்ற நம்பிக்கை அடிப்படையிலும் இதனை அணிவித்தனர் என்று இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது.

       புலித்தோல், புலிநகம், புலிப்பல் ஆகியவை மக்களால் பயன்படுத்தப்படுவதை இன்றும் வழக்கில் காண்கிறோம். இன்று இருபாலரும் புலிநகம், புலிப்பல் அணியும் நிலை அழகு கருதியே பெரும்பாலும் அமைகிறது.

பார்வை நூல்

1.  காப்பியங்களில் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் – முனைவர் புலவர் சீ.வசந்தா, எம்.ஏ., எம்.எட்., ஸ்ரீவித்யா பதிப்பகம், சென்னை -600 082.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...